புதுடெல்லி : வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பண முதலீட்டில் இந்தியர்கள் முன்னிலையில் இருப்பதாக சி.பி.ஐ இயக்குநர் எ.பி.சிங் கூறியுள்ளார். வரி ஏய்ப்பிற்காக இவர்கள் வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்துள்ள தொகை கிட்டத்தட்ட 50 ஆயிரம் கோடி டாலர்(24.5லட்சம் கோடி) என்று சிங் கூறினார்.
ஊழலுக்கு எதிராகவும், சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்வதற்குமான இண்டர்போல் திட்டத்தின் துவக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார் எ.பி.சிங்.
அவர் கூறியது: கறுப்பு பணத்தை பதுக்கியிருப்பவர்கள் குறித்து தகவல்கள் முழுமையாக கிடைப்பதற்கு கூடுதல் கால அவகாசம் தேவையாகும். கறுப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நாடுகளில் விசாரணை அதிகாரிகள் சட்டரீதியான மனுக்களை அளித்து ஒவ்வொன்றாக வெளிக்கொணர்ந்து வருகின்றனர்.
உலகில் 53 நாடுகளில் குறைந்த அளவிலான ஊழல் நடைபெறுகிறது. இந்நாடுகளில் அதிக அளவிலான கறுப்பு பணம் முதலீடு செய்யப்படுகிறது.
ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்தை வகிக்கிறது. சிங்கப்பூர் 5-வது இடத்தையும், சுவிட்சர்லாந்து ஏழாவது இடத்தையும் வகிக்கின்றன. ஆனால், கறுப்புப் பணத்தை ஏற்றுக்கொள்ளும் நாடுகளில் இவர்கள்தாம் முன்னணியில் உள்ளனர்.
கறுப்பு பணத்தை முதலீடாக ஏற்றுக்கொண்ட நாடுகள் முதலீட்டாளர்களின் பெயர்களை வெளியிட விரும்பவில்லை. காரணம், இத்தகைய கறுப்பு பண முதலீடுகள் தங்கள் நாடுகளின் பொருளாதார பாதுகாப்பிற்கு அளிக்கும் நன்கொடையை குறித்து அவர்கள் விழிப்புணர்வு பெற்றுள்ளார்கள்.
ஊழல் மூலம் சம்பாதித்த இத்தகைய முதலீடுகளை திரும்ப கொண்டுவருதல், முடக்குதல், கண்டுபிடித்தல் ஆகியன சட்டரீதியாக சவால்களை விடுக்கும், சிக்கலான நடைமுறையாகும் என்று எ.பி.சிங் கூறினார்.