நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 4 ஏப்ரல், 2012

மின் கட்டணம் குறைப்பு: பேரவையில் ஜெ. அறிவிப்பு

சென்னை :- சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:-
 
நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் பயணிக்கும் வகையில், பொது நலன் பாதுகாக்கப் படுவதையும், சமூக நலன் உச்ச நிலைக்கு கொண்டு செல்லப்படுவதையும், லாபத்தை குறிக்கோளாகக் கொள்ளாமல் மக்களுக்கான சேவை நியாயமான விலையில் கிடைக்கச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டு செயலாற்றுபவைதான் பொதுத்துறை நிறுவனங்கள். இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான மின்சாரத்தை தங்கு தடையின்றி அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனம்தான் தமிழ்நாடு மின்சார வாரியம். எனது முந்தைய ஆட்சிக்காலத்தில், அதாவது 2001-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரையிலான ஆட்சிக்காலத்தில் மின் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமளிக்காத வகையில், இன்னும் சொல்லப்போனால் உபரி மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு அளிக்கும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயல்பாடு நன்றாக இருந்தது.
 
தமிழ்நாட்டில் உள்ள அனல்மின் நிலையங்களான தூத்துக்குடி, மேட்டூர் மற்றும் வட சென்னை அனல் மின் நிலையங்கள் அவற்றின் செம்மையான செயல்பாடுகளுக்காக 2001- 2002 முதல் 2005-2006 வரை பல்வேறு விருதுகளை தொடர்ச்சியாக பெற்று வந்தன. காற்றாலை மின் உற்பத்தியிலும் தமிழ்நாடு முன்னிலை வகித்து வந்தது. இது மட்டுமல்லாமல் 2,518 மெகாவாட் அளவுக்கு மின் நிறுவு திறன் அதிகரிக்கப்பட்டது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதி நிர்வாகமும் சீராக இருந்தது. ஆனால், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 8,000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய்க்கும் செலவினங்களுக்கும் இடையே நிகர இடைவெளி ஏற்பட்டது.
 
இதன் விளைவாக 31.3.2012 நிலவரப்படி தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தொடர் இழப்பு 50,000 கோடி ரூபாயையும், வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன் 45,000 கோடி ரூபாயையும் தாண்டியுள்ளது. இது தவிர, தனியார் மின் உற்பத்தியாளர் மற்றும் இதர ஒப்பந்ததாரர்களுக்கான நிலுவைத் தொகை 11,000 கோடி ரூபாய் அளவிற்கு உள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாடு மின்சார வாரியம் அளவுக்கு மீறிய கடன் சுமைக்கு ஆளாகி வாங்கிய கடனையும் வட்டியையும் திரும்பச் செலுத்துவதற்கே கடன் வாங்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில், மதிப்பீட்டு நிறுவனங்கள் மின்சார வாரியத்தின் மதிப்பை குறைத்துவிட்டதால், வெளிச்சந்தையில் இருந்தும் கடன் பெற வழியில்லை. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கடன் அளிக்கக் கூடாது என பாரத ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
 
இந்தச் சூழ்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட எனது தலைமையிலான அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக பல ஆண்டு இடைவெளிக்குப் பின் அனல் மின் நிலையங்கள் புதிய சாதனைகளை ஏற்படுத்தும் விதமாக மிகச் செம்மையாக செயல்பட்டு வருகின்றன. இதே போன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின் இழப்பு விகிதமும், குறைக்கப்பட்டுள்ளது. அகில இந்திய சராசரி மின் இழப்பான 27 விழுக்காட்டினை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டின் மின் இழப்பு 18 விழுக்காடு என்ற அளவிலேயே உள்ளது.
 
நிதி உதவியைப் பொறுத்த வரையில் 2011-12 ஆம் ஆண்டுக்கான மானியத் தொகையாக 2,058.19 கோடி ரூபாயை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கியதுடன் பங்கு மூலதனமாக 4,100 கோடி ரூபாயையும் ஆக 1,455.16 கோடி ரூபாயையும், ஆக மொத்தம் ஒரே ஆண்டில் இதுவரை வழங்கப்படாத அளவுக்கு 7913.45 கோடி ரூபாயை எனது தலைமையிலான அரசு வழங்கியுள்ளது. 2012-13 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மானியமாக 3,068.78 கோடி ரூபாயும், புதிய மின் திட்டங்களுக்கான பங்கு மூலதன உதவியாக 1,500 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
இது தவிர, மின்சார சேமிப்பை ஊக்குவிக்கவும், மின்சாரத்தை கொண்டு செல்வதிலும், விநியோகிப்பதிலும் ஏற்படும் இழப்புகளை மேலும் குறைக்கவும், மின் பகிர்மான கட்டமைப்பை வலுப்படுத்தவும், மின் திருட்டைக் கட்டுப்படுத்தவும், சூரிய ஒளி மின்சக்தி திட்டங்கள், காற்றலை திட்டங்கள், பயோமாஸ் மின் திட்டங்கள் ஆகியவற்றை ஊக்குவிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களை விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் புதிய திட்டங்களை மாநில அரசு மூலமாகவோ அல்லது கூட்டு முயற்சிகள் மூலமாகவோ தொடங்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
 
பாரத மிகுமின் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்துவதாக இருந்த 1600 மெகாவாட் உடன்குடி உயர் அழுத்த நிலை அனல் மின் திட்டம் நான்கு ஆண்டுகளாக தொடங்கப்படாத நிலையில் இருந்ததால் அத்திட்டத்தை 8000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில அரசின் திட்டமாகவே செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். உற்பத்தி செலவு மற்றும் விநியோக வருவாய்க்கு இடையே உள்ள இடைவெளியை ஈடுசெய்யும் வகையில், 9,741 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் ஏற்படும் வகையில், தற்போதுள்ள மின்சார கட்டணத்தை மாற்றக்கோரி தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது.
 
இந்த விண்ணப்பத்தின் மீது நுகர்வோரின் கருத்துகளை கோரி சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் 'கருத்துக் கேட்பு' கூட்டங்களையும், மாநில ஆலோசனைக்குழு கூட்டத்தையும் நடத்தி பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும், ஆலோசனைகளையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பெற்றது. மின் கட்டண, விகித மாற்றம் குறித்த தனது ஆணையை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 30.3.2012 அன்று வெளியிட்டது. இதன்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு, 7,874 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும். இருப்பினும், இந்தக் கட்டண உயர்வில் 1,118.44 கோடி ரூபாயை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மானியமாக வழங்க எனது தலைமையிலான அரசு ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது.
 
இதன் அடிப்படையில் தமிழக அரசு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்க வேண்டிய மொத்த மானியத்தொகை ஆண்டொன்றிற்கு 3554.16 கோடி ரூபாய் ஆகும். தமிழக அரசின் இதுபோன்ற மக்கள் நலம் காக்கும் நடவடிக்கையின் மூலம் ஏழை, எளிய மக்கள் அடையும் பயன்களை நான் இங்கே எடுத்துக் கூற கடமைப்பட்டிருக்கிறேன்.
 
1. குடிசைகளுக்கான மின் கட்டணத்தை யூனிட் ஒன்றிற்கு 2 ரூபாய் 50 பைசா என்று கணக்கிடப்பட்டு, மாதம் ஒன்றுக்கு கட்டணம் 60 ரூபாய் என்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ளது. இதனை தமிழக அரசே முழுமையாக ஏற்றுக்கொள்கிறது. இதன் மூலம் 14 லட்சம் நுகர்வோர் பயன்பெறுவர்.
 
2. விவசாயத்திற்கான மின் கட்டணத்தை குதிரைத் திறன் ஒன்றிற்கு ஆண்டொன்றுக்கு 250 ரூபாயிலிருந்து 1750 ரூபாயாக மாற்றி தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ளும். இதன் மூலம் விவசாயிகள் மின் கட்டணம் ஏதும் செலுத்தாமலேயே மின்சாரத்தை தொடர்ந்து பெற்று வருவார்கள்.
 
3. இரு மாதங்களில் 100 யூனிட்டுகள் வரை உபயோகப்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்த விலையான யூனிட் ஒன்றிற்கு 2 ரூபாய் 60 பைசாவில், 1 ரூபாய் 50 பைசாவை தமிழக அரசு மானியமாக அளிக்கும் என ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே பயனீட்டாளர்கள் செலுத்த வேண்டிய தொகை யூனிட் ஒன்றுக்கு 1 ரூபாய் 10 பைசா மட்டுமே.
 
4. இதே போன்று, இரு மாதங்களில் 200 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் நிர்ணயித்த விலையான யூனிட் ஒன்றிற்கு 2 ரூபாய் 80 பைசாவில், 1 ரூபாயை தமிழக அரசு மானியமாக வழங்க ஒப்புக் கொண்டுள்ளதால் பயனீட்டாளர்கள் செலுத்த வேண்டிய தொகை யூனிட் ஒன்றுக்கு 1 ரூபாய் 80 பைசா மட்டுமே.
 
5. இரு மாதங்களில் 500 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் வீட்டு மின் பயனீட்டாளர்களுக்கு, 201 முதல் 500 யூனிட்டுகளுக்கான மின் கட்டணத்தில், யூனிட் ஒன்றுக்கு 50 காசு மானியத்தை தமிழக அரசு வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.
 
6. வழிபாட்டுத் தலங்கள், விசைத்தறிகள் ஆகியவற்றிற்கான மானியங்களும் தொடர்ந்து அளிக்கப்படும்.
 
7. இவையன்றி, 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு அரசு தனியே மானியம் வழங்கவில்லை என்றாலும், மின் உற்பத்தி செலவை விட குறைவான கட்டணமே அவர்களுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட இந்த கட்டண உயர்விற்கு பின்னரும், வெளி மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் மின் கட்டணம் குறைவாகவே உள்ளது.
 
உதாரணமாக கர்நாடகாவில் இரண்டு மாதங்களில் 100 யூனிட் வரை உபயோகிப்பவர்கள் யூனிட் ஒன்றிற்கு சராசரியாக 2 ரூபாய் 59 காசும், ஆந்திராவில் 2 ரூபாய் 3 காசும், கேரளாவில் 1 ரூபாய் 30 காசும், மேற்கு வங்காளத்தில் 3 ரூபாய் 55 காசும், மகாராஷ்டிராவில் 2 ரூபாய் 47 காசும், குஜராத்தில் 2 ரூபாய் 55 காசும், உத்திர பிரதேசத்தில் 3 ரூபாய் 45 காசும் செலுத்தி வருகிறார்கள். ஆனால் இந்த கட்டண மாற்றத்திற்குப் பிறகும் தமிழ்நாட்டில் 100 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோர் செலுத்த வேண்டிய கட்டணம் யூனிட் ஒன்றிற்கு 1 ரூபாய் 10 காசு மட்டுமே.
 
இதே போன்று, இரண்டு மாதங்களில் 200 யூனிட்கள் வரை உபயோகிப்பவர்களை ஒப்பிடும்போது, ஆந்திராவில் யூனிட் ஒன்றிற்கு சராசரியாக 2 ரூபாய் 81 காசும், கர்நாடகாவில் 2 ரூபாய் 92 காசும், மேற்கு வங்காளத்தில் 4 ரூபாய் 4 காசும், மகாராஷ்டிராவில் 2 ரூபாய் 47 காசும், குஜராத்தில் 2 ரூபாய் 85 காசும்,  உத்திர பிரதேசத்தில் 3 ரூபாய் 45 காசும் செலுத்தி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் புதிய கட்டண விகிதப்படி, 200 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோர் செலுத்த வேண்டிய கட்டணம் யூனிட் ஒன்றிற்கு 1 ரூபாய் 80 காசு மட்டுமே.
 
எனினும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டணங்கள் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது என்றும், எனவே கட்டணங்களை குறைக்க வேண்டும் என்றும் பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் நிர்ணயித்துள்ள கட்டணங்களை குறைக்க தமிழக அரசுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்றாலும், ஏழை, எளிய மக்களின் சுமையை மேலும் குறைக்கும் வண்ணம் வீட்டு மின் பயனீட்டாளர்கள் செலுத்த வேண்டிய கட்டணங்களை குறைக்கவும், அதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கூடுதல் மானியம் வழங்கி அந்தச் சுமையை தமிழக அரசே ஏற்றுக்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
இதன்படி,
 
1. இரு மாதங்களில் 100 யூனிட்டுகள் வரை உபயோகப்படுத்தும் வீட்டு மின் பயனீட்டாளர்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணம் யூனிட் ஒன்றிற்கு 1 ரூபாய் 10 பைசாவில் இருந்து 1 ரூபாயாக குறைக்கப்படும்.
 
2. இரு மாதங்களில் 200 யூனிட்டுகள் வரை உபயோகப்படுத்தும் வீட்டு மின் பயனீட்டாளர்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணம் யூனிட் ஒன்றிற்கு 1 ரூபாய் 80 பைசாவில் இருந்து 1 ரூபாய் 50 பைசாவாக குறைக்கப்படும்.
 
3. இரு மாதங்களில் 500 யூனிட் வரை உபயோகப்படுத்தும் வீட்டு மின் பயனீட்டாளர்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணம், முதல் 200 யூனிட்டுகளுக்கு 3 ரூபாயிலிருந்து 2 ரூபாய் என்றும், 201 யூனிட் முதல் 500 யூனிட் வரையிலான கட்டணம் 3 ரூபாய் 50 பைசாவிலிருந்து 3 ரூபாய் என்றும் குறைக்கப்படும்.
 
எனது தலைமையிலான அரசின் இந்த மக்கள் நலன் காக்கும் நடவடிக்கை மூலம், 740 கோடி ரூபாய் மானியத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு எனது தலைமையிலான அரசு கூடுதலாக வழங்கும். இதனையடுத்து, இந்த ஆண்டு வழங்கப்பட வேண்டிய மானியத் தொகை மிக உயர் அளவான 4,294.16 கோடி ரூபாயாக இருக்கும் என்பதையும், இதன் மூலம் 1 கோடியே 50 லட்சம் குடும்பங்கள் பயனடையும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.