திரிபோலி : எதிர்கால லிபியா அரசியல் சட்டத்தின் அடிப்படை இஸ்லாமிய சட்டமாக இருக்கவேண்டும் என கோரி லிபியாவில் பிரம்மாண்ட பேரணிகள் நடைபெற்றன. தலைநகரான திரிபோலி, ஸபா மற்றும் கிழக்கு நகரமான பெங்காசியிலும் பேரணிகள் நடைபெற்றன.
திருக்குர்ஆனை உயர்த்திப் பிடித்தவாறு மக்கள் இப்பேரணிகளில் கலந்துகொண்டதாக எ.எஃப்.பி கூறுகிறது. இஸ்லாத்தை நாட்டின் அதிகாரப்பூர்வ மார்க்கமாக(religion) மாற்ற அரசியல் சாசனத்தில் பிரத்யேக பிரிவை இணைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பெங்காசியில் தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்ட மக்கள் மத்தியில் பிரபல முஸ்லிம் தலைவர் கைதுல் ஃபக்ரி உரை நிகழ்த்தினார். லிபியாவை ஃபெடரல் ஸ்டேட்டாக மாற்றுவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திரிபோலியில் அல்ஜீரியா சதுக்கத்தில் போராட்டம் நடத்தியவர்கள் முன்னாள் அதிபர் முஅம்மர் கத்தாஃபியின் க்ரீன் புத்தகத்தின் நகல்களை எரித்தனர்.
கத்தாஃபி கொல்லப்பட்டு மூன்று தினங்கள் கழிந்த பிறகு நடந்த சுதந்திர பிரகடன நிகழ்ச்சியில் லிபியாவில் தற்காலிக அரசை நடத்தி வரும் தேசிய மாற்றத்திற்கான கவுன்சிலின் தலைவர் முஸ்தஃபா அப்துல் ஜலீல்,ஷரீஅத்(இஸ்லாமிய)சட்டத்தின் அடிப்படையிலான இஸ்லாமிய நாடாக லிபியா திகழும் என அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.