அபுதாபி: தனியார் துறையில் கூடுதல் உள்நாட்டினரை ஈர்க்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அபுதாபியில் பெரிய அளவிலான வேலை வாய்ப்பு விழா3 நாட்கள் நடைபெற இருக்கிறது.
ஜனவரி 31, பிப்ரவரி 1, 2 தேதிகளில் அபுதாபி நேசனல் எக்ஸிபிஷன் சென்டரில் ‘தவ்தீஃப்’ என்ற பெயரில் இவ்விழா நடைபெறுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நிதி மற்றும் வங்கியல் துறைகளில் செயல்படும் நிறுவனங்கள் உள்பட ஏராளமான நிறுவனங்கள் இவ்விழாவில் பல்வேறு வேலைவாய்ப்புக்கான நபர்களை தேர்வுச் செய்கின்றன.
உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்பை நோக்கமாக கொண்டு இவ்வேலை வாய்ப்பு விழா நடத்தப்பட்டாலும் மூன்றாவது நாள்(பிப்ரவரி-2) அனைத்து வெளிநாட்டினருக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு விழாவில் பங்கேற்கும் வங்கிகள் மற்றும் இதர நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் வேலைத் தேடுவோர் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
ஜனவரி 31-ஆம் தேதி காலை 11 முதல் மாலை 7 மணி வரை உள்நாட்டினருக்கு(யு.ஏ.இ) மட்டுமே அனுமதி.
பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 11 முதல் மதியம் 2 மணி வரை உள்நாட்டு(யு.ஏ.இ) பெண்களுக்கு மட்டும்.
மதியம் 2 மணி முதல் மாலை 7 மணி வரை உள்நாட்டு(யு.ஏ.இ) ஆண்களுக்கு மட்டும்.
பிப்ரவரி 2-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து வெளிநாட்டினருக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.
இந்த வேலை வாய்ப்பு விழாவில் பங்கேற்க விரும்புவர்கள் www.tawdheef.ae என்ற இணையதளத்திற்கு சென்று முன்னரே பதிவுச் செய்துக்கொள்ளவும்.
இந்த வேலைவாய்ப்பு விழாவில் பங்கேற்கும் முக்கிய நிறுவனங்கள்: அபுதாபி ஏர்போர்ட்ஸ் கம்பெனி, அபுதாபி கமர்ஸியல் வங்கி, அபுதாபி நேசனல் இன்சூரன்ஸ் கம்பெனி, அபுதாபி நேசனல் ஹோட்டல்ஸ், அபுதாபி போலீஸ், அபுதாபி இன்வெஸ்ட்மெண்ட் அதாரிட்டி, அபுதாபி இஸ்லாமிக் வங்கி, அபுதாபி டூரிஸம் அதாரிட்டி, கமர்ஸியல் பேங்க் ஆஃப் இண்டர்நேசனல், டால்பின் எனர்ஜி, எமிரேட்ஸ் நியூக்ளியர் எனர்ஜி கார்ப்பரேசன், எமிரேட்ஸ் அலுமினியம், எமிரேட்ஸ் ட்ரைவிங் கம்பெனி, இத்திஹாத்(Ethihad), எடிசலாத்(Etisalat),ஃபர்ஸ்ட் கல்ஃப் வங்கி(Firstgulf bank), ஜெனரல் ஹோல்டிங் கார்ப்பரேசன், HSBC வங்கி, முபாதலா, நேசனல் பேங்க் ஆஃப் அபுதாபி, பெட்ரோஃபாக் எமிரேட்ஸ், பிரசிடன்ஸியல் கார்ட், யு.ஏ.இ எக்ஸ்சேஞ்ச், யாஸ் மரினா சர்க்யூட் ஆகியன இவ் வேலைவாய்ப்பு விழாவில் கலந்துக் கொள்வதாக இதுவரை அறிவித்துள்ளன. மேலும் கூடுதல் நிறுவனங்கள் இவ்விழாவில் பங்கேற்கும்.
நிறுவனங்களின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து வேலை தொடர்பாக விசாரிக்கலாம். பயோடேட்டா தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்படும். வேலைவாய்ப்பு விழாவையொட்டி பல்வேறு நிறுவனங்களின் மனித வளத்துறைகள் நடத்தும் செமினார்களில் இலவசமாக கலந்துக் கொள்ளலாம்.
உள்நாட்டினருக்கு(யு.ஏ.இ) மட்டும் தனியாக இண்டர்வியூ அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிகமான உள்நாட்டினருக்கு வேலை வழங்குவோம் என பிரபல வங்கிகள் அறிவித்துள்ளன. எமிரேட்ஸ் என்.பி.டி(ENBD) இவ்வாண்டு குறைந்தது 250 உள்நாட்டினரை பணியில் அமர்த்தும். கடந்த ஆண்டு 462 பேரை நியமித்தது.