முஸ்லிம்களுக்கு மட்டும் திட்டங்கள் பிரகடனப்படுத்துவதற்கு எதிராக சிறுபான்மை அமைச்சகம்
புதுடெல்லி: முஸ்லிம்களுக்கு மட்டும் வளர்ச்சி திட்டங்களை வெளியிடுவது அரசுக்கு நீதிமன்றத்திற்கு செல்லவேண்டிய நிலைமை ஏற்படும் என மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகம் தேசிய ஆலோசனை குழுவிடம் புகார் அளித்துள்ளது.
மதத்தின் பெயரிலான பாரபட்சத்தின் பெயரால் அரசு சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வதாக அமைச்சகம் தேசிய ஆலோசனைக் குழுவிடம் தெரிவித்துள்ளது.
முஸ்லிம்களுக்கு மட்டுமான திட்டங்கள் தீட்டியதாக காட்டி மும்பை உயர்நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளில் அரசு வெற்றிப் பெற்றுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல் அரசியல் சட்டத்தின்படி தேசிய சிறுபான்மை இனங்களான ஐந்து பிரிவினருக்கான பன்முக வளர்ச்சி திட்டங்களை அரசு தீட்டியது என நீதிமன்றத்தை புரியவைத்ததன் மூலமே இவ்வழக்குகளில் வெற்றி பெற முடிந்தது என அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
இந்தியாவில் முஸ்லிம்களின் சமூக-பொருளாதார ஒடுக்கப்பட்ட சூழலை குறித்து ஆராய்ந்த சச்சார் கமிட்டியின் அறிக்கையில் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக மேலும் இரண்டு வழக்குகளை அரசு எதிர்கொள்வதாக அமைச்சகம் சோனியா காந்தி தலைமையிலான தேசிய ஆலோசனை குழுவிற்கு தெரிவித்துள்ளது.
சிறுபான்மை என்ற பதத்தையே அரசியல் சட்டம் கூறுவதால் சிறுபான்மை நலத்திட்டங்களுக்காக ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை கூறுவது சரியல்ல என அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நலத்திட்டங்கள் போதிய அளவில் முஸ்லிம்களுக்கு போய் சேருவதில்லை என செண்டர் ஃபார் இக்யுட்டி ஸ்டடீஸ் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதன் பின்னணியில் தேசிய ஆலோசனை குழுவிற்கு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பல்வேறு நலத்திட்டங்களில் ’சிறுபான்மை’ ’சிறுபான்மை பெரும்பான்மையாக வாழும் மாவட்டம்’ என குறிப்பிட்டதால் முஸ்லிம்களுக்கு போதிய அளவு பயன் கிடைக்கவில்லை என தேசிய ஆலோசனைக்குழு உறுப்பினரான ஹர்ஷ் மந்தர் தயார் செய்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முஸ்லிம்களுக்கான திட்டத்தை அறிவிப்பது அவர்களை மகிழ்விப்பதற்கே என பா.ஜ.க குற்றச்சாட்டுடன் கிளம்பிவிடுமோ என அரசு அஞ்சுவது மூலம் சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்திய இடங்களில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் அறிக்கை கூறுகிறது.
சிறுபான்மையினருக்காக பன்முக வளர்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்திய சில இடங்களில் முஸ்லிம் சமூகத்தினரை விலக்குவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டதாகவும் அறிக்கை கூறுகிறது. ஆனால் திட்டங்களில் ‘முஸ்லிம்களுக்கு’ என குறிப்பிடாமலிருப்பது அவர்களுக்கான ஆதாயங்கள் கிடைப்பதற்கு தடை ஏற்படாது என அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
சிறுபான்மை இனத்தவர்களில் 73 சதவீதமான முஸ்லிம்களுக்கு திட்டங்களிலிருந்து பயன் கிடைக்கிறதா என்பதை உறுதிச்செய்வோம் என அமைச்சகம் அறிவித்துள்ளது.