பெங்களூர் : கர்நாடகா வக்ஃபோர்டில் சொத்துக்களை கையாள்வதில் ரூ.2.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக ஊழல் நடந்துள்ளதாக சிறுபான்மை கமிஷன் சேர்மன் அன்வர் மணிப்பாடு தலைமையிலான விசாரண குழு கண்டுபிடித்துள்ளது.
இக்குழுவின் அறிக்கை திங்கள் கிழமை காலை முதல்வர் டி.வி.சதானந்த கவுடாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சதானந்த கவுடா கூறியுள்ளார்.
பிரபல அரசியல் தலைவர்கள் உள்பட 38 பேர் வக்ஃபோர்டு ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளார்கள்.கர்நாடகா மாநிலத்தின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலமும், சொத்துக்களும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய நிலங்கள் குறைந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பத்திரிகை செய்திகள் மற்றும் புகார்களை தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அரசு அன்வர் மணிப்பாடு தலைமையில் 3 உறுப்பினர்களை கொண்ட விசாரணை குழுவை நியமித்தது. வக்ஃபோர்டிற்கு சொந்தமான 54 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் 22 ஆயிரம் முதல் 27 ஆயிரம் ஏக்கர் வரையிலான நிலம் கைவசப்படுத்தி மறுவிலைக்கு விற்கப்பட்டுள்ளன. வக்ஃப் போர்டின் மொத்தம் நான்கு லட்சம் கோடி ரூபாய் சொத்தில் 2.1 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்களான ரோஷன் பேக், என்.ஐ.ஹாரிஸ், தன்வீர் சேட், கமருல் இஸ்லாம், மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ ஸமீர் அஹ்மத் கான், முன்னாள் மத்திய அமைச்சர் சி.எம்.இப்ராஹீம், முன்னாள் கர்நாடகா வக்ஃப் அமைச்சர் ஹெச்.எம்.ஹிண்டஸ் கேரி முன்னாள் அமைச்சர் இக்பால் அன்ஸாரி ஆகியோர் உள்பட 38 பேர் குற்றவாளிகள் என்று விசாரணை குழு கண்டுபிடித்துள்ளது.
மாநிலங்களவையில் முக்கிய காங்கிரஸ் தலைவர்களும் குற்றவாளிகள் என்று அறிக்கை கூறுகிறது. ஆனால்,யாரெல்லாம் குற்றவாளிகள் என்று வெளியிட விசாரணை குழு தலைவர் அன்வர் மணிப்பாடு மறுத்துவிட்டார். பிரபல அரசியல் தலைவர்கள், பல்வேறு வக்ஃப் போர்டு உறுப்பினர்கள், வக்ஃப் போர்டு அதிகாரிகள், இடைத்தரகர்கள் ஆகியோர் இதில் அடங்குவர்.