அஹ்மதாபாத் : குஜராத் அரசின் மேலிட உத்தரவின் படியே, கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தில் பலியானவர்களின் உடல்களை அஹ்மதாபாத்திற்கு கொண்டு வந்து, அதனை வைத்து ஊர்வலம் நடத்தப்பட்டது என சுட்டிக்காட்டி சிறப்பு புலனாய்வு குழுவிற்கு கடிதம் எழுதியதாக குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ அர்ஜுன் மோட்வாடியா கூறியுள்ளார்.
இதற்கு ஆதாரமாக அஹ்மதாபாத் கமிஷனராக பதவி வகித்த பி.சி.பாண்டே நானாவதி கமிஷனுக்கு முன்பாக 2004 ஆகஸ்ட் மாதம் அளித்த வாக்குமூலத்தையும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாக மோட்வாடியா கூறுகிறார். ஆனால், நரேந்திர மோடி அரசின் சட்டமீறலை வேண்டுமென்றே ஆர்.ராகவனின் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு புறக்கணித்தது என அவர் குற்றம் சாட்டுகிறார்.
மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கி எஸ்.ஐ.டி முதல் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
‘கோத்ரா ரெயில் எரிப்பில் இறந்தவர்களின் உடல்களை அஹ்மதாபாத்திற்கு கொண்டுவந்ததும், அதனை வைத்து ஊர்வலம் நடத்தியதும் குஜராத் அரசின் மேலிட உத்தரவின் மூலமாகும். அத்தகையதொரு முயற்சி தற்போதைய சூழலில் பெரிய எதிர்விளைவுகளை உருவாக்கும் என்ற கவலை எனக்கு ஏற்பட்டது’ என்று நானாவதி கமிஷனுக்கு முன்பாக பாண்டே 2004-ஆம் ஆண்டு அளித்த வாக்குமூலத்தின் பகுதிகளை மோட்வாடியா சுட்டிக்காட்டுகிறார்.
முதல் அமைச்சரும், அதிகாரப்பூர்வ பதவிகளை வகிப்பவர்களும் சட்டத்தை இவ்வளவு தூரம் வெளிப்படையாக மீறியிருக்கும் வேளையில் அதனை புறக்கணிக்க சிறப்பு புலனாய்வு குழுவால் எவ்வாறு சாத்தியமானது என்பது குறித்து எனக்கு ஒன்றும் புரியவில்லை.
விபத்து அல்லது தாக்குதல் காரணமாக எவரேனும் இறந்துவிட்டால் அவர்களின் உடல்களை போஸ்ட் மார்ட்டத்திற்கு பிறகு உறவினர்களிடம் வழங்கவேண்டும் என குஜராத் போலீஸ் மேனுவல்(குறிப்பேடு) கூறுகிறது.
சமூகத்தில் உணர்ச்சியை கிளர்ந்து எழச் செய்வதே குஜராத் அரசின் நோக்கமாகும். இறந்த உடல்களை காட்சிக்கு வைத்த பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்கு பதிலாக வி.ஹெச்.பியிடம் ஒப்படைத்ததில் இருந்தே இதனை புரிந்துகொள்ள முடியும் என்று மோட்வாடியா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முதல் அமைச்சருக்கும், டி.ஜி.பிக்கும், முதன்மை செயலாளருக்கும் தெரியாமல் கோத்ராவில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள அஹ்மதாபாத்திற்கு 59 இறந்த உடல்களை கொண்டுவர முடியாது. ஆளுங்கட்சி குஜராத் பந்த் அறிவித்த சூழலில் குறிப்பாக இதற்கு பிறகு மாநிலம் முழுவதும் நடந்த தீவிரமான வன்முறைகள் நடந்துள்ள சூழலில் இச்சம்பவத்தில் தெளிவான க்ரிமினல் சதித்திட்டம் நடந்தேறியுள்ளது என்பதற்கான ஆதாரம் என்று மோட்வாடியா எஸ்.ஐ.டிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டதாக கூறுகிறார்.