நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 13 ஆகஸ்ட், 2011

உம்ரா செய்வது எப்படி?


உம்ரா செய்வது எப்படி?
'ஒரு உம்ரா செய்துவிட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லை' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)


 'ஹஜ் செய்பவர்களும், உம்ரா செய்பவர்களும் அல்லாஹ்வின் விருந்தினர்கள் ஆவார்கள். அவர்கள் அவனிடம் கேட்டால் அவர்களுக்கு அவன் கொடுக்கிறான். அவர்கள் பாவமன்னிப்புக் கேட்டால் அவர்களை மன்னிக்கிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: நஸயி, இப்னுமாஜா)
1. இஹ்ராம் :    மீக்காத் எனும் எல்லையை அடைந்ததும் குளித்து விட்டு இஹ்ராம் உடையை அணிந்து கொள்ள வேண்டும். (மீக்காத்திலிருந்து கஃபாவை தவாஃப் செய்ய ஆரம்பிக்கும் வரை வலது தோளைத் திறந்த வைத்துக் கொள்வது நபிவழிக்கு மாற்றமானது.)
பர்ளுத் தொழுகையின் நேரமாக இருந்தால் அதனைத் தொழுதுவிட்டு அல்லது உளூவுடைய சுன்னத் இரண்டு ரக்அத்துக்களைத் தொழுது விட்டு உம்ராவுக்கு நிய்யத் வைக்க வேண்டும். (இஹ்ராமிற்கென்று பிரத்தியேகமான எந்தத் தொழுகைக்கும் நபிவழியில் ஆதாரம் இல்லை.)
உம்ராச் செய்வதாக மனதால் நினைப்பதே நிய்யத் எனப்படும்.அவ்வாறு நினைத்து விட்டு لَبَّيْكَ اَللهُمَّ عُمْرَةً
(லப்பைக அல்லாஹும்ம உம்ரதன்) என்றோ اَللهُمَّ لَبَّيْكَ عُمْرَةً (அல்லாஹும்ம லப்பைக உம்ரதன்) என்றோ கூற வேண்டும்.
 2. உம்ராவுக்கு நிய்யத் வைத்ததிலிருந்து கஃபதுல்லாஹ்வைச் சென்றடையும் வரை தல்பியாவைத் திரும்பத் திரும்பச் செல்லிக் கொண்டிருக்க வேண்டும். ஆண்கள் சத்தத்தை உயர்த்தியும் பெண்கள் மெதுவாகவும் தல்பியாவைச் சொல்ல வேண்டும். தல்பியா வாசகங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
    لَبَّيْكَ اَللهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لآ شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لآ شَرِيْكَ لَكَ
(அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்நிஃமத லக வல் முல்க், லாஷரீக லக்.)
3. தவாஃப் செய்தல்:    மஸ்ஜிதுல் ஹராமை அடைந்ததும் வுழூச் செய்து விட்டு கஃபதுல்லாஹ்வை நோக்கிச் செல்ல வேண்டும். தனது வலது தோளைத் திறந்தவராக ஹஜருல் அஸ்வதின் பக்கம் சென்று, அதனைத் தனது வலது கையினால் தொட்டு பிஸ்மில்லாஹி அல்லாஹுஅக்பர் என்று கூற வேண்டும். முடிந்தால் அக்கல்லை முத்தமிடலாம். முடியாவிட்டால் கல்லைக் கையினால் தொட்டு கையை முத்தமிட வேண்டும். அதற்கும் முடியவில்லையென்றால் அதனை முன்னோக்கி அல்லாஹுஅக்பர் என்று கூறி தனது வலது கையால் அதன்பால் சுட்டிக்காட்ட வேண்டும். அப்போது கையை முத்தமிடக் கூடாது.அவ்விடத்திலிருந்து தவாiஃப ஆரம்பிக்க வேண்டும்.
ஹஜருல் அஸ்வதிலிருந்து ஆரம்பித்து மீண்டும் ஹஜருல் அஸ்வதை வந்தடைவது ஒரு சுற்றாக கணிக்கப்படும். இவ்வாறு ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும்.ஒவ்வொரு சுற்றின் ஆரம்பத்திலும் முடிந்தால் ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது அல்லது அதனைத் தொட்டு கையை முத்தமிடுவது அல்லது அதனை நோக்கிக் கையைக் காட்டுவது நபிவழியாகும்.
ஆரம்ப மூன்று சுற்றுக்களிலும் தொங்கோட்டமாகவும், ஏனைய நான்கிலும் சாதாரணமாகவும் செல்ல வேண்டும்.தவாஃபின் போது (ஹஜருல் அஸ்வதிற்கு முன்னாலுள்ள) ருக்னுல் யமானி என்ற மூலையை அடைந்தால் பிஸ்மில்லாஹி அல்லாஹுஅக்பர் என்று கூறி அதனைத் தொட வேண்டும். கையை முத்தமிடக் கூடாது. தொட முடியாவிட்டால் அதற்குக் கையைக் காட்டக் கூடாது.ருக்னுல் யமானியிலிருந்து ஹஜருல் அஸ்வதை அடையும் வரை,
    رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّار
'ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்' என்று கூற வேண்டும். (பொருள்: எங்கள் இரட்சகா! எங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மையைத் தருவாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!)
இது அல்லாமல் தவாஃபின் போது ஒதுவதற்கென்று எந்த துஆக்களும் ஹதீஸ்களில் வர வில்லை. எனவே தான் விரும்பிய துஆக்களைத் தனக்குத் தெரிந்த மொழிகளில் கேட்கலாம். அல்குர்ஆன் ஓதலாம். மேலும் திக்ருகள் செய்யலாம்.
தவாஃப் செய்து முடிந்ததும் வலது தோளை மூடிக் கொள்ளலாம்.
4. தவாஃப் செய்து முடிந்தால்...?:
தவாஃப் செய்து முடிந்ததும் இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும். முதலாவது ரக்அத்தில் சூரத்தல் ஃபாத்திஹாவுடன் குல் யா அய்யுஹல் காபிரூன் சூராவையும், இரண்டாவது ரக்அத்தில் சூரதுல் ஃபாத்திஹாவுடன் குல் ஹுவல்லாஹு அஹத் சூராவையும் ஓத வேண்டும்.
இந்த தொழுகையை மாகமு இப்ராஹீமிற்குப் பின்னால் நின்று தொழுவது சிறந்தது. முடியாவிட்டால் பள்ளியின் எந்த இடத்திலும் தொழலாம்.தொழுது முடிந்ததும் ஸம்ஸம் தண்ணீரை அதிகமாகக் குடிப்பது சுன்னத்.
5. ஸயீ செய்வது:   தவாஃப் செய்து, தொழுது முடிந்தால் ஸயீ செய்வதற்காக ஸஃபாவை நோக்கிச் செல்ல வேண்டும்.
ஸஃபாவை நெருங்கும் போது,
    إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِر الله فَمَنْ حَجَّ الْبَيْتَ أَو اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ يَّطَّوَّفَ بِهِمَا، وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ الله شَاكِرٌ عَلِيْمٌ
    'இன்னஸ் ஸஃபா வல்மாவத மின் ஷஆயிரில்லாஹ், ஃபமன் ஹஜ்ஜல் பைத அவிஃதமர ஃபலா ஜுனாஹ அலைஹி அய்யத்தவ்வஃப பிஹிமா, வமன் ததவ்வஅ கைரன் ஃபஇன்னல்லாஹ ஷாகிருன் அலீம்'. (2:158) என்று ஓத வேண்டும்.
 பின்னர் கஃபாவைக் காணுமளவுக்கு ஸஃபாவில் ஏறி பின்வருமாறு ஓத வேண்டும்.
    لآ إِلهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ ، لآ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيْتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ، لآ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ أَنْجَزَ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الأحْزَابَ وَحْدَهُ 
'லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர். லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யி வயுமீத்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லாஇலாஹ இல்லல்லாஹுவஹ்தா, அன்ஜஸ வஃதா, வநஸர அப்தா, வஹஸமல் அஹ்ஸாப வஹ்தா'. பிறகு கையை உயர்த்தி தனக்கு விருப்பமான துஆக்களை (விரும்பிய மொழியில்) கேட்க வேண்டும்.
துஆக் கேட்டு முடிந்ததும் மேற்படி திக்ரைக் கூறிவிட்டு மீண்டும் கைகளை உயர்த்தி துஆச் செய்ய வேண்டும். இரண்டாவது முறை துஆக் கேட்டு முடிந்ததும் மேற்படி திக்ரை ஓதிவிட்டு மாவாவை நோக்கிச் செல்ல வேண்டும்.பச்சை அடையாளம் இடப்பட்ட தூண்களுக்கு இடையில் ஆண்கள் தொங்கோட்டமாகச் செல்ல வேண்டும். (பெண்கள் சாதாரணமாக நடந்து செல்ல வேண்டும்.) மர்வாவை அடைந்ததும் அதில் ஏறி கிப்லாவை முன்னோக்கி ஸஃபாவில் செய்தது போன்று (திக்ரு, துஆ) செய்ய வேண்டும்.
 ஸஃபாவிலிருந்து மாவாவுக்குச் செல்வது ஒரு சுற்றாகும். மர்வாவிலிருந்து மீண்டும் ஸஃபாவுக்கு வருவது இரண்டாவது சுற்றாகக் கணிக்கப்படும். இவ்வாறு ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும். ஏழாவது சுற்று மர்வாவில் முடியும்.
ஸஃபா, மர்வாவில் ஓதுவதற்கென்று ஏற்கனவே கூறப்பட்ட திக்ருகளைத் தவிர ஸயீயில் ஓதுவதற்கென்று குறிப்பாக ஏதும் நபி (ஸல்) அவர்களால் கற்றுத்தரப்பட வில்லை. எனவே தவாiஃபப் போன்று குர்ஆன் ஓதுதல், திக்ரு செய்தல், துஆச் செய்தல் போன்றவற்றில் ஈடுபடலாம்.ஸயீ செய்வதற்கு வுழு அவசியமில்லை.
6. ஸயீ முடிந்ததும்:    ஸயீ முடிந்ததும் தலை முடியை முற்றாக மழிக்க வேண்டும், அல்லது கத்தரிக்க வேண்டும்.கத்தரியால் சில முடிகளை மட்டும் வெட்டுவது மிகப் பெரிய தவறாகும்.இத்துடன் உம்ரா நிறைவு பெறுகிறது. (குறிப்பு: இஹ்ராமில் தடுக்கப்பட்டவை, இஹ்ராம் கட்டியவர் தவிர்ந்து கொள்ள வேண்டியவை போன்ற மேலதிக விபரங்களை விரிவான நூற்களில் காணவும்.)
    உங்களது உம்ராவை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக!