அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் நரேந்திர மோடியின் பங்கினை நிரூபிக்கும்விதமாக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்ததை தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியான சஞ்சீவ்பட் சி.பி.ஐயிடம் முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களை அளித்துள்ளார்.
குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை, போலி என்கவுண்டர் கொலைகள் ஆகியவற்றில் அரசியல் கட்சி தலைவர்கள், ஆட்சியாளர்கள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோரின் பங்கினை நிரூபிக்கும் 600 பக்கங்களைக் கொண்ட ஆவணங்களை சொஹ்ரபுத்தீன் ஷேக் என்கவுண்டர் தொடர்பாக நேற்று முன் தினம் விசாரணை நடத்தவந்த சி.பி.ஐயிடம் பட் ஒப்படைத்தார்.
ஆர்.எஸ்.எஸ் கொள்கைகள் மோடி அரசின் தவிர்க்க முடியாத பகுதியாக எவ்வாறு செயல்படுகிறது என்பதனை நிரூபிக்கும் சில ஆவணங்கள், 2002-ஆம் ஆண்டு குஜராத் இனப்படுகொலை வழக்கில் உச்சநீதிமன்றத்திற்கும், இதர நீதிமன்றங்களுக்கும் செல்வதற்கு குற்றஞ்சாட்டப்பட்ட பா.ஜ.க தலைவர்களுடன் ரகசிய விபரங்களை பகிர்ந்துக் கொண்டதை நிரூபிக்கும் ஆவணங்கள் ஆகியன இவற்றில் அடங்கியுள்ளன.
மாநில அட்வக்கேட் ஜெனரல்-ஆர்.எஸ்.எஸ் இடையேயான உறவும், முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு சேகரித்த விபங்களை அட்வக்கேட் ஜெனரல் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு அளித்தது தொடர்பான ஆவணங்கள் ஆகியன சஞ்சீவ் பட் சி.பி.ஐயிடம் ஒப்படைத்தவற்றில் அடங்கும்.