புதுடெல்லி :- டெல்லி ஜாமியா நகரில் வசிக்கும் மக்களை காவல் துறையினர் சட்டவிரோதமாக கைது செய்தல், கடத்துதல் மற்றும் துன்புறுத்தும் செயல்களிலில் ஈடுபடுவதால் அதை எதிர்த்து நூற்றுக்கணக்கான மக்கள் நேற்று ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டெல்லி பொது உரிமை அமைப்பின் செயலாளர் செய்யத் அஹ்லாக் கூறுகையில்; ‘காவல் துறையினர் மக்களின் பாதுகாப்புக்கே அன்றி அவர்களை பயமுறுத்த இல்லை. மக்களை கைது செய்ய நேரிடும் போது, பொது உரிமையை பின்பற்றுவது அவர்களின் தலையாய கடைமை ஆகும். அப்படி உரிமைகளை மீறும் தருணத்தில் உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்களும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 200 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட இந்த எதிர்ப்பு பேரணி ஓஹ்லா காவல்நிலையம், ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைகழகம், ஜாகிர் நகர் வழியாக பட்லா ஹவுஸ் சென்றடைந்தது.
இப்பகுதியில் அன்று மாலை சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தியது அதில் எஸ்.டி.பி.ஐ டெல்லி தலைவர் அப்துர் ரஷீத் அக்வான் அவர்கள் காவல் அதிகாரிகளின் நடவடிக்கையை எதிர்த்து கண்டன உரை நிகழ்த்தினார். உடனடியாக இந்த சட்ட விரோத மற்றும் உரிமை மீறல் செயல்கள் செய்வதை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்ததோடு நீதி வேண்டும் என்று குரல் கொடுத்தார். காவல் துறையினர் தங்களுக்கு அளிக்கப்பட சட்டம், உரிமைகளை மட்டும் கையில் எடுத்து செயலாற்ற வேண்டும், கூடுதல் அல்லது சட்ட விரோத செயல்களை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இச்சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு டெல்லி காவல்துறை ஆணையருக்கு எஸ்டிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் 8 காவல் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவுச்செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். குற்றவாளிகளை கைது செய்வதில் காவல்துறை கட்டாயமாக சட்டத்தையும், உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைகளையும் கடைபிடிக்க வேண்டும், இந்த பாதிக்கப்பட்ட சமூகத்தின் பாதுகாப்பு, உண்மைக்கு கேடு விளைவிக்கும் விதமாக காவல் துறையினர் பாரபட்சமாக செயலாற்றக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டது.