கடையநல்லூர் : கடையநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மீண்டும் மர்ம காய்ச்சல் தலை தூக்கியுள்ளதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாக மர்ம காய்ச்சல் பொது மக்களை அச்சுறுத்தி வரு கிறது. இதுவரை 50க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் ரத்ததில் உள்ள பிலேட்லேட்ஸ் அணுக்கள் குறைவதால் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் இறந்து போகும் சூழ்நிலை உள்ளது.
இதுகுறித்து பூனா, பெங்களூரு உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தினர் கடையநல்லூர் பகுதியில் பல்வேறு சோதனை நடத்தியும் எவ்வித பலனுமில்லை. குறிப்பாக மழைக்காலத்தில் இந்த காய்ச்சல் தலைதூக்கி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. கடந்த சில தினங்களாக மீண்டும் இந்த மர்ம காய்ச்சல் பரவி வருவதால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரத்தத்தில் உள்ள பிலேட்லெட்ஸ் அணுக்கள் குறைவதால் நெல்லை, மதுரை போன்ற இடங்களுக்கு சென்றுதான் சிகிச்சை பெறும் சூழ்நிலை இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இந்த மர்ம காய்ச்சலில் இருந்து மீள ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டியுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
கடையநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுதான் இந்த காய்ச்சல் பரவுவதற்கு காரணம் என கூறப்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி கடையநல்லூர் பகுதிகளில் சுகாதாரத்தை மேம்படுத்தவும், மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அனைத்து வசதிகளையும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அமைக்கவும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டு மென பொது மக்கள் விரும்புகின்றனர்.