சரயாவோ: 2-வது உலகப்போருக்கு பிறகு ஐரோப்பா கண்ட மிகப்பெரிய கூட்டுப் படுகொலையான ஸ்ரெப்னிகா கூட்டுப் படுகொலையின் 17-வது நினைவு தினத்தை போஸ்னிய மக்கள் நினைவுக் கூர்ந்தனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் ஸ்ரெப்னிகா நகரத்தில் நினைவுதின நிகழ்ச்சியில் கலந்துகொள்ள திரண்டனர். போஸ்னியாவில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் துயர நிகழ்வை நினைவுக்கூறும் பொருட்டு அரைக் கம்பத்தில் கொடிகள் பறக்கவிடப்பட்டன.
ஐ.நா பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்த ஸ்ரெப்னிகா முஸ்லிம் நகரத்தில் ஐ.நா அமைதிப் படையினரின் முன்னிலையில் இனவெறியன் ராட்கோ மிலாடிச்சின் தலைமையில் கொடூர இனப்படுகொலை அரங்கேறியது.
மிலாடிச் உள்ளிட்ட கூட்டுப் படுகொலைக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொண்டுள்ளனர்.
இம்முறை துயர வருடாந்திர நினைவு தினத்தையொட்டி 520 பேரின் உடல்கள் அடக்கஸ்தலங்களில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு மீண்டும் அடக்கம் செய்யப்படுகின்றன. டி.என்.ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்ட உடல்கள் மீண்டும் அடக்கம் செய்யப்படுகின்றன.
ஸ்ரெப்னிகாவில் பல்வேறு கல்லறைகளை மீண்டும் திறந்து அடையாளம் காணப்படாத அடக்கம் செய்யப்பட்ட உடல்களை கண்டுபிடித்து மீண்டும் அடக்கம் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு துயர நிகழ்வின் நினைவு தினத்திலும் இவ்வாறு உடல்கள் கல்லறைகளில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு மீண்டும் அடக்கம் செய்யப்படும். இதுவரை கொலைச் செய்யப்பட்ட 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ளவரை கண்டுபிடிப்பதற்காக கல்லறைகளை பரிசோதிப்பது தொடர்கிறது