ஆக. 17ல் மாநிலம் தழுவிய போராட்டம் பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா அறிவிப்பு
நெல்லையில் சுதந்திரதின அணிவகுப்பிற்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து 17ம்தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடக்கும் என பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா மாநிலத்தலைவர் இஸ்மாயில் தெரிவித்தார்.நெல்லையில் பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா மாநிலத்தலைவர் இஸ்மாயில் கூறியதாவது:65வது சுதந்திரதினத்தையொட்டி நெல்லையில் அணிவகுப்பு நடத்த திட்டமிட்டிருந்தோம். வேண்டும் என்றே காலதாமதம் செய்து கோர்ட்டை அணுக வாய்ப்பு அளிக்காமல் போலீஸ் துறை அனுமதி மறுத்துள்ளது.
சுதந்திரப்போராட்டத்தில் பங்கு பெற்று வரலாற்றில் இடம் பெற்றவர்கள் முஸ்லிம்கள்.போராடி பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்கவும், முன்னோர்களின் தியாகத்தை நினைவு கூர்வதற்கும் ஆண்டுதோறும் அணிவகுப்பு நடத்திவருகிறோம். இந்த ஆண்டு அணிவகுப்பிற்கு தடை விதிக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்.கடந்த அரசு முஸ்லிம்களின் சுதந்திரதின அணிவகுப்பு மைதானத்தில் நடத்த அனுமதியளித்தது. தற்போதைய அரசு முஸ்லிம்களின் உரிமைகள் மீறப்படுவதை கண்டுகொள்ளவில்லை. களக்காடு, ஏர்வாடி, கடையநல்லூர், மேலப்பாளையத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டதை கண்டிக்கிறோம். வரும் 17ம்தேதி மாநிலம் தழுவிய தொடர் போராட்டம் நடக்கும்.இவ்வாறு மாநிலத்தலைவர் இஸ்மாயில் தெரிவித்தார்.மாநில செயலாளர் பைஸல் அகமது, மாவட்டத்தலைவர் அன்வர்முகைதீன், செயலாளர் ஹைதர்அலி உடன் இருந்தனர்.