புதுடெல்லி : குஜராத் இனப்படுகொலை வழக்குகளில் முதல்வர் நரேந்திர மோடியிடம் விசாரணை நடத்தவேண்டும் என அமிக்கஸ் க்யூரி(நீதிமன்றத்திற்கு உதவும் வழக்குரைஞர்) பரிந்துரைச் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மே மாதம் அமிக்கஸ் க்யூரி ராஜு ராமச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் நரேந்திர மோடியை விசாரணைச் செய்ய கோரிக்கை விடுத்துள்ளார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் வாதங்களை நிராகரித்த சிறப்பு புலனாய்வு குழுவின் நடவடிக்கை பொருத்தமில்லாதது என அமிக்கஸ் க்யூரி கூறியிருப்பதாக டெஹல்கா கூறுகிறது.
ஹிந்துக்களின் கோபத்தை தணிக்க அனுமதிக்க வேண்டும் என இனப் படுகொலைகள் நடப்பதற்கு முந்தைய தினம் அழைக்கப்பட்ட உயர் போலீஸ் அதிகாரிகளின் கூட்டத்தில் நரேந்திர மோடி உத்தரவு பிறப்பித்தார் என்று சஞ்சீவ் பட் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவரை பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்தார் மோடி. உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு இனப்படுகொலையில் மோடியின் பங்கிற்கு ஆதாரம் இல்லை என ஆரம்ப கட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
குஜராத் அரசும், சிறப்பு புலனாய்வு குழுவும் இனப்படுகொலை தொடர்பான ஆவணங்களை அழித்துவிட்டதாக சஞ்சீவ் பட் நானாவதி கமிஷனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.