மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடுத்த பதிப்பின் சோதனைத் தொகுப்பினை, சென்ற பிப்ரவரி 29 அன்று, நுகர்வோர்களுக்கு வெளியிட்டுள்ளது.
வெளியான முதல் நாளே, பத்து லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் இத்தொகுப்பு தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதனைப் பெற விரும்புபவர்கள் http://windows.microsoft.com/ enUS/windows8/download என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
தங்களிடம் உள்ள கம்ப்யூட்டரில் இந்த சோதனைப் பதிப்பினைப் பதிந்து இயக்க முடியுமா என்று அறிந்துகொள்ள விரும்புபவர் களுக்குப் பல இணைய தளங்கள் பதில் அளித்துள்ளன.
அவற்றில் http://www.madawalanews.com/news/technical/1093 என்ற முகவரியில்நாம் தெளிவாகத் தகவல்களை தந்து இருந்தோம்.
சென்ற செப்டம்பரில், இந்த சிஸ்டத்தின் சோதனை பதிப்பு, விண்டோஸ் இயக்கத்திற்கென அப்ளிகேஷன் புரோகிராம்களைத் தயாரிப்பவர்களுக்கென தரப்பட்டது. இருப்பினும், விரும்பும் யார் வேண்டுமானாலும், இறக்கிக் கொள்ளும் வகையில் இந்த பதிப்பு கிடைத்தது.
விண்டோஸ் 8 சிஸ்டம் தரும் புதிய வசதிகள் எவை என இங்கு பார்க்கலாம்.
ஒரு முற்றிலும் புதிய கம்ப்யூட்டிங் அனுபவத்தினைத் தருவதாக விண்டோஸ் 8 இருக்கும் என மைக்ரோசாப்ட் அறிவித்தது போலவே அனைத்தும் புதிய, எதிர்பாராத அனுபவங்களே இந்த சிஸ்டம் மூலம் நமக்குக் கிடைக்கின்றன.
கடந்த இருபது ஆண்டுகளில் விண்டோஸ் சிஸ்டத்தில் நாம் கற்பனையில் கூட பார்க்க இயலாத விஷயங்கள் இப்போது கிடைக்கின்றன.
ஸ்டார்ட் பட்டனுடன் ஸ்கிரீன், வால் பேப்பர், பைல்களுக்கான ஐகான் என இருந்து வரும் டெஸ்க்டாப் முற்றிலும் மாற்றம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதனை மெட்ரோ (Metro) என மைக்ரோசாப்ட் அழைக்கிறது. சிறிய ஓடுகள் அடுக்கி வைக்கப்பட்டது போல தோற்றத்திரை கிடைக்கிறது. இதனை கீ போர்ட், மவுஸ் வழியாக மட்டுமின்றி, தொடுதிரையாகவும் இயக்கலாம்.
இதனால் இந்த இன்டர்பேஸ் வகையை, டெஸ்க்டாப் பெர்சனல் கம்ப்யூட்டர் மட்டுமின்றி, மொபைல் சாதனங்களிலும் பயன்படுத்தலாம். இதுவரை கீ போர்ட், மவுஸ் இயக்கியவர்கள், இனி படிப்படியாக தொடுதிரைக்கு மாறிவிடு வார்கள். ஸ்டார்ட் பட்டனுக்குப் பதிலாக, ஸ்டார்ட் ஸ்கிரீன் கிடைக்கிறது.
இடது கீழாக முன்பு ஸ்டார்ட் பட்டன் இருந்த இடத்தில், மவுஸின் கர்சரைக் கொண்டு சென்றால், சிறிய ஸ்டார்ட் ஸ்கிரீன் பாப் அப் ஆகிறது. அல்லது அந்த இடத்தில் ரைட் கிளிக் செய்தால், ஏற்கனவே நாம் பழகிப் போன Programs and Features, Network Connections, Device Manager, Command Prompt, Task Manager, Control Panel, Windows Explorer, Search, மற்றும் Run ஆகிய பிரிவுகள் கிடைக்கின்றன.
சார்ம்ஸ் பார் (Charms Bar):
விண்டோஸ் 8 இயக்கத்தின் அடிப்படைக் கட்டமைப்பில் ஒன்று சார்ம்ஸ். சிஸ்டம் கமாண்ட்ஸ் மற்றும் செட்டிங்ஸ் அண்ட் சர்ச் (Settings, Search, Devices) என முக்கிய கட்டளைப் பெட்டிகள் இங்கு கிடைக்கின்றன. உங்கள் விரலை அல்லது மவுஸ் கர்சரை, திரையின் மேல் வலது மூலைக்குக் கொண்டு சென்றால், சர்ச் மற்றும் ஷேர் வசதியுடன், மற்ற சாதனங்கள் மற்றும் செட்டிங்ஸ் மேற்கொள்ள வழி கிடைக்கிறது.
இவை உங்கள் அப்ளிகேஷன்களை இணைத்தும் இயக்குகிறது. எடுத்துக்காட்டாக, நீங்கள் இணையத்தில் உலா வந்து கொண்டி ருந்தால், அதில் கிடைக்கும் லிங்க் ஒன்றை உங்கள் நண்பர்களுக்குத் தெரிவிக்க எண்ணினால், இந்த சார்ம்ஸ் மீது தடவினால் போதும். உடனே உங்கள் இமெயில் கிளையண்ட் புரோகிராம் திறக்கப்படும். அல்லது பேஸ்புக், ட்விட்டர் போன்ற புரோகிராம்கள் இயக்கப்படும். வழக்கமான இடது புறம் கீழாக உள்ள ஸ்டார்ட் பட்டன் இல்லை.
செட்டிங்ஸ்:
இதுவரை இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையில் நமக்கு பலவகை யான செட்டிங்ஸ் வழிகள் கிடைக்கின்றன. குறிப்பாக டேப்ளட் பிசிக்களில் கிடைப்பது போல இவை தரப்பட்டுள்ளன
.
கேம்ஸ்:
இரண்டு கேம்ஸ் இணைந்து தரப்படுகின்றன. பின்பால் (Pinball FX 2) மற்றும் சாலிடேர் கிடைக்கின்றன. சாலிடேர் விளையாட்டை திரையைத் தொட்டு விளையாட முடிகிறது. ஆனால் பலரும் விரும்பும் மைன்ஸ்வீப்பர் (Minesweeper) இல்லை.
எக்ஸ்புளோரர்:
பழைய வகை டெஸ்க்டாப் இன்னும் கிடைக்கிறது. குறிப்பாக எக்ஸ்புளோரர் மிக வேகமாக இயங்குகிறது.
எக்ஸ்பாக்ஸ் லைவ்:
சில எக்ஸ்பாக்ஸ் கேம்ஸ், லைவ் ஹப் என நம்மை இழுக்கும் விஷயங்கள் இதில் கிடைக்கின்றன. முழுமையாக வெளியிடப்படுகையில் இன்னும் அதிகமாக இதில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
சீதோஷ்ணநிலை:
அன்றைய சீதோஷ்ண நிலை காட்டும் வசதி, சிஸ்டத்தில் இணைந்து கிடைக்கிறது. சீதோஷ்ண நிலை வரும் நேரத்தில் எப்படி இருக்கும் மற்றும் சீதோஷ்ண நிலைக்கான மேப் ஆகியவையும் அழகாகக் காட்டப்படுகின்றன. இதே போல மேப்ஸ் வசதியும் தரப்பட்டுள்ளது. இதில் இன்னும் முன்னேற்றம் தேவை.
பி.டி.எப். மற்றும் எக்ஸ்.பி.எஸ். பைல்களைக் கையாள, இதனுடன் ஒரு ரீடர் தரப்படுகிறது. சில அடிப்படை வசதிகளை மட்டுமே கொண்டி ருந்தாலும், சிஸ்டத்தில் இணைத்துத் தரப்படுவது குறிப்பிடத்தக்கது.
அப்ளிகேஷன்களுக்கான டைல்ஸ் திரையை ஆக்ரமித்துக் கொண்டிருந்தால், நாம் இயக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களை எங்கு பார்ப்பது? ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன் புரோகிராம் களை இயக்குகிறீர்களா! அவற்றைப் பார்க்க வேண்டுமா? சிலவற்றின் இயக்கத்தினை நிறுத்த வேண்டுமா?
உங்கள் விரலை அல்லது கர்சரை திரையின் இடது மேல் மூலைக்குக் கொண்டு செல்லுங்கள். கிளிக் செய்தவுடன், அப்போது நீங்கள் இயக்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் புரோகிராம் கள் காட்டப்படும். எந்த புரோகிராமினை நிறுத்த வேண்டுமோ, அதனை இழுத்து வந்து கீழாக விட்டுவிட்டால் போதும். நிறுத்தப்படும்.
செமாண்டிக் ஸூம் (Semantic Zoom):
நீங்கள் இயக்கும் புரோகிராம்கள் குறித்து இன்னும் அறிய வேண்டுமா? கண்ட்ரோல் பட்டனை அழுத்திக் கொண்டு, மவுஸ் வீலைச் சுழற்றுங்கள். உங்களுக்கு செமாண்டிக் ஸூம் கிடைக்கும். உங்கள் அனைத்து அப்ளிகேஷன்கள் குறித்தும் ஒரு மேம்போக்கான தோற்றம் கிடைக்கும். இவற்றைக் குழுவாக அமைக்கலாம்; அவற்றின் பெயரை மாற்றலாம்.
உங்களுடைய அப்ளிகேஷன்கள் குறித்த அண்மைக் காலத்திய மாற்றங்கள் குறித்த அறிவிப்புகள் Toast notifications எனத் தரப்படுகின்றன. இதில் கிளிக் செய்தால், நேரடியாக அவற்றிற்குச் செல்லலாம். அல்லது கவனிக்காமல் விட்டுவிட்டால், சிறிது நேரத்தில் தானாகவே மறைந்துவிடும்.
போட்டோ லைப்ரேரி:
போட்டோஸ் அப்ளிகேஷனில் கிளிக் செய்தால், பிரபலமான பேஸ்புக் மற்றும் பிளிக்கர் (Facebook and Flickr) தொடர்பு ஏற்படுகிறது. ஸ்கை ட்ரைவும் இதில் காட்டப்படுகிறது. எங்கு உங்கள் போட்டோக்கள் இருக்கின்றன வோ, அங்கு சென்று தொட்டு தடவி, அல்லது மவுஸ் கிளிக் செய்து, தேவைப்பட்ட மாற்றஙக்ளை மேற்கொள்ளலாம்.
விண்டோஸ் 8 சிஸ்டம் காட்டும் பைல் ட்ரான்ஸ்பர் டயலாக் பாக்ஸ் சிறப்பான மாற்றங்களைக்
கொண்டுள்ளது. பைல் மாற்றப்படும் வேகம், மாற்றுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நேரம் எனக் காட்டுவதோடு, டூப்ளிகேட் பைல்களைக் கண்டறிய சிறப்பான வசதிகளையும் கொண்டுள்ளது.
விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் கிடைக்கும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10, முற்றிலும் புதிய தோற்றம் மற்றும் பயன்பாட்டுடன் உள்ளது. திரையின் முழு இடமும் நம் இணைய தளப் பக்கங்களுக்கே தரப்பட்டுள்ளது. டேப்களும் மற்ற கண்ட்ரோல் ஸ்விட்ச்களும் நமக்குத் தேவைப்படும் போது தலையைக் காட்டிப் பின்னர், பின்னணியில் சென்று விடுகின்றன. பிரவுசரின் இயங்கும் வேகம் இதுவரை இல்லாத அளவில் உள்ளது. புதிய பிரவுசர்களுக்கான தரம் மற்றும் வரையறைகளுடன், எச்.டி.எம்.எல்.5 சப்போர்ட் செய்திடும் வகையில், இது இயங்குகிறது.
கம்ப்யூட்டர் இயக்கத்தில் பிரச்னை ஏற்பட்டு, விண்டோஸ் புதியதாகப் பதிந்து இயக்கப்பட வேண்டும் என்றால், சிஸ்டம் சிடி தேடி அலைய வேண்டியதில்லை. எந்த பைலையும் இழக்காமல், மீண்டும் இன்ஸ்டால் செய்திட, இந்த சிஸ்டத்திலேயே வசதி தரப்பட்டுள்ளது.
இதில் தரப்பட்டிருக்கும் விண்டோஸ் டிபன்டர் (Windows Defender) கெடுதல் விளைவிக்கும் புரோகிராம் எது நுழைந்தாலும், உடனே அதனை அறிந்து நீக்கிடும் வேலையை மேற்கொள்கிறது. நம்மிடம் வேறு ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு இருந்து, நாம் அதனை இயக்கினால், விண்டோஸ் டிபன்டர் பின்னணிக்குச் சென்று அமைதியாக இருந்து விடுகிறது. இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் விண்டோஸ் 8 ஒரு சோதனைப் பதிப்புதான். இறுதி வெளியீட்டிற்கு முன்னர், நிச்சயம் பயன் தரும் மாற்றங்கள் சில இருக்கும்.