பெங்களூர்: பொருளாதார முறைகேடு தொடர்பாக முன்னாள் கர்நாடகா முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா மீது லோகாயுக்தா போலீஸ் எஃப்.ஐ.ஆர் பதிவுச் செய்துள்ளது.
சட்டவிரோத சுரங்கத் தொழில், நிலபேர ஊழல் ஆகிய குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் எடியூரப்பாவிற்கு இவ்வழக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
அப்பர் பத்ரா நீர்பாசன திட்டம் தொடர்பாக பொருளாதார முறைகேட்டில் ஊழல் தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் எடியூரப்பா மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஆகஸ்ட் 8-ம் தேதி எடியூரப்பாவின் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த லோகாயுக்தா நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 158(3) படி லோகாயுக்தா சூப்பிரண்ட் ரங்கசாமி நாயக் எஃப்.ஐ.ஆர் பதிவுச் செய்துள்ளார். மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஒய்.எஸ்.பி தத்தா என்பவர்தாம் புகார் அளித்தவர்.
அவர் தனது புகாரில், அப்பர் பத்ரா நீர்ப்பாசனத் திட்டத்திற்காக ஆர்.என்.எஸ்.ஜோதி என்ற நிறுவனத்திற்கு மிக குறைந்த தொகையான ரூ.1,033 கோடிக்கு டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டர் பெற்று தந்ததற்கு கைமாறாக, எடியூரப்பாவின் மகன்கள் மற்றும் மருமகன் ஆகியோர் நடத்தும் இரு நிறுவனங்களுக்கு ரூ.13 கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. தவிர ஷிமோகா மாவட்டத்தில் எடியூரப்பா குடும்பத்தினர் நடத்தும் பிரிரானா சமூக,கல்வி அறக்கட்டளைக்கு ரூ.10 கோடியும் கைமாறியுள்ளது. இவ்வாறு அந்த புகாரில் கூறியுள்ளார்.