தமிழகம்:சுதந்திர தினத்தை கொண்டாட அனுமதி மறுப்பு – பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்
நெல்லை : நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் இந்திய சுதந்திர தினமான இன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடைபெறவிருந்த சுதந்திர தின அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ள தமிழக காவல்துறைக்கு அவ்வியக்கத்தின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நெல்லை ப்ரஸ் க்ளப்பில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: “வருகின்ற 65-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுதந்திர தின அணிவகுப்பை நெல்லையில் நடத்த திட்டமிட்டிருந்தது. சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகங்களை நினைவு கூர்ந்திடவும், பெற்ற சுதந்திரத்தை பேணி பாதுகாத்திடவும் சுதந்திர அணிவகுப்பு மற்றும் சுதந்திர தின கொண்டாட்டங்களை பல ஆண்டுகளாக தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தி வருகின்றது. ஆனால் இவ்வருடம் வேண்டுமென்றே காலதாமதம் செய்து, நீதிமன்றத்தை அணுகக்கூட வாய்ப்பு கொடுக்காமல் அனுமதி மறுத்துள்ளது காவல்துறை.
அனைத்து இயக்கங்கள் மற்றும் கட்சிகள் சுதந்திர தினத்தை பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக கொண்டாடி வருகின்றார்கள். இந்திய சுதந்திர போராட்டத்தை துவக்கி வைத்தும், தங்களின் சதவீதத்திற்கு அதிகமான அளவில் சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்றும் இந்திய சுதந்திர வரலாற்றில் நீங்கா இடம் பிடித்துள்ளனர் முஸ்லிம்கள். ஆனால், இப்படி போராடி பெற்ற சுதந்திர இந்தியாவின் நிலையோ, ஊழல், மறைமுக காலனியாதிக்கத்திற்கு வித்திட்டுவரும் வெளியுறவுக்கொள்கை, அராஜக, ஜனநாயக விரோத அடாவடி அரசியல், சமநீதியின்மை போன்ற பல்வேறு தீமைகள் நாட்டில் புரையோடி சுதந்திரத்திற்காக பாடுபட்டு இரத்தம் சிந்திய நமது முன்னோர்களின் தியாகங்களை செல்லாகாசாக்கிவிட்டது. இத்தகைய போராடி பெற்ற சுதந்திரத்தை ஜனநாயகரீதியில் பாதுகாத்திடவும் மற்றும் நமது முன்னோர்களின் தியாகத்தை நினைவு கூர்வதற்காகவுமே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுதந்திர தின அணிவகுப்பை வருடாவருடம் நடத்திவருகின்றது. இப்படி சீரிய சிந்தனையோடு நடத்தப்பட்டு வரும் சுதந்திர தின அணிவகுப்பை தடை செய்திருப்பது துரதிர்ஷ்டவசமானது.
மேலும் காவல்துறை சுதந்திர தின அணிவகுப்பிற்கு அனுமதி மறுப்பதற்கு கையாண்ட முறை கண்டனத்திற்குரியது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள் தொடர்ந்து நெல்லை மாநகர காவல்துறை ஆணையரை சந்தித்து அனுமதி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியபோதும் காவல்துறை திட்டமிட்டே இழுத்தடித்து அனுமதி மறுத்துள்ளது.
கடந்த 2008-ஆம் ஆண்டு மதுரையில் சுதந்திர தின அணிவகுப்பு நடந்தபோது இது போன்று அனுமதி மறுக்கப்பட்டபோது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நீதிமன்றத்தை அணுகியது. நீதிமன்றமும் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கியது. அதேபோன்று இந்த முறையும், நீதிமன்றம் சென்றுவிடக் கூடாது என்கிற தீயநோக்கில் காவல்துறை செயல்பட்டுள்ளதுடன், கடந்த கால தீர்ப்புக்கு எதிராகவும் காவல்துறை செயல்பட்டுள்ளது என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
காவல்துறையின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தையும், சிறுபான்மையினருக்கு எதிராக அவர்களின் உரிமையை மறுத்து செயல்பட்டுவருவதை குறித்தும் நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளோம். எங்களின் நோக்கம் சுதந்திர தினத்தை அமைதியான முறையில் சிறப்பான முறையில் கொண்டாடவேண்டும் என்பதுதான். ஆனால் அரசும் காவல்துறையும் சிறுபான்மையினர் மீது கொண்ட காழ்ப்புணர்வால் அவர்களை வன்முறையாளர்கள் என சித்தரிக்க முயற்சித்தும் சதி செய்தும் வருகின்றனர். அத்தகைய முயற்சி, சதிக்கு நாங்கள் ஒருபோதும் பலியாகமாட்டோம்.
கடந்த கால அரசு இதற்கு முந்தைய ஆண்டுகளில் முஸ்லிம்களின் இந்த சுதந்திர தின அணிவகுப்பு மைதானத்தில் நடத்த அனுமதித்தது. ஆனால் புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசோ சிறுபான்மை முஸ்லிம்களின் உரிமைகள் மீறப்படுவதை சிறிதும் கண்டுகொள்ளவில்லை. சுதந்திர தினத்தன்று நாடே கோலாகலத்தில் மூழ்கியிருக்கும்போது அந்த சுதந்திரதினத்தை கொண்டாட கூட சிறுபான்மை முஸ்லிம்களுக்கு அனுமதியை மறுத்துள்ளது பெரும் அநீதியாகும். இது முஸ்லிம் சமூகத்தை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது கவலையில் ஆழ்த்தியுள்ளது.
களக்காடு, ஏர்வாடி, கடையநல்லூர், மேலப்பாளையம் போன்ற முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் மக்களில் காவல்படையை குவித்து ஊரைச் சுற்றி காவல் தடுப்புகளை ஏற்படுத்தி சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை பீதியடையச் செய்தும் நெல்லை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையின் துவேஷமான இந்த மனித உரிமை மீறலை பாப்புலர் ஃப்ரண்ட் கண்டிக்கின்றது. அரசும் இதனை வேடிக்கை பார்ப்பது குடிமக்களின் சுதந்திரத்தையே கேள்விக்குறியாக்குகின்றது. காவல்துறை மற்றும் அரசின் இந்த உரிமை மீறலை கண்டிக்கும் வகையில் வருகின்ற 17.8.2011 அன்று மாநிலம் தழுவிய அளவில் தொடர் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம்.
சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை; அதை எவர் தடுத்தாலும் அனுமதிக்கமாட்டோம் என்ற செய்தியை நாங்கள் பதிவுச்செய்ய விரும்புகின்றோம். இச்சந்திப்பின் போது பாப்புலர் ஃப்ரண்டின் தமிழ் மாநில செயலாளர் ஃபைஸல் அஹ்மத், மாவட்ட தலைவர் அன்வர் முஹைதீன் ஆகியோர் உடனிருந்தனர்.