எகிப்தில் எதிர்வரும் மே 23, 24 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், இஹ்வான்கள் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் எவரையும் வேட்பாளராக நியமிப்பதில்லையென இயக்கத்தின் ஷூறா சபை தீர்மானித்திருந்தது.
பொருத்தமான ஒருவரை ஆதரிப்பது என்பதே அவர்களது நிலைப்பாடாக இருந்தது. பலரையும் இதற்கென அணுகியபோது அவர்கள் முன்வராத நிலையே காணப்பட்டது என இஹ்வான்களது கட்சியான எப்.ஜே.பி. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இராணுவத்தினர் இஹ்வான்களுக்கு எதிரான போக்கை எடுத்துவருவதாக, இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலாநிதி மஹ்மூத் ஹுஸைன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதன் பின்னர், இஹ்வான்கள் வேட்பாளர் ஒருவரை நேரடியாகக் களமிறக்கலாம் என்ற செய்தியை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அநேகமாக இயக்கத்தின் பிரதித் தலைவரான பொறியியலாளர் ஹைரத் ஷாதிரை இதற்கு அவர்கள் நியமிக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது.
எது எவ்வாறாயினும், இயக்கத்தின் மத்திய ஷூறாவே இறுதித் தீர்மானத்தை எடுக்கும். இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட இயக்கத்தின் ஷூறா சபை கூட்டம் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.