காஸ்ஸாசிட்டி:ஃபலஸ்தீன் எதிர்ப்பு போராட்ட இயக்கமான ஹமாஸின் அரசியல் விவகார தலைவரான காலித் மிஷ்அல் முதன் முறையாக காஸ்ஸாவிற்கு செல்லவிருக்கிறார். மிஷ்அல் தனது சுற்றுப்
பயணத்தின்போது ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ், காஸ்ஸாவில் ஹமாஸின் பிரதமர் இஸ்மாயீல் ஹானிய்யா ஆகியோரை சந்திப்பார் என காஸ்ஸா வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அஹ்மத் யூசுஃப் தெரிவித்துள்ளார்.
ஃபலஸ்தீனின் மேற்குகரையில் பிறந்த மிஷ்அல் இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்து 1967-ஆம் ஆண்டு ஃபலஸ்தீனை விட்டு வெளியேறிய பிறகு இதுவரை திரும்பச் செல்லவில்லை.
மஹ்மூத் அப்பாஸின் தலைமையிலான ஃபத்ஹுடன் நல்லிணக்க பேச்சுவார்த்தையை துவக்குவதற்கு முன்பு மிஷ்அல் ஃபலஸ்தீனுக்கு செல்வது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது என அல் அரேபியா தொலைக்காட்சி சேனல் கூறுகிறது.
கடந்த வாரம் மிஷ்அல் கெய்ரோவில் இஃவானுல் முஸ்லிமூன் உள்ளிட்ட இயக்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒத்துழைப்பதை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை தெரிவித்ததாக அஹ்மத் யூசுஃப் கூறுகிறார்.
இதற்கிடையே, 1999-ஆம் ஆண்டு ஜோர்டானில் இருந்து வெளியேற்றப்பட்டு 12 ஆண்டுகளுக்கு பிறகு காலித் மிஷ்அல் அந்நாட்டிற்கு செல்லவிருக்கிறார். கத்தர் இளவரசரும், செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சருமான ஷேக் ஹமத் பின் தமீம் அல்தானி உள்பட பிரமுகர்களுடன் அவர் சந்திப்பை நடத்துகிறார்.
ஜோர்டானுடன் புதிய உறவை பலப்படுத்துவதற்காக இந்த சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது. ஜோர்டான் தலைநகர் அம்மானில் ஹமாஸின் அலுவலகம் திறப்பது உள்ளிட்ட பல்வேறு காரியங்கள் விவாதிக்கப்படும் என ஹமாஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1999-ஆம் ஆண்டு காலித் மிஷ்அல் உள்பட நான்கு ஹமாஸ் தலைவர்களை வெளியேற்றியதைத் தொடர்ந்து ஃபலஸ்தீன் அமைப்பிற்கும் ஜோர்டானுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.