2011-12க்கான திருத்திய நிதி நிலை அறிக்கை குறித்த விவாதத்தின் போது ஆகஸ்ட் 11 அன்று தமிழக சட்டமன்றப் பேரவையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆற்றிய உரை
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பெற்றது போல் அதிமுக அரசு தாக்கல் செய்துள்ள 2010-11க்கான நிதி நிலை அறிக்கை வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது. கண்ணும் கருத்துமாக செயல்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் பலன் அளிக்கும் வகையில் ஒரு சிறந்த நிதி நிலை அறிக்கையை மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் அளிப்பதற்கு அட்சரமாக இருக்கும் எங்கள் அன்புச் சகோதரி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வரலாற்று சிறப்பு மிக்க நிதி நிலை அறிக்கை
மாண்புமிகு நிதி அமைச்சர் ஒ.பி.எஸ். அவர்கள் நேர்த்தியுடன் சமர்பித்த இந்த நிதி நிலை அறிக்கை வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று நான் வெறும் வார்த்தை ஜாலத்திற்காக சொல்லவில்லை. முதன் முறையாக நமது மாநிலத்தின் வரவு செலவு திட்டத்தின் அளவு ஒரு லட்சம் கோடியை மிஞ்சும் அளவு வரலாற்று சாதனை புரிந்துள்ளது என்பதற்காக மட்டும் நான் இந்த நிதி நிலை அறிக்கையை வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று குறிப்பிடவில்லை. இந்தியாவில் உள்ள பிற மாநில முதலமைச்சர்களும் கடந்த திமுக ஆட்சியாளர்களும் நினைத்தும் பார்க்காத அற்புதமான திட்டங்கள் விவாசாயிகள் முதல் பள்ளிக்கூட மாணவர் வரை அனைவரும் பலன் பெரும் வகையில் நலத்திட்டங்கள் இந்த அரசு சமர்பித்துள்ள வரவு செலவு அறிக்கையில் இடம் பெற்றிருப்பதே இது வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று சொல்வதற்கு போதுமானதாகும். இருப்பினும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வரவு செலவு அறிக்கையில் இடம் பெற்றுள்ள சில வியக்கத்தக்க அறிவிப்புகளை கோடிட்டு காட்ட விரும்புகிறேன்.
பாரபட்சம் காட்டாத அரசு
முதலாவதாக இது ஒரு மதசார்பற்ற அரசு மதரீதியாக பாரபட்சம் காட்டாத அரசு என்பதை பறைச்சாற்றும் வகையில் கோயில் அர்ச்சகர்கள், ஒதுவார்கள், இசைவாணர்கள், கிராம புசாரிகளுக்கான ஒய்வுதியத்தை ரூ750லிருந்து ரூ1000 மாக உயர்த்தியுள்ள அதே நேரத்தில் முஸ்லிம் மத ஊழியர்களான உலமாக்களுக்கும் இதே அளவு ஒய்வுதியத்தை இந்த அரசு உயர்த்தியுள்ளதை நான் மனமாறப் பாராட்டுகிறேன்.
வக்ப் வாரியத்திற்கு மானியம்
உலமாக்களுக்கு முதன் முதலாக ஓய்வுதியம் அளிக்கப்பட வேண்டும் என்ற திட்டம் டாக்டர் எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக ஆட்சியில் தான் என்பதை நான் நன்றியுடன் இத்தருணத்தில் நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன். இது போல் தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் தலைமையகம் தற்போது அமைந்துள்ள சென்னை ஜாபர் சாரங் தெருவில் உள்ள இடத்தை வாங்கியதும் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் தலைமையிலான அதிமுக ஆட்சியில் தான். அதே போல் அந்த இடத்தில் வக்ப் வாரியத்திற்கு சிறந்த வசதிகளுடன் கட்டடம் கட்டுவதற்காக 52 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதும் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டதும் தற்போதைய முதல்வர் தலைமையிலான கடந்த அதிமுக ஆட்சியில் தான். இதைப் பற்றி மறைந்த இந்திய தேசிய லீக் கட்சித் தலைவரும் முன்னாள் வக்பு வாரியத் தலைவருமான அப்துல் லத்தீப் ஒரு முறை குறிப்பிடும் போது திமுக ஆட்சியாளர்களிடம் நான் பல முறை முறையிட்டும் வக்ப் வாரியத்திற்கு கட்டடம் கட்டுவதற்கு அவர்கள் மறுத்துவிட்டார்கள். ஆனால் ஒரு முறை முறையிட்டதும் அதிமுக முதலமைச்சர் பணத்தை ஒதுக்கி கட்டடமும் கட்டி கொடுத்து விட்டார் என்று பெரிதும் நெகிழ்வுடன் குறிப்பிட்டார். கடந்த திமுக ஆட்சியாளர்களின் பாரமுகத்தின் காரணமாக கடும் நிதி பற்றாக்குறையால் தட்டு தடுமாறி செயல்படும் நிலை வக்பு வாரியத்திற்கு ஏற்பட்டது. இதன் விளைவாக மாண்புமிகு நிதி அமைச்சர் நிதி நிலை அறிக்கையில் குறிப்பிட்டது போல் வாரியம் தனது ஒய்வுதியதாரர்களுக்கு ஓய்வுதிய நிலுவைத் தொகை மற்றும் இதர பயன்களை அளிப்பதற்கு இயலாத நிலையில் உள்ளது. இந்த அவல நிலையை போக்க தமிழ்நாடு வக்பு வாரியத்தின் வரலாற்றில் முதன் முறையாக இந்த அரசு ஒரு முறை மானியமாக மூன்று கோடி ரூபாய் வழங்க முன்வந்துள்னது நிச்சயமாக வரலாற்றுச் சிறப்புமிக்கது தான். இது மட்டுமின்றி சென்ற திமுக ஆட்சியை போல் கருமியாக இல்லாமல் ஆண்டு தோறும் நிர்வாக மானியமாக வழங்கப்பட்டு வரும் 45 இலட்ச ரூபாய் ஒரு கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என்ற மாண்புமிகு முதல்வரின் உத்தரவையும் நெஞ்சாரப் பாராட்டுகிறேன். வக்ப் வாரியத்தை சீரமைத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்பு சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பை மனமாற வரவேற்கிறேன். கருணையுள்ளம் நிறைந்த மாண்புமிகு முதல்வர் அவர்கள் பள்ளிவாசல்களில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான மராமத்து பணிகளுக்கு (major repairs and renovation) அரசு தற்போது வழங்கி வரும் மாணியமான 60 லட்சத்தை உயர்த்த வேண்டும் என்றும் சிறிய மராமத்து பணிகள் மற்றும் பள்ளிவாசல், அடக்கத்தலங்களுக்கான சுற்று சுவர் எழுப்புவதற்கு அரசு தற்போது அளித்து வரும் மாணியமான ரூ10 லட்சத்தையும் உயர்த்தித் தர வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு
அரசு பணிகளில் மதவழி சிறுபான்மை மக்களுக்கு 15 விழுக்காடு இடஒதுக்கீடு அளி்க்க வேண்டும் இதில் 10 விழுக்காடு முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டும் என்று நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான மத மற்றும் மொழி சிறுபான்மையினருக்கான ஆணையம் கடந்த மே 21. 2007ல் பரிந்துரையை அளித்தப் போதினும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் சிறுபான்மை மக்களை வஞ்சித்து வருகின்றது. ஆனால் நமது தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான 69 விழுக்காடு இடஒதுக்கீடு அளவை கடைபிடிக்க வழிவகைச் செய்து சமூக நீதியை காத்த மாபெரும் வீராங்கனையாக நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் விளங்குகிறார். சமூக நீதியை காத்து வாழ்வின் விளிம்பில் உள்ள மக்களை உயர்த்துவதற்கு ஆட்சியில் உள்ளவர்களுக்கு நமது முதலைமைச்சருக்கு இருப்பது போல் மனவலிமையும் துணிச்சலும் தேவை. இந்த மனவலிமையும் துணிச்சலும் டெல்லியை ஆட்சி செய்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ்,திமுக உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு இல்லை ஆனால் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசுக்கு அந்த மனவலிமை நிரம்பவே உண்டு. சமூக நீதயை நிலைநாட்டுவதிலும் சிறுபான்மை நலனில் அளப்பரிய அக்கறையுள்ள தமிழக முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்களித்தது போல் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அளவை குறைந்தது 5 விழுக்காடாகவோ அல்லது அதற்கு மேலோ உயர்த்துவதற்கு உடனடியாக ஆவணச் செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இதே போல் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை கண்காணிக்க அரசு அலுவலர்கள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும் இடம் பெறும் அமைக்கப்பட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இடைநிற்றலை குறைக்கும் திட்டம்
மேநிலைப் பள்ளிகளில் இடைநிற்றலை குறைப்பதற்காக ரூ 394.04 கோடி ஒதுக்கீட்டில் 24,94,649 மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் பத்தாம் வகுப்பு, மேனிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க முடிவுச் செய்திருப்பது இன்னொரு வரலாற்றுச் சிறப்பு மிக்க அம்சமாகும். ஒரு கல்வியாளர் என்ற முறையிலும் இதற்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை நான் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகள் தொடங்கி வளர்ந்து வரும் நாடுகள் ஏழை நாடுகள் என அனைத்து நாடுகளில் மேனிலை பள்ளி அளவில் மாணவர்கள் இடையில் படிப்பை நிறுத்துவது ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது. இது குறித்து விரிவாக பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ள வாசிங்டனை தலைமையகமாக கொண்டு செயல்படும் National Educational Association என்ற ஒரு தன்னார்வ அமைப்பு
Dropping out of high school has significant negative consequences for the individual and for society. If the nation decides to do little or nothing about high school dropouts, it will pay dearly for years to come. But if it invests in dropout prevention and intervention, it will accrue enormous benefits. It is that simple. But the critical question remains: “Does the U.S. have the political will to invest the resources to substantially reduce dropout rates and eliminate disparities among racial and ethnic groups?”Evidence to date suggests the answer is no.
என்று குறிப்பிடுகின்றது. அதாவது உயர்நிலை அளவில் மாணவர்கள் படிப்பை நிறுத்துவது தனி நபருக்கும் சமுகத்திற்கு தீய விளைவுகளை ஏற்படுத்துகின்றது. ஒரு நாடு இந்த இடைநிற்றல் குறித்து அக்கறைக் கொண்டு செயல்படாவிட்டால் அது எதிர் காலத்தில் மிகப் பெரும் விலையை கொடுக்க நேரிடும். ஆனால் இந்த இடைநிற்றலை தடுப்பதற்காக அது முதலீடுகளைச் செய்தால் அது மிகப் பெரும் நன்மைகளை பெற்றுத் தரும். இது இவ்வளவு சுலபமானது தான். ஆனால் மிக முக்கிய கேள்வி என்னவெனில் இடைநிற்றலை குறைத்து இன குழுக்களுக்கு இடையிலான வேறுபாடுகளை களைவதற்கான முதலீட்டைச் செய்வதற்கு அமெரிக்க அரசிடம் அரசியல் ரீதியான துனிச்சல் உள்ளதா என்றால் இல்லை என்பதே பதிலாக வருகின்றது என்று National Educational Association தெரிவிக்கின்றது.
ஆனால் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சரிடம் அமெரிக்க அரசியல்வாதிகளிடம் இல்லாத துணிச்சல் உள்ளதால் தான் இடைநிற்றலை குறைத்து, 394.04 கோடி ரூபாய் அதற்காக ஒதுக்கி எதிர்காலத்தில் தமிழகம் மிகப் பெரும் பலனை பெறுவதற்கு வழிவகுத்துள்ளார். இப்போது புரிகிறது ஏன் ஹிலாரி கிளின்டன் இந்தியாவில் 28 மாநிலங்கள் மற்றும் ஏழு யுனியன் பிரேதசங்கள் இருந்த போதினும் நமது மாநிலத்தை மட்டும் தேர்ந்தெடுத்து நமது தமிழக முதலமைச்சரை ஏன் சந்திக்க வந்தார் என்பது.?
பள்ளிகளுக்கு அரசு மானிய நிதி உதவி
இத்தகைய தனி துணிச்சல் மிக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு ஒரு நீண்ட நாள் கோரிக்கையை சமர்பிக்க விரும்புகிறேன். தமிழகத்தில் 1991-92க்கு பிறகு அரசு மானிய நிதி உதவியின்றி அங்கீகரிக்கப்பட்டு தொடங்கப்பட்ட, நிலை உயர்த்தப்பட்ட மற்றும் கூடுதல் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்ட பகுதி மானிய உதவியின்றியும், முழுமையாக மானிய உதவியின்றியும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய பள்ளிகளுக்கு அரசின் மானிய உதவியுடன் பணியிடங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினராலும் தொடர்ந்து கோரிக்கை எழுப்பபட்டு வந்துள்ளது. இதற்காக பல்வேறு போராட்டங்களும் கடந்த ஆட்சியின் போது நடைபெற்றன. நானும் அதில் பங்கேற்றுள்ளேன். அரசு மானியம் இல்லாத வகுப்புகளில் முதுகலைப் பட்டம் மட்டும் அல்ல முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூட ரூ1500 முதல் ரூ 3000 வரை என மிக குறைந்த ஊதியத்தில் பணியாற்றும அவல நிலை நிலவுகின்றது. இந்த ஊதியத்தைக் கொண்டு வாழ்வை நடத்த இயலாமல் கடுமையான மன உளைச்சலுக்கு சுயநிதி பள்ளி ஆசிரியர்கள் ஆளாகியுள்ளனர். இச்சூழலில் கடந்த திமுக அரசு தனது இறுதி நாட்களில் ஒரு அரசாணையை (Tamil Nadu Ordinance No.1 of 2011) கடந்த பிப்ரவரி 1, 2011 ல் பிறப்பித்தது. தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (ஒழுங்குபடு்த்தும்) சட்டம் 1973க்கு திருத்தம் செய்து இந்த அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணை 1999ம் ஆண்டு வரை தொடங்கப்பட்ட பள்ளிகளுக்கு 11,307 ஆசிரியர் பணியிடங்களும், 648 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் மொத்தம் 331 கோடி ரூபாய் செலவில் அனுமதிக்க வழிவகுக்கப்பட்டது. 1.6.2011 முதல் இது நடைமுறைக்கு வரும் என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசணையை 1999க்கு பிறகும் தொடங்கப்பட்ட பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று விரிவுப்படுத்தி அதனை சட்டமாக இந்த மாமன்றத்தில் இயற்றி தமிழகத்தின் பள்ளி கல்வி வரலாற்றில் மற்றுமொரு மாபெரும் புரட்சியை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஏற்படுத்த வேண்டுமென பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
தூர பார்வையுடைய நிதி நிலை அறிக்கை
தமிழகத்தை இந்தியாவில் முதன்மை மாநிலமாக்க வேண்டுமென்ற முதல்வரின் குறிக்கோளையும் தொலைத்தூரப் பார்வையையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த நிதி நிலை அறிக்கை அமைந்துள்ளது. இந்த நிதி நிலை அறிக்கை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள ஒரு அரசியல் தலைவர் என்ற நிலையிலிருந்து எதிர்கால சந்ததியினரின் நலனையும் கருத்தில் கொண்டு செயல்படும் statesman ஆக உயர்த்தியுள்ளது. ஏனெனில் இன்றைய மக்கள் தேவைகள் மட்டுமின்றி எதிர்கால தமிழகமும் வாழ்வாங்கு சிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அமையபெற்றுள்ளது. இத்தகைய சீர்மிக்க முதல்வரிடம் தமிழக மக்கள் சார்பாக இறுதியாக ஒரு கோரிக்கையை வைத்து அமர்கிறேன்.
லட்சாதிபதிகளாவோம் என்ற கனவுடன் பிச்சாதிபதிகளாக தமிழர்கள் மாறும் அவல நிலையை நீக்க அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்ட போதினும் சென்ற அதிமுக ஆட்சியின் போது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் துணிச்சலுடன் லட்டரி என்ற சூதாட்டத்தை தடைச் செய்து பல கோடி குடும்பங்களின் நலனை காத்தார். இதே துணிச்சலுடன் புரண மதுவிலக்கை தமிழகத்தில் அமுல்படுத்த வேண்டுமென மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். மதுவைப் பற்றி ஆய்வுச் செய்த டாக்டர் எம். ராபர்ட்ஸன் என்ற அமெரிக்க அறிஞர் If half the pubs and bottle stores were closed, I guarantee that half the hospitals and jails will remain closed.”
Large amount of revenue is generated from sale of alcohol. Yet, the hidden, cumulative costs of health care, absenteeism and reduced income levels related to heavy alcohol use are higher. These costs were estimated to be 60% more than the revenue generated in a study from Karnataka.
லாட்டரியை தடைச் செய்த அதே துணிச்சலுடன் பல்லாயிரம் கோடி வருவாயை ஈட்டினாலும் மிகப் பெரும் சமூக கேடுகளை விளைவிக்கும் மதுவை முழுமையாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தடைச் செய்து கோடான கோடி தமிழக குடும்பங்களில் நிம்மதி ஏற்பட வழி வகைச் செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஈழ தமிழர்களின் நலன் காக்கும் அரசு
தமிழகத்தில் ஈழ தமிழர்கள் வாழும் முகாம்களில் உள்ள வீடுகளையும் அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தும் பொருட்டு 25 கோடி ஒதுக்கப்படும் குடும்ப தலைவருக்கு வழங்கப்பட்டு வரும் மாதந்திர உதவி தொகை 1000 ரூபாயாக உயர்த்தப்படும் இதே போல் இதர குடும்ப உறுப்பினர்களுக்கான உதவி தொகையும் உயர்த்தப்படும் என இந்த நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை மனமாற வரவேற்கிறேன். எனது தொகுதியில் தான் ஈழ தமிழர்களுக்கான மிகப் பெரும் முகாம் மண்டபத்தில் உள்ளது. மண்டபம் முகாமில் அடிப்படை வசதிகளை அதிகரித்து தருவதுடன் அங்குள்ள ஆண்கள், பெண்கள் பயன் பெறும் வகையில் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க அரசு ஆவணச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
பாதாள சாக்கடை திட்டம்
பிற்படுத்தப்பட்ட வறட்சிமிக்க எனது இராமநாதபுரம் தொகுதி தொடர்பாக சில கோரிக்கைகளை முன்வைக்கிறேன். கனிவுடன் அவற்றை பரிசீலித்து ஆவணச் செய்யுமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இராமநாதபுரம் நகரில் கடந்த அதிமுக ஆட்சியில் 2005ல் ரூ 30 கோடி மதிப்பில் பாதாள சாக்கடைத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த திமுக ஆட்சியினரின் அலட்சியப் போக்கினால் 6 ஆண்டுகள் சென்ற பிறகும் இத்திட்டம் இன்னும் செயலுக்கு வரவில்லை. விரைந்து இராமநாதபுரம் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்முறைக்கு வருவதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இராமநாதபுரம் நகரில் வாழும் மக்களில் பெரும்பாலனவர்கள் ஏழை மற்றும் நடுத்தர மக்களே. இதை கருத்தில் கொண்டு தர்ம உள்ளம் படைத்த தமிழக முதல்வர் அவர்கள் பொது மக்களிடமிருந்து இத்திட்டத்திற்காக வசூல் செய்ய உத்தேசித்துள்ள ரூ 9 கோடியை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து அதிகமான மக்கள் வந்துச் செல்லும் யாத்திரிக மற்றும் சுற்றுலா தலமாக விளங்கும் இராமேஸ்வரம் நகரத்திலும், கீழக்கரை நகரத்திலும் பாதாள சாக்கடை திட்டம் அமையப் பெற இந்த அரசு ஆவணச் செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
எனது தொகுதியால் உள்ள மூன்று நகராட்சிகளான இராமநாதபுரம், இராமேஸ்வரம் மற்றும் கீழக்கரையில் எங்கு நோக்கினும் குப்பைகளைப் பார்க்கலாம். மிக மோசமான குப்பை மேலான்மை திமுகவினர் வசம் உள்ள இந்த நகராட்சிகளில் நிலவுகின்றது. இதே போல் கழிவு நீர் ஆறாக ஒடுவதையும் பார்க்கலாம். வெளி மாநிலத்தவர் அதிகம் வந்து போகும் இந்த பகுதிகளில் இது போன்ற மோசமான சுகாதார நிலை நிலவுவது தமிழகத்தைப் பற்றி ஒரு தவறான கருத்தையை ஏற்படுத்தும். இந்த மூன்று நகராட்சிகளிலும் போர்கால அடிப்படையில் குப்பைகளை அகற்றுவதற்கும் கழிவு நீர் வடிகால் அமைவதற்கும் இந்த அரசு உரிய ஆவணச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
டிராமா கேர் வசதி
இராமேஸ்வரம் முதல் மதுரை வரையிலான தூரம் சுமார் 170 கி.மீ. ஆகும் இந்த நெடுஞ்சாலையில் நேற்று நான் கேள்வி நேரத்தில் குறிப்பிட்டது போல் சாலை விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன. இராமநாதபுரம் மாவட்ட சுற்றுவட்டாரத்தில் பெரும் விபத்து ஏற்பட்டால் மாவட்ட தலைமை மருத்துவமனையில் உரிய வசதிகள் இல்லாததினால் காயமடைந்தவர்களை 120 கி.மீ. தொலைவில் உள்ள மதுரைக்கே கொண்டுச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றது. இந்த அவல நிலையை நீக்க இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் இயங்கும் ஆர்டோ டிராமா கேர் மற்றும் கேசுவாலிடி சர்வீஸ் உள்ளடக்கிய ஒரு முழுமையான விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு (Accident and Trauma care) ஏற்படுத்தித் தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
மருத்துவக் கல்லூரி
இராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என்று வெறும் வாய் சவடால் அறிவிப்பு மட்டுமே திமுக ஆட்சியில் செய்யப்பட்டது. டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களால் மாவட்டத் தலைநகர் அந்தஸ்துப் பெற்ற இராமநாதபுரத்தில் அவரது உண்மையான அரசியல் வாரிசான தமிழக முதலமைச்சர் அவர்கள் அரசினர் மருத்துவக் கல்லூரியை அடுத்த கல்வி ஆண்டில் தொடங்க ஆவணச் செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இரண்டாம் பசுமை புரட்சிக்கும், இரண்டாம் வெண்மை புரட்சிக்கும் வித்திட்டுள்ள அடுத்த ஐந்தாண்டுகளில் உழவர்களின் தனி நபர் வருமானத்தை இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகரிக்க வழி வகுக்கும்
அனைத்து துறையினரையும் அனைத்து தரப்பினரையும் திருப்திப் படுத்தும் அருமையான சீரிய நிதி நிலை அறிக்கையை வரவேற்று அதற்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து அமர்கிறேன்.