புதுடெல்லி : பீகார் மாநிலம் போர்ப்ஸ் கஞ்சில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஐந்து முஸ்லிம்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய சிறுபான்மை கமிஷனுடன் பீகார் அரசு அறிக்கை போரில் ஈடுபட்டுள்ளது.
போர்ப்ஸ் கஞ்ச் துப்பாக்கிச்சூடு தொடர்பாக தேசிய சிறுபான்மை கமிஷன் தயாரித்த அறிக்கை பீகார் அரசுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய சிறுபான்மை கமிஷனின் அறிக்கையை தொடர்ந்து மத்திய சிறுபான்மை
அமைச்சகம் பீகார் அரசுக்கு கடிதம் எழுதியது. சிறுபான்மை அமைச்சகத்திற்காக கமிஷன் தலைவர் வஜாஹத் ஹபீபுல்லாஹ் தயாராக்கிய கடிதத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அளிப்பது உள்பட ஏராளமான பரிந்துரைகளை தெரிவித்திருந்தார். இக்கடிதம் பீகார் அரசுக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டது. மாநில சிறுபான்மை அமைச்சர் ஷாஹித் அலி கான் இதற்கு கடுமையாக பதில் அளித்துள்ளார். நவம்பர் 28-ஆம் தேதி அவர் அளித்த பதிலில், தவறான புரிந்துணர்வை பரப்ப மத்திய அரசு முயற்சிக்கிறது என குற்றம் சாட்டியுள்ளார்.ராஜஸ்தான் மாநிலத்தில் முஸ்லிம்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூடு குறித்தும் தனது பதில் கடிதத்தில் அலி கான் குறிப்பிட தவறவில்லை.
பீகார் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பர்வீன் அமானுல்லாஹ்வின் தந்தையும் முன்னாள் எம்.பியுமான செய்யத் ஷஹாபுத்தீனின் கடிதத்துடன் வஜாஹத் ஹபீபுல்லாஹ் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். இந்தியாவில் வாழும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தில் போர்ப்ஸ் கஞ்ச் சம்பவம் மோசமான எதிர்விளைவுகளை உருவாக்கும் என ஷஹாபுத்தீன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.