புதுடெல்லி: சட்டவிரோத செயல்கள் தடைச் சட்டத்தின் அடிப்படையில்(யு.எ.பி.எ) நிரபராதிகளை கைது செய்து தீவிரவாத முத்திரை குத்துவதை நிறுத்தவேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் முதன்மை நீதிபதி ரஜீந்தர் சச்சார் கோரிக்கை விடுத்துள்ளார்.
‘முஸ்லிம் இளைஞர்களின் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் டெல்லியில் ஆல் இந்தியா மில்லி கவுன்சில் ஏற்பாடுச்செய்த தேசிய கருத்தரங்கை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார் சச்சார்.
குற்றவாளிகளான போலீஸ் அதிகாரிகளை பாதுகாப்பதற்காக 2008-ஆம் ஆண்டு யு.எ.பி.எ சட்டத்தில் திருத்தம் செய்ததை தொடர்ந்து இச்சட்டம் பொடா சட்டத்தை விட பயங்கரமானது என்று மனித உரிமை ஆர்வலர் ரவி நாயர் கூறினார்.
அமெரிக்காவில் தீவிரவாத எதிர்ப்பு மையத்தால் யாரையும் கைது செய்ய உரிமையில்லை. ஆனால், மத்திய அரசு உருவாக்க இருக்கும் தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையத்திற்கு சந்தேகத்தின் பெயரால் யாரையும் கைது செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனை நீக்கவேண்டும் என்று ரவிநாயர் கோரிக்கை விடுத்தார்.
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் யு.எ.பி.எ சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களை தேசிய அளவில் ஒன்றிணைத்து எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும் என்று இந்நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தெரிவித்தார்.
‘யு.ஏ.பி.ஏ மசோதா 2011′ வாபஸ் பெறுக, முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பை நிறுத்துக, பயங்கரவாத முத்திரைக்குத்தி சிறையிலடைத்து பின்னர் நிரபராதிகள் என்று நிரூபணமாகி விடுதலைச் செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குக, இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பிற்கு சட்டம் இயற்றுக ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மாநாட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் ‘நீதிக்காக ஒன்றிணைவோம்’ என்ற பெயரில் பிரச்சாரம் நடத்தவும் முடிவுச்செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மில்லி கவுன்சில் தலைவர் மவ்லானா அப்துல்லாஹ் முகீஸி, ஆம்னஸ்டி இண்டர்நேசனல் இந்திய இயக்குநர் முகுல் சர்மா, முன்னாள் எம்.பி.செய்யத் ஷஹாபுதீன், ஜமாஅத்தே இஸ்லாமி செயலாளர் இஜாஸ் அஹ்மத் அஸ்லம், பிரபல வழக்கறிஞர் என்.டி.பஞ்சோலி, தபன் போஸ் ஆகியோர் பங்கேற்றனர்.