மும்பை:ராணுவ உளவுத்துறையின் ரகசிய ஆபரேசனின் ஒரு பகுதியாகவே தான் அபினவ் பாரத்திலும், சிமியிலும் ஊடுருவியதாக மலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான ஸ்ரீகாந்த் புரோகித் கூறியுள்ளார்.
மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணையில் புரோகித்தின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் எடுத்துவைத்த வாதமாகும் இது.
’ரகசிய தகவல்களை சேகரிக்க பிரக்யாசிங் தாக்கூர், தயானந்த் பாண்டே ஆகியோருடன் சேர்ந்து செயல்பட்டேன். அவர்களுடன் நடத்திய கூட்டங்களையும் விவாதங்களையும் ராணுவத்தின் உயர் அதிகாரிகளுக்கு அறிவித்தேன்’ என புரோகித்திற்காக வாதாடிய வழக்கறிஞர் ஸ்ரீகாந்த் சிவாடெ செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் வாதிட்டார்.
ராணுவ ஆபரேசன் குறித்து வெளியிட ராணுவ மேலதிகாரியிடம் கோரியபிறகும் அனுமதி கிடைக்கவில்லை என புரோகித் கூறுகிறார். முன்னர் புரோகித் சிமி இயக்கத்திலும் ஊடுருவினாராம். இயக்கத்தின் நம்பிக்கைக்குரியவராக மாறிய பிறகு அங்குள்ள விபரங்களை சேகரித்ததாகவும், தனது சேவைகளுக்கு ராணுவத்திடமிருந்து அங்கீகாரம் கிடைத்ததாகவும் புரோகித் சார்பாக வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் ‘அதிகாரப்பூர்வ தேவைக்காக’ ஊடுருவிய அதிகாரியை இவ்வழக்கிலிருந்து ராணுவம் ஏன் காப்பாற்றவில்லை? என ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி அபய் எம். திப்ஸே கேள்வி எழுப்பினார்.
2006-ஆம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பில் புரோகித்தின் பங்கு நிரூபணமான பிறகு மஹாராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்காரே தலைமையிலான படை புரோகித்தை கைதுச் செய்தது. புரோகித் கைதுச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சம்ஜோதா எக்ஸ்பிரஸ், அஜ்மீர் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் செயல்பட்டவர்கள் மலேகான் குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள்தாம் என்பது உறுதியானது.
குண்டுவெடிப்புகளுக்கு உபயோகித்த ஆர்.டி.எக்ஸ் ராணுவத்திலிருந்து கடத்தி வரப்பட்டது என்பதும் தெரியவந்தது. பாதுகாப்புத்துறையின் நிதியை தீவிரவாத செயல்பாடுகளுக்கு திருப்பிவிட்டதாகவும் புரோகித் கூறியிருந்தார். கஷ்மீரைச் சார்ந்த 25 முஸ்லிம் இளைஞர்கள் மூலமாக ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருளை புனேக்கு கொண்டுவந்ததாகவும், நாட்டில் குண்டுவெடிப்பை நிகழ்த்த முஸ்லிம் இளைஞர்களை உபயோகித்ததாகவும் பெங்களூரில் நடத்தப்பட்ட நார்கோ அனாலிசிஸ்(உண்மை கண்டறியும் சோதனை) சோதனையில் புரோகித் கூறியிருந்தார்.
அதேவேளையில், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிவிக்கவே புரோகித் நீதிமன்றத்தில் நாடகமாடுவதாக முன்னாள் மஹாராஷ்ட்ரா ஐ.ஜி எஸ்.எம்.முஷ்ரிஃப் கூறியுள்ளார். கர்காரேக்கு பிறகு மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு முடங்கிவிட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.