லக்னோ : கடந்த மாதம் மூத்த முஸ்லிம் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜாவேத் உஸ்மானி உத்தரபிரதேச மாநில தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று பாப்ரி மஸ்ஜித் நடவடிக்கை குழுவின்(BMAC) கன்வீனர் ஸஃபர்யாப் ஜீலானி உ.பி மாநில கூடுதல் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜாவேத் உஸ்மானியை தொடர்ந்து ஜீலானி உயர் அதிகாரப் பதவியில் நியமிக்கப்பட்டிருப்பது பா.ஜ.கவுக்கு வயிற்றெரிச்சலை கடுமையாக கிளப்பியுள்ளது.
கடந்த மாதம் மத்திய திட்டக்கமிஷன் செயலாளராக பதவி வகித்த 1978 ஐ.ஏ.எஸ் பேட்சை சார்ந்த ஜாவேத் உஸ்மானி உ.பி. மாநில தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். உ.பி மாநிலத்தில் முதன் முதலாக முஸ்லிம் ஒருவர் தலைமைச் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில் ஜாவேத் உஸ்மானி முஸ்லிம் என்ற காரணத்தினால் மட்டுமல்லாமல் சிறந்த கல்வியாளர் மற்றும் முன்பு உயர் பதவிகளை வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1978 சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடத்தை பிடித்தவர் ஜாவேத் உஸ்மானி. அஹ்மதாபாத் ஐ.ஐ.எம்மில் 1976-ஆம் ஆண்டு எம்.பி.ஏ பட்டத்தைப் பெற்றார். 1991-ஆம் ஆண்டு லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்ணாமிக்ஸில் சோசியல் பாலிசி அண்ட் ப்ளானிங் பாடத்தில் எம்.எஸ்.ஸி பட்டம் பெற்றார். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றியவர். 1993 மற்றும் 1995-ஆம் ஆண்டுகளில் முலாயம் சிங்கிற்கு செயலாளராக பணியாற்றினார். மத்திய திட்டக்கமிஷன் செயலாளராகவும் பணியாற்றி வந்தார்.
ஜாவேத் உஸ்மானியை தொடர்ந்து பாப்ரி மஸ்ஜித் நடவடிக்கை குழுவின் ஸஃபர்யாப் ஜீலானியை நேற்று முன்தினம்அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரலாக அகிலேஷ் யாதவ் அரசு நியமித்துள்ளது. ஜீலானி சட்டப் படிப்பில் மாஸ்டர் டிகிரியை பெற்றவர். பல ஆண்டுகளாக சட்டத்துறையில் தீவிரமாக ஈடுபட்டு வருபவர்.
1992 வரலாற்றுச் சிறப்புமிக்க இறையில்லம் பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் முக்கிய பங்காற்றிவருபவர். இவரது சொந்த முயற்சியில் 1986-ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சியின் மூத்த செல்வாக்குப் பெற்ற தலைவரான ஆஸம்கானின் உதவியுடன் பாப்ரி மஸ்ஜித் நடவடிக்கை குழுவை உருவாக்கி பாப்ரி மஸ்ஜித் வழக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
தனது நியமனம் குறித்து ஜீலானி கூறுகையில், “எனக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பதவியின் பொறுப்புக்கள் மற்றும் தீவிரத்தன்மையைக் குறித்து நன்றாக அறிந்தவன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜாவேத் உஸ்மானியைத் தொடர்ந்து ஜீலானி உ.பி மாநில உயர் அதிகாரப் பதவியில் நியமிக்கப்பட்டிருப்பது ஹிந்துத்துவா வகுப்புவாதத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் பாரதீய ஜனதா கட்சிக்கு வயிற்றெரிச்சலை கிளப்பியுள்ளது.
ஜீலானியின் நியமனம் குறித்து உ.பி. மாநில பா.ஜ.க தலைவர் சூர்ய பிரதாப்ஸாஹி கூறுகையில், “ஜீலானி உடனடியாக இப்பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். இவர் ஒரு சமுதாயத்திற்கு ஆதரவாக பாரபட்சமாக நடந்துகொள்வார். அயோத்தியா வழக்கில் அரசின் பார்வையை இவரது நியமனம் பாதிப்படையச் செய்யும். உ.பி அரசு முஸ்லிம்களை தாஜா செய்ய நினைக்கிறது. மேலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதி அளித்திருப்பதுடன், ஏழையான முஸ்லிம் மாணவிகளுக்கு ரூ.30 ஆயிரம் தருவதாகவும் வாக்குறுதியளித்துள்ளது. ஜீலானியின் நியமனம் அகிலேஷ் யாதவ் அரசின் வீழ்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.” என்று கூறியுள்ளார்.