புதுடெல்லி : சீர்திருத்தங்களின் பெயரால் ஜனநாயகத்தின் அடித்தளத்தை அழித்துவிடக் கூடாது என குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் கூறியுள்ளார்.
குடியரசு தினத்தையொட்டி தேச மக்களுக்கு தொலைக்காட்சி மூலமாக குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் உரை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில்: ’63-வது குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாம் சிக்கல் மிக்க, சவால் நிறைந்த கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாடுகள் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் நிலையை உலகமயமாக்கல் ஏற்படுத்தியுள்ளது. எந்தவொரு நாடும் தனித்து நின்று செயல்பட முடியாது.
இந்த நிலையில் நமது கண்ணோட்டமும், நமது இலக்குகளும் தெளிவாகவே உள்ளன. வளர்ச்சி பெற்ற நாடாக நாம் உருவாகிட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டுள்ளோம். நமக்கு பொருளாதார செழிப்பு மட்டுமே இலக்கு அல்ல, சம வாய்ப்பு, சம நீதி உள்ள இந்தியாவை உருவாக்கவே விரும்புகிறோம்.
இதை எப்படி சாதிக்கப் போகிறோம்? காலத்தை வென்ற நமது வாழ்க்கை நெறிகள், நமது சுதந்திரப் போராட்டத்தின் கொள்கைகள், நமது அரசமைப்புச் சட்டம், நமது ஒற்றுமை, ஆக்கப்பூர்வ அணுகுமுறை, வளர்ச்சி பெற வேண்டும் என்ற வேட்கை ஆகியவற்றின் அடிப்படையிலேயே நமது இலக்கை அடையப் போகிறோம்.
நமது பண்பாடு கடமையையும், உரிமையையும் தெளிவாக வரையறுத்துள்ளது. நமது எண்ணங்களிலும், செயல்களிலும் மனித நேயம் மேலோங்கி இருக்க வேண்டும் என்று நமது பண்பாடு இயம்புகிறது.
நல்லிணக்கம், எல்லோரும் இன்புற்றிருக்கவேயன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே, வசுதைவ குடும்பகம் (உலகமே ஒரு குடும்பம்) ஆகியவையே நமது பண்பாட்டின் சாரமாகும். இயற்கையுடன் இணைந்து மனிதன் வாழ வேண்டும் என்பதையே நமது பண்பாடு வலியுறுத்துகிறது. பல்லாயிரம் ஆண்டு கால வரலாற்று, கலாசாரப் பின்னணி உள்ள நாம் அந்த உயர்ந்த குறிக்கோள்களின்படி வாழ வேண்டும்.
சுதந்திரப் போராட்டத்திலிருந்து நாம் ஊக்கம் பெற முடியும். தேச நிர்மாணக் குறிக்கோளை முக்கியப் பணியாக மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தால்தான் நாடு முன்னேறும்.
வறுமை, பசி, சத்துணவின்மை, நோய்கள், கல்வியறிவின்மை ஆகியவற்றை ஒழிப்பதே நமது தலையாய கடமையாக இருக்க வேண்டும். அனைத்து சமூக நலத் திட்டங்களும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட வேண்டும். ஒளிவுமறைவற்ற, ஊழலற்ற சூழலில் அவை செயல்படுத்தப்பட வேண்டும்.
சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் தரமான கல்வி அளிக்கப்பட வேண்டும்.
கிராமப்புறங்களுக்கும் சுகாதாரச் சேவை விரிவுபடுத்தப்பட வேண்டும். மக்களுக்கு குறைந்த செலவில் தரமுள்ள மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம்.
மானாவாரி நிலச் சாகுபடியில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம். ஏனெனில், ஏழை விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களில் பெரும்பாலானோரும் மானாவாரி நிலச் சாகுபடியையே நம்பியுள்ளனர்.
கருவிலேயே பெண் சிசுக்களை அழிப்பது, குழந்தைத் திருமணம், வரதட்சிணை போன்ற பெண்களுக்கு எதிரான கொடுமைகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். இவற்றையெல்லாம் அடைவதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது.
நிதானம், தியாகத்தின் அடிப்படையில்தான் நாடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. இந்தியா போன்ற பெரியதொரு நாட்டில், ஒருமித்த கருத்து மட்டுமே நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும். எனவே, அனைத்துப் பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும்.
ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமே இருக்க முடியாது.
பல்வேறு நலத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அருமையான பல சட்டங்களை நாடாளுமன்றம் இயற்றியுள்ளது. நீதித்துறை மதிப்புமிக்கதாக உள்ளது. எனினும், நமது அரசுசார் அமைப்புகள் குறையில்லாதவையாக உள்ளன எனக் கூறமுடியாது. அதற்காக சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் எனக் கோரி அடிப்படையையே தகர்த்துவிடக் கூடாது.
குறுகிய காலப் பிரச்னைகளுக்காக நீண்ட கால இலக்குகளை மறந்துவிடக்கூடாது.
நமது உறுதியான நெறிமுறைகளின் அடிப்படையில் வலுவான, வளமான இந்தியாவை நாம் ஒன்றுபட்டு உருவாக்குவோம் என்றார் பிரதிபா பாட்டீல்.