புதுடெல்லி: 2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் போது சேதப்படுத்தப்பட்ட மற்றும் அழிக்கப்பட்ட வழிப்பாட்டுத் தலங்கள் குறித்த விபரங்களை தாக்கல் செய்ய குஜராத் மோடி அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று(திங்கள் கிழமை) உத்தரவிட்டுள்ளது. மேலும் இனப் படுகொலையின் போது சேதப்படுத்தப்பட்ட வழிபாட்டு தலங்களை சீரமைக்கவும் மீண்டும் கட்டவும் எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதையும் மாநில அரசு மதிப்பிட வேண்டும் என்று நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது.
மேலும் சேதப்படுத்தப்பட்ட 500 வழிபாட்டுத் தலங்களுக்கும் இழப்பீடு தருமாறும் குஜராத் அரசுக்கு கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து குஜராத் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் நரேந்திர மோடி அரசு மனுத் தாக்கல் செய்திருந்தது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவில், குஜராத் கலவரத்தின் போது இடித்து தரை மட்டமாக்கப்பட்ட மற்றும் சேதப்படுத்தப்படட வழிபாட்டு தலங்கள் பற்றிய விவரங்களை நீதிமன்றத்திடம் அரசு தெரிவிக்க வேண்டும்.
கலவரங்கள் அல்லது இயற்கை சீற்றங்களால் சேதமடைந்த வழிபாட்டு தலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமா என்பதை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்யும்.
இந்த வழக்கு விசாரணை நடந்தபோது குஜராத் அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழிபாட்டுத் தலங்களை சீரமைக்க அரசின் நிதியை செலவிட முடியாது என்றார்.
ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வெள்ளத்தாலோ அல்லது நிலநடுக்கத்தாலே ஒரு வீடு சேதமடைந்தால் அதற்கு நீங்கள் நிவாரணம் தருகிறீர்கள். அப்படி இருக்கையில் வழிபாட்டுத் தலத்துக்கு ஏன் தர முடியாது என்று கேட்ட நீதிபதிகள், கலவரங்கள் அல்லது இயற்கை சீற்றங்களால் சேதமடைந்த வழிபாட்டு தலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து நாங்கள் ஆய்வுசெய்வோம் என்று அறிவித்தனர்.
இந்த வழக்கின் விசாரணையை வருகிற ஜூலை மாதம் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.