ஜாம்நகர் : குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் அம்மாநில முதல்வர் நரேந்திரமோடியின் பங்கினைக் குறித்து உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ்பட்டை கைதுச்செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1990-ஆம் ஆண்டு பதிவுச்செய்த வழக்கில் கம்தாலியா தாலுக்கின் செசன்ஸ் நீதிமன்றம் இந்த வாரண்டை பிறப்பித்துள்ளது.
போலீஸ் தாக்கிய வழக்கில் ஒருவர் இறந்தது தொடர்பாக சஞ்சீவ் பட் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. உத்தரவு பிறப்பித்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாதை தொடர்ந்து சஞ்சீவ் பட்டிற்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வகுப்பு வாத மோதல்களை எதிர்கொள்ள போலீஸ் நடவடிக்கையில் ஒருவர் இறந்த சம்பவத்தில் பட் உள்பட ஏழு போலீஸ்காரர்கள் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டது. க்ரிமினல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கவேண்டும் என்ற அதிகாரிகளின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் தள்ளுபடிச் செய்திருந்தது. இதனைத்தொடர்ந்து கீழ் நீதிமன்றத்தின் உத்தரவினை குறித்து கேள்வி எழுப்பி அரசு மனு தாக்கல் செய்தது.
1996-ஆம் ஆண்டு தாக்கல் செய்த இந்த மனுவை கடந்த மாதம் அரசு தரப்பு வழக்கறிஞர் வாபஸ் பெற்றிருந்தார். இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் மீது நீதிமன்றம் நடவடிக்கையை துவக்கியது. ஏற்கனவே இம்மாத துவக்கத்தில் சஞ்சீவ் பட்டை பழிவாங்கும் நோக்கில் அவரை பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்தது மோடி அரசு.