புதுடெல்லி : டெல்லி இஸ்ரேல் தூதரகத்தின் வாகனத்தில் குண்டுவெடித்த சம்பவத்தில் பாப்புலர் ஃப்ரண்டிற்கு தொடர்பிருப்பதாக நியூ சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வந்த அவதூறு செய்தி அடிப்படையற்றதும், கண்டித்தக்கதுமாகும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.ஷெரீஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியிருப்பது: ‘இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகை பாப்புலர் ஃப்ரண்டை குறித்து தவறான புரிதலை ஏற்படுத்துவதும், ஒருதலைபட்சமான செய்திகளை வெளியிடுவதை தொடர்வதும் வருத்தத்திற்குரியதாகும். கற்பனையில் உதித்த இட்டுக்கட்டப்பட்ட தகவல்கள்தாம் அச்செய்தியில் இடம்பெற்றுள்ளது.
இந்தியா-இஸ்ரேல் இடையேயான உறவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியதால் போலீஸ் பாப்புலர் ஃப்ரண்டை பின்தொடர்வதாக அச்செய்தி கூறுகிறது. இத்தகைய தீர்மானங்கள் நிறைவேற்றுவது முதல் தடவை அல்ல. உலகில் சியோனிச அமைப்புகள் தீவிரமாக தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதால் ஏராளமான முஸ்லிம் அல்லாத அமைப்புகளும் இந்தியா-இஸ்ரேல் இடையேயான உறவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.’ இவ்வாறு கே.எம்.ஷெரீஃப் கூறியுள்ளார்.