கோவை : பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசை கண்டித்து கோவையில் ரயில் மறியல் செய்ய முயன்ற சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியா(எஸ்டிபிஐ) அமைப்பை சேர்ந்த 133 பேர் கைது செய்யப்பட்டனர்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் கேரள அரசை கண்டித்தும், தீர்வு காணாத மத்திய அரசை கண்டித்தும், எஸ்டிபிஐ மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது தலைமையில் கோவையில் ரயில் மறியல் போராட்டம் 26ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதை முன்னிட்டு கோவை ரயில் நிலைய வளாகத்தில் நேற்று மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை 11.30 மணியளவில் எஸ்டிபிஐ தொண்டர்கள் ஏராளமானோர் ரயில் நிலைய வளாகத்தில் குவிந்தனர். போலீஸ் தடுப்புகளையும் மீறி ரயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றஅவர்களை போலீசார் கைது செய்தனர். மாநில பொருளாளர் அம்ஜத் பாஷா, மாநில செயற்குழு உறுப்பினர் அபுதாகீர், கோவை மாவட்ட தலைவர் உம்மர் கத்தாப், வக்கீல் நவுஃபல் உள்ளிட்ட 133 பேர் கைது செய்யப்பட்டனர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் போக்கை கண்டித்து எஸ்டிபிஐ அமைப்பை சேர்ந்தவர்கள் கோவையில் நேற்று ரயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.