கெய்ரோ : இஸ்லாமிய கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைத்துள்ள தேர்தலை தொடர்ந்து எகிப்து பாராளுமன்றத்தின் கீழ்சபையான மக்கள் அவை நேற்று முதன் முறையாக கூடியது.
ஹுஸ்னி முபாரக் பதவியில் இருந்து வெளியேற காரணமான ஜனநாயக போராட்டத்திற்கு பிறகு நடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பாராளுமன்றம் புரட்சியில் கொல்லப்பட்டவர்களுக்கு பிரார்த்தனை புரிந்துவிட்டு நடவடிக்கைகளை துவக்கியது. உறுப்பினர்கள் அனைவரும் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
498 உறுப்பினர்களை கொண்ட அவையில் மூத்த உறுப்பினர் வஃபத் கட்சியின் மஹ்மூத் அல் ஸகா தற்காலிக சபாநாயகராக வீற்றிருந்து பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு தலைமை வகித்தார். புதிய சபாநாயகராக இஃவானுல் முஸ்லிமீனின் அரசியல் கட்சியான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சியின்(எஃப்.ஜெ.பி) உறுப்பினர் ஸஅத் அல் கதாத்னி தேர்ந்தெடுக்கப்பட்டார்.பாராளுமன்றத்தில் மிகப்பெரிய கட்சியான 235 உறுப்பினர்களைக் கொண்ட எஃப்.ஜெ.பி சபாநாயகர் பதவிக்கான போட்டியில் கதாத்னியை முன்மொழிந்தது. சபாநாயகருடன், அரசியல் சாசனத்தை உருவாக்கும் 100 உறுப்பினர்களைக் கொண்ட அவையை தேர்வுச்செய்வதும் கீழ் சபையின் பணியாகும்.
ஜூனில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலுக்கு முன்பாக பாராளுமன்ற குழு தயாரிக்கும் புதிய அரசியல் சாசன சட்டத்திற்கு அங்கீகாரம் பெற மக்கள் விருப்ப வாக்கெடுப்பு நடைபெறும்.