கெய்ரோ : எகிப்து அதிபர் தேர்தலில் தங்களது வேட்பாளரை நிறுத்தமாட்டோம் என்ற முடிவில் இஃவானுல் முஸ்லிமீன் அமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
இஃவானுல் முஸ்லிமீனின் அரசியல் பிரிவான எஃப்.ஜே.பிக்கு பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றம் பரிந்துரைத்த புதிய அமைச்சரவையை நியமிக்க ராணுவ அரசு மறுத்த சூழலில் முந்தைய தீர்மானத்தை இஃவானுல் முஸ்லிமீன் மறுபரிசீலனைச் செய்யும் முடிவில் உள்ளது.
இஃவானுல் முஸ்லிமீனின் பொதுச்செயலாளர் மஹ்மூத் ஹுஸைன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுத்தொடர்பாக குறிப்பாக தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சரவையை நியமிப்பது தொடர்பான பரிந்துரையை நிராகரித்ததுடன், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த வேட்பாளர்கள் இஃவானுல் முஸ்லிமீனின் ஆதரவை பெறுவதில் இருந்து தடுப்பதற்கும் எகிப்தின் ராணுவ அரசு முயற்சிப்பதாக ஹுஸைன் குற்றம் சாட்டியுள்ளார்.
சிலர் மிதவாதத்தின் பெயரால் மக்களிடமிருந்து விலக முயலும் வேளையில், இதர சிலரோ ராணுவ அரசின் நிர்பந்தம் காரணமாக விலகி நிற்கின்றனர். இத்தகையதொரு சூழலில் தங்களது வேட்பாளரை நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை என்று ஹுஸைன் கூறுகிறார். அதேவேளையில் தலைமையின் உத்தரவை மீறி இஃவான்களின் இளைஞர் பிரிவு அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிபர் வேட்பாளர் அப்துல் முனீம் அப்துல் ஃபத்தாஹிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதும் இஃவான் தலைமையின் புதிய முடிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.
மிதவாதிகளையும், மேற்கத்திய நாடுகளையும் உடனடியாக பகைக்க வேண்டாம் என்று கருதி அதிபர் பதவிக்கு போட்டியிடுவதில்லை என்று முன்பு தீர்மானித்த இஃவானுல் முஸ்லிமீனின் தலைமை தற்பொழுது பெரியதொரு நெருக்கடியில் ஆழ்ந்துள்ளதாக எதிர்தரப்பினர் கூறுகின்றனர். அமைச்சரவையை கலைக்கவும், புதிய அமைச்சரவையை நியமிக்கவும் ராணுவ கவுன்சிலுக்கு அதிகாரம் உள்ளது. ராணுவம் நியமித்த அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர பாராளுமன்றத்திற்கு தற்காலிக அரசியல் சாசனம் அனுமதி அளிக்கவில்லை.