நமது பெண் சமுதாயத்தை இந்த இலக்கை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டிய பெரும் பொறுப்பும் கடமையும் ஆண் சமுதாயத்திற்கு, குறிப்பாக பெண் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெற்றோருக்கு இருக்கிறது.
மனித இனத்தைப் படைத்த இறைவன் ஆண்/பெண் இருபாலரையும் சமநீதியுடன் சரிசமமாகத் தான் படைத்துள்ளான். ஒருவரை உயர்த்தி ஒருவரை தாழ்த்திப் படைப்பவன் அல்ல இறைவன். “அல்லாஹ் நீதி செலுத்துபவன்” என்பதை அல்குர் ஆனில் ஆணித்தரமாக வலியுறுத்துகிறான். ஆனால் இந்த பூமியில் மனித இனம் படைக்கப்பட்டதற்கான காரணங்களில் ஆண் / பெண் இருபாலருக்கும் வேறுபட்ட செயல்திட்டங்களை நிறைவேற்றச் சொல்லி அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். முதலில் ஆணைப் படைத்து பிறகு ஆணிலிருந்து பெண்ணைப் படைத்து இந்த இருவருக்குமான செயல்திட்டத்தைக் கொடுத்து அந்தச் செயல் திட்டத்திற்கு ஏற்ப அவர்களின் உடற் கூறுகளையும் உள்ளங்களையும் படைத்துள்ளான்.
இருபாலருக்குமான செயல்திட்டங்களின் அடிப்படை நோக்கம் ஒன்றாக இருந்தாலும் அதை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகள் ஒவ்வொரு காலத்திற்கும் வேறுவேறு வடிவங்களாக இருந்து வருகிறது. அறிவும் தொழில் நுட்பமும் மிகைத்திருக்கும் இன்றைய காலத்தில் பெண்களின் உடற்கூறு தன்மைக்கு ஏற்ப அறிவுத் துறையான கல்வித் துறையில் அல்லாஹ்வுடைய செயல் திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு பெண்களுக்கு இருக்கிறது.
எந்த ஒரு சமுதாயத்தில் பெண்கள் அறிவும் பண்பாடும் நிறைந்தவர்களாக விளங்குகிறார்களோ அந்தச் சமுதாயம் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் என்பது உறுதி. காரணம் எல்லா தன்மைகளையும் உற்பத்தி செய்யும் ஆற்றல் பெண்களிடமே இடம் பெற்றுள்ளது. அதனால் தான் மனித குலத்தைப் படைத்த இறைவன் பெண் இனத்தை “விளை நிலங்கள்” என்று அழகாகக் குறிப்பிடுகின்றான்.
ஆண் பெறுகின்ற கல்வி, பண்பாடு மற்றும் கலாச்சாரம் சார்ந்த தன்மைகளுக்கு பல்கிப் பெருக்குகின்ற ஆற்றல் கிடையாது. அது அவனோடு மட்டுமே நிறுத்தப்படுகிறது. ஆனால் பெண் பெறுகின்ற கல்வியின் மூலம் எல்லாவிதமான கலாச்சாரத் தன்மைகளையும் பலவாறாகப் பெருக்குகின்ற ஆற்றலை இறைவன் பெண்களுக்கு வழங்கி இருக்கின்றான்.
குழந்தைகளிடம் தகப்பனுடைய சிந்தனையின் தாக்கத்தைக் காட்டிலும் தாயுடைய சிந்தனையின் தாக்கமே அதிகமாக இருக்கும் என்பதே இதற்கு சாட்சி. ஆக ஒரு சமூகத்தைச் சிறந்த சமூகமாகக் கட்டி எழுப்புகின்ற ஆற்றல் அனைத்தும் பெண்களிடமே இருக்கிறது.
இத்தகைய ஆற்றல் பொருத்தப்பட்டுள்ள பெண் சமுதாயத்தை அல்லாஹ்வும் அவனது து£தர் பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் காட்டித் தந்த இஸ்லாமிய வழிமுறையில் இன்றைய நவீன காலத்திற்கேற்ப வளர்த்தெடுத்தால் அடுத்த 20 ஆண்டுகளில் தமிழக முஸ்லிம் சமுதாயம் மறுமலர்ச்சி அடையும் என்பதில் சந்தேகமில்லை.
அப்படி வளர்த்தெடுப்பதற்கும் அனைத்து விதமான மறுமலர்ச்சிக்கும் அடிப்படையாக இருப்பது கல்வி தான். அந்தக் கல்வித் துறையைத் தங்களுக்கான வாழ்வியல் துறையாகத் தேர்வு செய்யும் ஆர்வத்தை வளருகின்ற போதே பெண் குழந்தைகளுக்கு விதைக்க வேண்டும். இன்று தமிழக முஸ்லிம்களின் பள்ளிக் கல்விமுறை இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து பாதை மாறிச் செல்லும் மக்களை உருவாக்கும் கல்வியாகவும் கல்வி முறையாகவும் இருக்கிறது.
இதனால் அதனைக் கற்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாத்தை விட்டுப் பாதை மாறிச் செல்கின்றனர். மனிதன் இந்த பூமியில் படைக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணத்தைக் கூட விளங்காமல் வளர்க்கப்படுகின்றனர்.
முஸ்லிம்களை இஸ்லாத்தில் பிடிப்புள்ள மக்களாக மாற்ற வேண்டும். அதற்கு முஸ்லிம்களின் பள்ளிக் கல்வி முழுவதும் இஸ்லாமிய அடிப்படையில் அமைந்திட வேண்டும்.
12 ஆம் வகுப்பு முடிக்கும் போதே ஆண் பெண் இருபாலரும் அல்குர்ஆனையும் ஹதீஸையும் இஸ்லாமியப் பண்பாடுகளையும் பேணுபவர்களாக உருவாக்கப்பட வேண்டும். ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் இன்னும் 20 ஆண்டுகளில் இப்படி கல்வி பயிலும் நிலையை ஏற்படுத்திட வேண்டும். அதற்கு இஸ்லாத்தை விளங்கிய ஆயிரக்கணக்கான முஸ்லிம் ஆசிரியைகள் தேவை. ஆயிரக்கணக்கான இஸ்லாமிய நர்ஸரி பிரைமரி ஸ்கூல் மற்றும் இருபாலருக்கும் தனித்தனியே ஆன உயர்நிலை, மேனிலைப் பள்ளிகள் தேவை.
இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இன்று படித்து வரும் பெண்களை கல்வியாளர்களாக உயர்கல்வியில் ஆசிரியைப் பணியை இலக்காக வைத்து உருவாக்கினால் தான் சாத்தியமாகும். ஆண்கள் தொழில் துறையில் ஈட்டுகின்ற பொருளாதாரமும் அவரது மனைவி, மகள், மருமகள் ஆகியோரின் கல்விப் பணியும் ஒரு சேர கூடினால் முஸ்லிம் சமுதாயம் மறுமலர்ச்சி அடையும் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.
மனமாற்றம் தேவை :
மேலும் இதற்கெல்லாம் அடிப்படையாக இன்றைய ஆண்களிடம் மிகப்பெரிய மனமாற்றம் ஏற்பட வேண்டும். இஸ்லாமிய மார்க்கம் எல்லாக் காலத்திற்கும் பொருந்தும் தன்மையுடையது என்பதை நாம் அறிந்துள்ளோம். ஒவ்வொரு காலத்திற்குத் தகுந்தார் போல இஸ்லாமிய மார்க்கத்தை தங்களது வாழ்வியல் வழிமுறைகள் மூலம் பொருத்த வேண்டிய பொறுப்பை முஸ்லிம்களிடம் இறைவன் அமானிதமாகக் கொடுத்துள்ளான்.
விஞ்ஞானமும் நவீன தொழில் நுட்பமும் மிகைத்து நிற்கும் இன்றைய உலகில், அறிவால் உலகை வெல்லும் வாய்ப்புகள் நிறைந்த இன்றைய உலகில் முஸ்லிம் சமுதாயத்தின் ஆணும் பெண்ணும் அந்த அறிவாற்றலில் மிகைத்தவர்களாக – அதையே எதிர்கால தலைமுறைக்கு போதித்து உருவாக்குபவர்களாக – அதன் மூலம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் உலகின் தலைசிறந்த மார்க்கமாக, சமூகமாக நிலை நிறுத்துபவர்களாக தங்களது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.
குடும்பவியலிலும் மாற்றம் தேவை :
பெண்களின் வாழ்வாதாரம், உரிமைகள் தொடர்பாக இஸ்லாம் காட்டாத கட்டுப்பாடுகள், இல்லாத சமூக வாழ்க்கை முறை, குடும்பவியல் பழக்க வழக்கங்கள் பல தலைமுறைகளாக அறியாமையின் காரணமாக முஸ்லிம்களிடம் குத்தகை எடுத்துக் குடி கொண்டிருந்தது. அதனாலேயே இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்பன போன்ற குற்றச் சாட்டுகள் அனைத்தும் இஸ்லாமிய மார்க்கத்தின் மீது ஈட்டிகளாய் குத்துகின்றன.
முஸ்லிம்களின் அறியாமை மற்றும் மார்க்கத்தை விளங்காத நடவடிக்கைகளால் இஸ்லாமிய மார்க்கத்தின் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. தற்போது முஸ்லிம்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது குறிப்பாக பெண்களிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
என்றாலும் கூட ஆண்டாண்டு காலமாக பெண்களை அடிமைப்படுத்தியே ஆனந்தம் அடைந்த ஆண்கள் மற்றும் அவர்களின் இன்றைய வாரிசுகள் இன்றும் அந்த மனநிலையில் இருந்து மாறவில்லை. இஸ்லாத்தின் சட்ட திட்டங்களையும் நபிகள் நாயகத்தின் (ஸல்) வழிகாட்டு தலையும் பெண்களின் உரிமைகள் என்று வருகிற போது மட்டும் வசதியாக ஒதுக்கி வைக்கின்றனர்.
தனது மனைவி படித்தவள். அவளுக்கு சுயஅறிவு, சுயசிந்தனை இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் ஒருசில ஆண்களுக்குத் தான் இருக்கிறது. ஒருசில கருத்துக்கள் சொன்னால் அல்லது கணவனின் தவறுகளை சுட்டிக் காட்டினால் “இவள் படித்த திமிரில் பேசுகிறாள்” என்ற வார்த்தை தான் கணவனிடமிருந்து வருகிறது. ஆணுக்கு பெண் அடிமை என்கிற சிந்தனை பிற மதக்கோட்பாட்டுச் சிந்தனையாகும். அது இஸ்லாமிய சிந்தனை அல்ல. ஆனால் முஸ்லிம்களிடம் குடி கொண்டுள்ளது. கல்வியும் அறிவும் உலகை ஆளும் துறைகளாக மாறியுள்ள இன்றைய நிலைக்கு தகுந்தாற் போல ஆண் இனமும் தங்களது மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தங்களுக்கான இஸ்லாமியப் பொறுப்புகளை உணர வேண்டும்.
அதேபோல இஸ்லாம் இல்லாத இன்றைய வறண்டு போன கல்விமுறை பெண்களையும் தங்களுக்கான எல்லை எது என்று தெரியாமல் ஆக்கியுள்ளது. ஆண் செய்கின்ற எதுவும் பெண்ணுக்கும் பொருந்தும் என்ற இயற்கைக்கு ஒவ்வாத இஸ்லாம் காட்டாத எண்ணம் ஏற்பட்டு வருகிறது.
பெண்கள் தொடர்பான இஸ்லாமியச் சட்டங்களை பெண்கள் முழுமையாக தெரிந்து கொள்கின்ற போது தான், அவற்றைப் பின்பற்றுகின்ற போதுதான் முரண்பாடுகளும் எல்லை மீறல்களும் நடைபெறாமல் பாதுகாக்க இயலும். குடும்ப வாழ்வும் வெற்றி பெறும்.
இன்றைய பி.ஏ. அல்லது பி.ஈ. பட்டதாரிப் பெண்ணிடம் தனக்கான கணவர் தன்னை விட கூடுதலாகப் படித்திருக்க வேண்டும் என்கிற சிந்தனை பெருகி இருக்கிறது. டாக்டருக்குப் படித்த பெண்ணுக்கு டாக்டர் மாப்பிள்ளை தான் வேண்டும் என்ற மனநிலையில் மாப்பிள்ளை தேடும் படலம் நடக்கிறது.
இது இன்றைய நவீன பெண்ணடிமைத் தனம் என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய கல்வி முறையின் மிக மோசமான விளைவுகள் தான் இவை. ஒரு மார்க்கம் படித்த பெண் ஆலிமா தனக்கான கணவனை தேடும்போது அவன் முதலில் ஆண் மகனாக, நல்லவனாக, வணக்க வழிபாடுகள் செய்பவனாக, உழைப்பவனாக, கல்வி அறிவு பெற்றவனாக இருக்க வேண்டும் என்பதையே விரும்புகிறாள்.
வெறுமனே பட்டங்கள் பெறுவதால் மட்டும் வாழ்வில் உண்மையான விழுமங்கள் விளங்கி விடும் என்பதும்அர்த்தமல்ல. இஸ்லாமிய அடிப்படையில் சீர்து£க்கிப் பார்த்து அவற்றின் குறைகளை இன்றைய எதார்த்த வாழ்வின் இந்தத் தடைகளைக் களைந்து இனி எதிர்காலத்திற்கும் சமுதாயத்திற்கும் பயனளிக்கும் வண்ணம் முஸ்லிம் பெண்கள் கல்வித்துறையை முழுமையாக ஆளுமை செய்திட தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்று படித்துக் கொண்டிருக்கும் பெண்களை உயர்கல்வியில் கம்ப்யூட்டர் படிப்பைத் தவிர்த்துவிட்டு வேறு எந்தத் துறையைத் தேர்வு செய்தாலும் அதை ஆய்வு நிலை வரை றிலீபீ படிக்க வைக்க வேண்டும். கூடவே இஸ்லாமிய மார்க்கத்தின் அனைத்து சட்டதிட்டங்களையும் அவர்களுக்கு கற்றுத்தர வேண்டியது பெற்றோரின் கடமை.
இஸ்லாம் இல்லாத பெண்ணால் வாழ்விலும் கல்வியிலும் வெற்றி பெறவே இயலாது. அத்தகைய பெண்களால் இம்மையிலும் சரி மறுமையிலும் சரி வெற்றி பெறவே இயலாது. உயர்கல்வியில் இஸ்லாமியப் படிப்புகளை தேர்வு செய்தால் அது இன்னும் நமது இலக்கை வேகமாக அடைய பேருதவி புரியும்.
கல்வியாளர்களாக உருவாக வேண்டும் என்ற வேட்கையோடு ஆசிரியர் பணியை தேர்வு செய்யும் பெண்களையும் பள்ளிக் கூடங்களை உருவாக்கி அவற்றை நிர்வாகம் செய்திடும் துறையை நோக்கி முன்னேறும் பெண்களையும் கண்டறிந்து சமுதாயத்தில் வசதி வாய்ப்பைப் பெற்றவர்கள் தங்களது பகுதிகளில் இஸ்லாமிய அடிப்படையிலான பள்ளிகளைத் துவங்கிட முன்வர வேண்டும்.
அதற்கு அந்தப் பெண்களுக்கு பொறுப்பு ஏற்றுள்ள ஆண்கள் முழுமையான ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டும். பெண் வீட்டிற்குள்ளே பூட்டப்பட வேண்டியவள் என்றசிந்தனை சிறிது இருந்தாலும் அது சமுதாய முன்னேற்றதிற்கு தடையாகவே அமையும்.