டெல்லி:முல்லைப் பெரியாறு அணை பகுதியில் மிக குறைந்த அளவிலே நில அதிர்ச்சி ஏற்பட வாய்ப்பிருப்பதால் அணைக்கு அதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என நிபுணர் குழு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் நிபுணர்குழுவிற்கு எதிராக கேரளா அரசு உச்சநீதிமன்ற உயர்மட்டக் குழுவினரிடம் புகார் அளித்துள்ளது.
அணைக்கட்டு பகுதிக்கு நிபுணர்களான சி.டி.தத்தா, டி.கே.மேத்தா ஆகிய நிபுணர்கள் வருகை தந்தபோது கேரள அதிகாரிகளுடன் அவமரியாதையாக நடந்துக்கொண்டதாகவும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறியதாகவும் கேரளா புகார் அளித்துள்ளது.தமிழ்நாட்டிற்கு ஆதரவான நிலையை நிபுணர்குழு தங்களது அறிக்கையில் தெரிவிக்கும் என்பதால் கேரளா நிபுணர் குழுவின் ஆய்வை புறக்கணித்திருந்தது.
முல்லைப் பெரியாறு அணை நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கேரள அரசு புகார் கூறியதைத் தொடர்ந்து சமீபத்தில் தத்தே, மேத்தா ஆகிய நிபுணர்களைக் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த தலைமையிலான ஐவர் குழு அணைக்கு நேரடியாக அனுப்பி ஆய்வு செய்தது. அப்போது தங்களது இஷ்டத்திற்கு நடக்குமாறு குழுவினரை கேரளத் தரப்பு வலியுறுத்தியது. ஆனால் அதை நிபுணர் குழு நிராகரித்து விட்டது. இதனால் கடும் வாக்குவாதம் நடைபெற்றது.
இந்தநிலையில் இன்று ஐவர் குழு கூடியது. அப்போது குழு உறுப்பினர்களுடன் தமிழக, கேரள வக்கீல்களும் ஆஜராகினர். அப்போது தத்தே, மேத்தா ஆகியோர் அடங்கிய நிபுணர் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையில் தாங்கள் சமீபத்தில் அணைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியது குறித்த விவரங்களையும், முடிவுகளையும் இரு நிபுணர்களும் தெரிவித்திருந்தனர். அதில், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் நிலநடுக்கம் மிக மிக சிறிய அளவிலேயே ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதால், அணைக்கு நிலநடுக்கத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.