சென்னை : கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதாவின் திசை திருப்பும் நடவடிக்கை அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நேரத்தில் பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டும் ஜெயாவின் தந்திரம் புரியாமல் அவரை முழுமையாக நம்பி மோசம் போய்விட்டோமோ? என்ற கவலை அணு உலை எதிர்ப்பாளர்களை பீடித்துள்ளது.
கூடங்குளம் அணு உலை குறித்து ஆராய அணுசக்தி கமிஷனின் முன்னாள் சேர்மன் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன் உள்பட நான்குபேரை நிபுணர்குழு உறுப்பினர்களாக அரசு நியமித்துள்ளது. இந்த நிபுணர்குழு நியமனம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கையாக கருதப்படுகிறது.
அணுசக்தி நிலையத்திற்கு எதிரான போராட்டம், உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு தீவிரமடைந்த பொழுது மக்களின் பீதி நீங்கும் வரை அணு உலையின் பணியை நிறுத்திவைக்க ஜெயா, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். மக்களின் பீதியை நீக்க பிரதமரால் நியமிக்கப்பட்ட 15 உறுப்பினர்களை கொண்ட நிபுணர் குழு அணு உலை எதிர்ப்பாளர்களுடன் முழுமையாக பேச்சுவார்த்தை நடத்தாமலேயே அணு மின் நிலையத்திற்கு ஆதரவாக அறிக்கைய சமர்ப்பித்தது. இதனால் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.
தேவைப்பட்டால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அணு உலை எதிர்ப்பாளர்கள் அனைவரையும் சிறையில் அடைக்க அடுக்கடுக்கான வழக்குகளை தமிழக போலீஸ் அவர்கள் மீது தொடர்ந்துள்ளது. போராட்டக் குழு கன்வீனர் உதயகுமார் மீது மட்டும் 140 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதனை தவிர வெளிநாட்டு நிதியை பெறுவதாக கூறி மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொள்ள தயாராகி வருகிறது.
அதேவேளையில், அணு மின் நிலையம் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கரன் கோவில் சட்டப்பேரவை தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தேர்தலில் அ.இ.அ.தி.மு.கவின் வெற்றியை பாதிக்கும் என ஜெயா கருதுகிறார். மேலும் சட்டப்பேரவையில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்திடம் வேறு சவால் விடுத்துள்ளார். எனவே தனது ப்ரஸ்டீஜ் பிரச்சனையாக மாறியுள்ள சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வெற்றியை பாதிக்கும் நடவடிக்கையை ஜெயா மேற்கொள்ளமாட்டார் என கூறப்படுகிறது. ஆகையால் நிபுணர் குழுவை நியமித்ததற்கு காரணமே அணு உலை பிரச்சனையை இன்னும் 2 மாதத்திற்கு தாமதப்படுத்தலாம் என்பதற்காகும்.
இந்தியா-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் முக்கிய சிற்பிகளில் ஒருவர்தாம் எம்.ஆ.ஸ்ரீனிவாசன். அணு நிலையத்தை ஸ்தாபிக்க கூடங்குளத்தை தேர்வு செய்ததிலும் ஸ்ரீனிவாசனுக்கு பங்குண்டு. ஸ்ரீனிவாசனின் தலைமையிலான நிபுணர்குழு அணுமின் நிலையத்திற்கு ஆதரவான அறிக்கையை தான் அளிக்கும் என்பதில் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு சந்தேகமில்லை. ஸ்ரீனிவாசனை நிபுணர் குழுவில் இருந்து நீக்கவேண்டும் என்ற அணு உலை எதிர்ப்பாளர்களின் கோரிக்கையை ஜெயலலிதா கண்டுகொள்ளவில்லை.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்தவுடன் நிபுணர் குழுவின் அறிக்கை வெளியாகும். அப்பொழுது இரும்பு கரம் கொண்டு கூடங்குளம் போராட்டத்தை நசுக்க ஜெயா திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தினமும் 8 மணிநேரம் மின்சார தடை நீடிக்கிறது. பால் விலை, பஸ் கட்டணம் உயர்வு இவற்றால் அவதியுறும் மக்கள் மின்சார தடையினால் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர். மாணவர்களுக்கு இரவு நேரங்களில் படிக்க இயலவில்லை. தொழிற்சாலை தொழிலாளர்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் மின்சார அலுவலகங்களை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றனர். ஆனால், ஜெயா அரசு மெளனம் சாதித்து வருகிறது. இதற்கு காரணம், தமிழகத்திற்கு உடனடி மின்சார தேவைக்கும், கூடங்குளம் அணு மின் நிலையம்தான் ஒரே தீர்வு என்பதை மக்களுக்கு புரிய வைக்க இவ்வாறு ஜெயா அரசு நாடகமாடுவதாக கூறுகிறார்கள்.
வெளிமாநிலத்தில் இருந்து வாங்கும் மின்சாரத்தையும் ஜெயா அரசு நிறுத்திவிட்டது. மக்களை வாட்டி எடுத்து அவர்களின் கோபத்தை அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது திருப்பத்தான் ஜெயாவின் திட்டம் ஆகும். தமிழகத்தின் தலை சிறந்த சகுனியாக செயல்படும் பாசிச ‘சோ’ வின் ஆலோசனை ஜெயாவுக்கு தாராளமாக கிடைப்பதும் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.