புதுடெல்லி:அன்னா ஹஸாரேயின் ஹிந்துத்துவா முகமூடி மீண்டும் கழன்று விழுந்துள்ளது. அன்னா ஹஸாரேயின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு உணவை சமைத்து வழங்கியது ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பான விசுவஹிந்து பரிஷத்தின் உறுப்பினர்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
ராம்லீலா மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டோருக்கு உணவை சமைத்து பரிமாறியது தங்களது தொண்டர்கள்தாம் என்பதை வி.ஹெச்.பியின் சர்வதேச பொதுச்செயலாளர் சம்பத்தி ரவி கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ராம்லீலா மைதானத்தில் வலுவான லோக்பால் மசோதாவிற்காக போராட்டம் நடத்திய ஹஸாரேயின் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்களுக்கு தாராளமாக உணவு பரிமாறப்பட்டது.
மூன்று நேர உணவு விநியோகத்திற்கு நூற்றுக்கணக்கான வாலண்டியர்கள் பங்கேற்றனர். தாராளமாக பரிமாறப்பட்ட உணவு மக்கள் அளித்த நன்கொடை மூலமாகும் என்று அப்பொழுது கிரண்பேடி கூறியிருந்தார்.
ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏ.பி.வி.பி ஆகியன முன்னரே அன்னாவின் போராட்டத்திற்கு பூரண ஆதரவை அளித்திருந்தன. அன்னா குழுவினரின் இந்தியா எகைன்ஸ்ட் கரப்ஷன் என்ற அமைப்பை வழிநடத்துவோரில் பெரும்பாலோர் ஏ.பி.வி.பி தலைவர்கள் ஆவர்.