லண்டன்: போதைப் பொருள் இடைத்தரகர் என கூறி ஒருவரை போலீஸ் சுட்டுக்கொன்றதை தொடர்ந்து வெடித்த இனக்கலவரம் பிரிட்டனின் இதர நகரங்களுக்கும் பரவியுள்ளது. க்ரோய்டானிலும், பர்மிங்காமிலும் இதுவரை ஐந்துபேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கூடுதல் படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளதால் லண்டன் நகரம் அமைதியாக இருக்கிறது. அதேவேளையில் மாஞ்செஸ்டர், ஸால்ஃபோர்ட், பர்மிங்காம், ப்ரஸ்டோல், நாட்டிங்காம், லிவர்ஃபூல், லெஸ்டர், க்ளோஸ்டஸெயர், கேம்ப்ரிட்ஜ் நகரங்களில் செவ்வாய்க்கிழமை இரவிலும் தாக்குதல்கள் நடந்தேறின. வன்முறையாளர்கள் நூற்றுக்கணக்கான கடைகளை கொள்ளையடித்து தீக்கிரையாக்கினர்.
வர்த்தக மையங்களை முடித்துவிட்டு ஆசிய வம்சாவழியைச் சார்ந்தவர்களின் வீடுகளை குறிவைப்போம் என வதந்திகளும், எஸ்.எம்.எஸ் செய்திகளும் தீவிரமாக பரப்புரைச் செய்யப்படுகிறது. இந்தியாவைச் சார்ந்த 30 லட்சம் பேர் பிரிட்டனில் வசிக்கின்றனர்.
நகரங்களை குறிவைத்து சிறுவர்களும், பெண்களும் அடங்கிய கும்பல் வர்த்தக மையங்களையும், சூப்பர் மார்க்கெட்டுகளையும் கொள்ளையடிக்கின்றன. பத்து வயது முதல் நடுத்தர வயது வரையிலான நபர்கள் இக்கும்பலில் உள்ளனர். ஆண்கள் மின்னணு சாதன கடைகளையும், பெண்கள் துணி கடைகளையும், ஃபேசன் கடைகளையும் தேர்ந்தெடுத்து தாக்குகின்றனர். மதுபான கடைகள், வங்கிகள், ஏ.டி.எம் கவுண்டர்கள், நகைக்கடைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வன்முறை கும்பல் நுழைகிறது.
போலீஸ் செயலற்று போன சூழலில் கலவரமும், கொள்ளையும் நடத்தி கொண்டாட்டம் நடத்துகின்றனர் க்ரிமினல்கள்.
கலவரம் துவங்கி ஐந்து தினங்கள் கழிந்த பிறகும் அதனை அடக்குவதற்கு போதுமான நடவடிக்கைகள் அரசு தரப்பிலிருந்து நடைபெறவில்லை. இன்று முதல் போலீஸ் தண்ணீர் பீரங்கியை உபயோகிக்கும் என பிரதமர் டேவிட் காமரூன் அறிவித்தபோதிலும் அது எவ்வளவுதூரம் பயன் தரும் என்பது தெரியவில்லை.