பெங்களூர் : கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் மத்திய கிழக்கில் பயங்கரவாத நாடாக கருதப்படும் இஸ்ரேலின் தூதரகத்தை திறப்பதற்கு அம்மாநில முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த், ஜமாஅத்தே இஸ்லாமி, சுன்னி ஜமாஅத் உள்பட 30 பிரபல முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பான கர்நாடாகா முஸ்லிம் முத்தஹிதா மஹாஸ் இஸ்ரேல் தூதரகத்தை எதிர்த்து நடக்கும் போராட்டத்திற்கு தலைமை வகிக்கிறது.
இதுக்குறித்து முத்தஹிதா மஹாஸ் கன்வீனர் மன்சூர் அப்துல் காதர் கூறியது: ‘ஃபலஸ்தீன் பிரச்சனைக்கு தீர்வு வரும் வரை இஸ்ரேலுடன் ஒத்துழைப்பதை இந்தியா நிறுத்தவேண்டும். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங், ஐ.மு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. தீர்மானத்தில் வாபஸ் பெறாவிட்டால் உ.பி தேர்தலில் பலத்த அடியை காங்கிரஸ் சந்திக்க நேரிடும் என கடிதத்தில் சுட்டி காட்டப்பட்டுள்ளது.
இஸ்ரேலுடனான அண்மைக்கால சமூக-அரசியல்-ராணுவ ஒத்துழைப்பு இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானது. சர்வதேச பயங்கரவாத நாடான இஸ்ரேல் ஃபலஸ்தீன் மக்களுக்கு எதிராக நடத்தும் கொடூரங்களை தொடர்ந்து வருகிறது. அமெரிக்காவின் ஒரு தலைபட்சமான வீட்டோ பதவியின் ஆதரவின் பின்னணியில் ஐக்கியநாடுகள் சபை நடவடிக்கையில் இருந்து இஸ்ரேல் தப்பித்து வருகிறது. நேருவின் காலம் முதல் தொடரும் அணிசேரா கொள்கைக்கு எதிராக செயல்படுவதால் சர்வதேச அளவில் இந்தியா அடையாளத்தை இழந்துவிட்டது.’ இவ்வாறு மன்சூர் அப்துல் காதர் கூறினார்.