இறை நெருக்கத்திற்கான எளிய வழி
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அனைத்து தேவைகளுக்காகவும் அல்லாஹ்விடத்தில் துஆச் செய்பவர்களாக இருந்தார்கள். அதிலும் குறிப்பாக காலை மாலை நேரங்களில் வழமையாக சில துஆக்களை ஓதுபவர்களாகவும் இருந்தார்கள். அப்போது அபூபக்கர் ஸித்தீக் (ரளி) அவர்கள் தனக்கு அத்தகையதொரு துஆவை கற்றுக்கொடுக்கும்படி ரஸுல் (ஸல்) அவர்களிடம் வேண்டினார்கள். பொதுவாக ஸஹாபிகள் தனக்கென்று பிரத்யேகமாக அல்லாஹ்வின் தூதரிடத்தில் வணக்க வழிபாட்டு முறைகளைப் பற்றி விசாரித்தாலும், ரஸுல் (ஸல்) அவர்கள் பதில் வழிமுறையானது அனைவருக்கும் பொதுவானதாகும். அவ்வகையில் நாமும் அதனை தெரிந்து நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.அபூபக்கர் (ரளி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடத்தில், 'யாரஸுலுல்லாஹ்! எனக்கு காலையிலும் மாலையிலும் ஓதுவதற்கு ஒரு துஆவை கற்றுத் தாருங்கள் எனக்கூறிய போது,
اَللٌهُمَّ فَاطِرَ السٌَماَوَاتِ وَاْلأَرْضِ , عَالِمَ اْلغَيْبِ والشَّهاَدَةِ , رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيْكَهُ , أَشْهَدُ أَنْ لاَ اِلهَ اِلاَّ أنْتَ , أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِيْ وَشَرِّ الشَيْطاَنِ وَشِرْكِهِ ...
'அல்லாஹும்ம பாதிரஸ்ஸமாவாத்தி வல்அர்ழ், ஆலிமல் கைபி வஷ்ஷஹாதா, ரப்ப குல்லி ஷையின் வமலீகஹு, அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்த, அவூதுபிக மின் ஷர்ரி நஃப்ஸீ, வஷர்ரிஷ் ஷைத்தானி வஷிர்கிஹி' என்ற துஆவை நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள்.பொருள்: என் இறைவா! மனித அறிவிற்கு அப்பாற்பட்டவைகளையும் அவனுக்கு தெரிபவற்றையும் அறிந்தவன் நீ! நீயே வானங்களையும் பூமியையும் படைத்தவன். அனைத்தின் அதிகாரமும் உனது கைகளியே தங்கியுள்ளது. உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நான் சாட்சி பகருகிறேன். எனது உள்ளத்தின் தீங்கை விட்டும், ஷைத்தானின் தீங்குகளை விட்டும், அவனது சூழ்ச்சிகளை விட்டும் உன்னிடத்தில் பாதுகாவல் தேடுகிறேன். (நூல்கள்: இமாம் புஹாரியின் அதபுல் முஃப்ரத், நஸயீ, அபூதாவூத், திர்மிதி, மற்றும் பல)
எப்போதெல்லாம் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடத்தில் ஏதேனும் தேவைக்காக துஆச் செய்கிறார்களோ, அப்போது தெளிவான வார்த்தைகளில் அல்லாஹ்வை அவனது மாட்சிமைக்கேற்ப புகழ்வார்கள். அவனது ஏகத்துவத்தையும், பிரபஞ்சத்தை படைத்து நிர்வகித்து வருவதையும் உறுதியோடு ஒப்புக் கொள்வார்கள். இம்முறை அதிகமாக வலியுத்தப்பட்டதாகும். ஏனெனில் இது பிரார்த்திப்பவருக்கும் படைப்பாளனுக்கும் இடையிலான உண்மையான சரியான தொடர்பை நிறுவுவதாகும்.
நாம் அனைவரும் அவனது படைப்புகளாகவும், அவனது உதவி, பாதுகாப்பு மற்றும் மன்னிப்பை வேண்டி நிற்கும் அடிமைகளாகவும் இருக்கிறோம். இந்நிலையில் நமது இந்த வாக்குமூலம், நமது வேண்டுகோளை அதிக நேர்மையுள்ளதாக ஆக்கும்.
இங்கே அபூபக்கர் (ரலி) அவர்கள் தனது தேவைக்காக முற்படும் போது, அவனது அந்தஸ்தை ஒப்புக் கொள்ளும் வாசகங்களை கூறி துவங்குமாறு நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுக்கிறார்கள். அல்லாஹ் நமது உலகத்தையும், அதற்கு அப்பாலும் அறிந்தவன் என நாம் கூறும் பொழுது, நமது எண்ணங்களையும் அவன் அறிகிறான் என நினைவு படுத்திக் கொள்கிறோம்.
இதன் மூலம் நாம் நமது பிரார்த்தனைகளை உண்மையானவைகளாக்கி கொள்ள முயற்சிப்பதோடு, அல்லாஹ்வுக்கு விருப்பமில்லாதவைகளை விட்டு விலகவும் முயலுகிறோம்.
அவனே வானங்களையும் பூமியையும் படைத்தவன் என நாம் கூறும் போது, இந்த பிரபஞ்சத்தைக் காட்டிலும் உயர்ந்ததாக அவனது கடவுள் தலைமையை நாம் ஒப்புக் கொள்கிறோம். பரந்த வெளியில் சிறிய கோளத்தில் நாம் ஓர் அற்ப படைப்பு என்பதனையும் உணர்ந்து கொள்கிறோம். என்றாலும் நம்முடைய அல்லது ஷைத்தானுடைய தீங்குகளிலிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடும்போது மீண்டும் மீண்டும் இதனை மொழிவதால் ஏகத்துவ நம்பிக்கையை வலுப்படுத்திக் கொள்கிறோம்.
தீய எண்ணங்களும், செய்கைகளும் இரு வகைப்படும். அவை சுய விருப்பங்களாகவோ அல்லது அல்லாஹ்வின் விருப்பத்திற்கு மாற்றமானவைகளைச் செய்யத் தூண்டும் ஷைத்தானின் சூழ்ச்சிகளாகவோ இருக்கும்.
இதே செய்தி ஒன்றுக்கு மேற்பட்ட பல அறிவிப்புக்களில் காணப்படுகின்றது.
அபூ ரஷீத் அல் ஹபரானி அவர்களின் வழியில் அறிவிக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிடுவது சிறந்ததாகும். அவர் கூறுகிறார். நான் அப்துல்லாஹ் பின் அம்ர் (ஒரு ஸஹாபி) அவர்களை சந்தித்து நபி (ஸல்) அவர்கள் மூலமாக கற்றவற்றில் ஒன்றைச் சொல்லுமாறு வேண்டினேன். அவர் என்னிடத்தில் ஒரு கடதாசியைத் தந்து, அதனை நபி (ஸல்) அவர்கள் எழுதித்தர பணித்ததாகக் கூறினார். அதில் குறிப்பிட்டிருந்ததாவது: அபூபக்கர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் காலையிலும் மாலையிலும் பிரார்த்திப்பதற்காக ஒன்றை கற்றுத்தரக் கோரினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'என் இறைவனே! வானங்களையும் பூமியையும் படைத்தவன் நீயே! வெளிப்படையானவைகளையும், மனித அறிவுக்கு அப்பாற்பட்டவைகளையும் அறிந்தவனே! நீயே அனைத்தின் உரிமையாளனாகவும், அதிபதியாகவும் இருக்கின்றாய். எனது ஆன்மாவின் தீங்குகளை விட்டும், ஷைத்தானின் தீங்கு மற்றும் சூழ்ச்சிகளை விட்டும் உனது பாதுகாவலைத் தேடுகிறேன். எனக்கு நானே தீங்கு செய்து கொள்வதை விட்டும் மற்ற முஸ்லிமிற்கு தீங்கு செய்வதை விட்டும் உன்னிடத்தில் பாதுகாவல் தேடுகிறேன் எனக் கூறும்படி அபூபக்கருக்கு கற்றுக் கொடுத்தார்கள். (இமாம் புஹாரியின் அதபுல் முஃப்ரத், நஸயீ, அபூதாவூத் மற்றும் திர்மிதி)
முன் சொல்லப்பட்ட ஹதீஸில் குறிப்பிடப்பட்டிருந்ததைக் காட்டிலும் மேலதிகமாக இவ்வறிவிப்பில் கீழ்கண்ட வாசகங்கள் அரபியில் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
وَ اَنْ أَقْتَرِفَ عَلىَ نَفْسِي سُوْءاً , أَوْ أَجُرَّهُ اِلىَ مُسْلِمٍ.
'வஅன் அக்தரிஃப அலா நஃப்ஸீ சூஅன் அவ் அஜுர்ரஹு இலா முஸ்லிம்'