புதுடெல்லி : தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக குற்றம் சாட்டி தேர்தல் கமிஷன் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் மீது நடவடிக்கை எடுக்க கோரி குடியரசு தலைவரை அணுகியது தேவையற்றது என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.ஷெரீஃப் கூறியுள்ளார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: தேர்தல் பிரச்சாரங்களின் போது வாக்குறுதிகளை அளிப்பது புதிய சம்பவம் அல்ல. எல்லா அரசியல் கட்சிகளும் இவ்வாறு வாக்குறுதி அளிப்பதை தொடரத்தான் செய்கின்றன. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்த சல்மான் குர்ஷிதின் அறிக்கையும் அது போன்றதே. அதனை சட்டவிரோதமாக பார்க்க முடியாது.
சிறுபான்மை சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான் அறிக்கைகளின் மீது எச்சரிக்கையாக இருக்கும் தேர்தல் கமிஷன் எல்.கே.அத்வானி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் ராமர்கோயில் கட்டுவது தொடர்பாக வெளியிட்ட அறிக்கைகளை கண்டும் காணாதது போல் நடிக்கின்றனர்.
தேர்தல் காலத்தில் சமூகங்கள் இடையே பிளவை ஏற்படுத்தும் நோக்குடன் பா.ஜ.க தலைவர்களின் விடுக்கும் அறிக்கைகளின் மீதுதான் கூடுதல் கவனத்தை செலுத்தவேண்டும் என்று ஷெரீஃப் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
முதல்வர் பதவியில் இருந்து மோடியை நீக்கவேண்டும்:
2002 இனப்படுகொலை வேளையில் மத நிறுவனங்களை பாதுகாப்பதில் தோல்வியை தழுவி ஏற்பட்டதில் குஜராத் முதல்வர் மோடிக்கும் பொறுப்புள்ளது என்று குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள சூழலில், மோடியை முதல்வர் பதவியில் இருந்து நீக்கி, விசாரணை நடத்துவதற்கு தலையிட வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.ஷெரீஃப் கோரிக்கை விடுத்துள்ளார்.
இடிக்கப்பட்ட மத நிறுவனங்களை புனரைமைப்பது அல்லது பழுதுபார்ப்பது குறித்து உத்தரவிட்டுள்ள நீதிமன்றத்தின் தீர்ப்பை கே.எம்.ஷெரீஃப் வரவேற்றுள்ளார்.