சென்னை: எஸ்.டி.பி.ஐயின் துறைமுக தொகுதி தலைவர் அமீர் சுல்தான் 4 மாத சிறைவாசத்திற்கு பிறகு இன்று காலை சரியாக 8:30 மணியளவில் புழல் சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்றார். நூற்றுக்கணக்கான எஸ்.டி.பி.ஐயின் தொண்டர்களின் பிரம்மாண்டமான வாகன அணிவகுப்பு மூலமாக துறைமுகம் வந்தார்.


ஐஸ்ஹவுஸ் பகுதியில் அதிமுகவினர் தாக்கப்பட்ட வழக்கில் அமீர் சுல்தான் ஈடுபட்டார் என அவர் மீது பொய்வழக்கு போட்டு கைது செய்தது காவல்துறை. இதனை எதிர்த்து அமீர் சுல்தான் தரப்பிலிருந்து வழக்கறிஞர் அபூதாஹிர் ஆஜரானார். நேற்றைய தினம் இவ்வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் இதனை பொய்வழக்கு என்று கூறி டிஸ்மிஸ் செய்தனர்.

இதன்பிறகு அமீர் சுல்தானை வரவேற்பதற்காக காலை 7.00 மணிக்கே புழல் சிறைச்சாலை முன்பு எஸ்.டி.பி.ஐயின் தொண்டர்கள் பெருமளவில் திரண்டனர். சரியாக 9.00 மணி அளவில் சிறைச்சாலையில் இருந்து வெளியே வந்த அமீர் சுல்தானை எஸ்.டி.பி.ஐயின் தொண்டர்கள் அவரை கட்டித்தழுவி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். எஸ்.டி.பி.ஐயின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது, வடசென்னை மாவட்ட தலைவர் அமீர் ஹம்ஸா, பொதுச்செயலாளர் அப்துர்ரஷீது, தென் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ஹுஸைன் மற்றும் பலர் அவரை வரவேற்பதற்காக புழல் சிறைக்கு சென்றனர்.
நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனத்தில் வந்த எஸ்.டி.பி.ஐயின் தொண்டர்கள் மிகப்பெரும் ஆரவாரத்துடனும் மகிழ்ச்சியுடனும் அவரை துறை முகம் தொகுதிக்கு அழைத்து வந்தனர். பின்னர் அங்கப்பன் தெரும் அஷ்ரஃப் மஸ்ஜித் அருகே உள்ள கொம்பத்தில் எஸ்.டி.பி.ஐயின் கொடியை ஏற்றிவைத்தார்.
சிறையில் அடைத்துவிட்டால் தமது மக்கள் சேவையிலிருந்து ஒதுங்கிவிடுவார் என தப்புக்கணக்கு போட்ட காவல்துறை இந்த பிரம்மாண்டமான பேரணியை கண்டு கதிகலங்கியுள்ளது. இனி துறைமுகத்தில் இருக்கும் சமூக விரோதிகளுக்கும், மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளும் தங்களது தூக்கத்தை தொலைக்கப்போவது என்னவோ உறுதி.










