நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு


25TH_ELECTION_COMMI_873697f
புதுடெல்லி : உத்தரபிரதேசம் உள்பட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான  தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக புது டெல்லியில் தலைமைத் தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய்.குரேஷி  செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 4-ம் தேதியிலிருந்து 28-ம் தேதி  வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர்  மற்றும் கோவா ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக
நடைபெறுகிறது. பஞ்சாப் மற்றும் உத்தரகண்டில் ஜனவரி 30-ம் தேதியும், மணிப்பூரில் ஜனவரி  28-ம் தேதியும், கோவா சட்டப்பேரவைத் தேர்தல் மார்ச் 3-ம் தேதியும் நடைபெற  உள்ளது.
ஐந்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின் மார்ச் 4-ம்  தேதி வாக்கு எண்ணும் பணி தொடங்கும். தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதை  அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. இது
மத்திய அரசுக்கும் பொருந்தும்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வரலாற்றிலேயே இப்படி 7 கட்டங்களாகத்  தேர்தல் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும்.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.  இவற்றில் 85 தொகுதிகள் ரிசர்வ் தொகுதிகளாகும். இங்கு பிப்ரவரி 4, 8, 11,  15, 19, 23 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
பஞ்சாபில் 34 ரிசர்வ் தொகுதிகள் உள்பட மொத்தம் 117 தொகுதிகள் உள்ளன.  இங்கு தற்போதுள்ள அரசின் பதவிக்காலம் மார்ச் 14-ம் தேதியுடன்  முடிவடைகிறது. உத்தரகண்டில் 15 ரிசர்வ் தொகுதிகள் உள்பட மொத்தம் 70 பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்குள்ள அரசின் பதவிக்காலம் மார்ச் 12-ம்  தேதியுடன் முடிவடைகிறது. இதேபோல மணிப்பூரில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 20 தொகுதிகள் ரிசர்வ் தொகுதி. மணிப்பூர் அரசின் பதவிக்காலம்  மார்ச் 15-ல் முடிவடைகிறது.
கோவா மாநிலத்தில் 40 தொகுதிகள் அடங்கியுள்ளன. இதில் ஒரே ஒரு தொகுதி  ரிசர்வ் தொகுதியாகும். இங்கு தற்போதுள்ள அரசின் பதவிக்காலம் ஜூன் 14-ம்  தேதியுடன் முடிவடைகிறது.
அனைத்து மாநிலங்களிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் தேர்தல்  நடைபெறும். தேர்தலில் வாக்களிக்க புகைப்படத்துடன்  கூடிய அடையாள அட்டைகள்  இருப்பது அவசியம்.
தேர்தல் தொடர்பான புகார்களைப் பதிவு செய்ய 24 மணிநேரமும் செயல்படக்கூடிய  மையம் அமைக்கப்படும். புகார் தெரிவிக்க விரும்புபவர்கள் 1950 என்ற  கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம். அல்லது தேர்தல்  ஆணைய வலைத்தளத்துடன் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.
தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களிலும் 1-1-2012 தேதிப்படி வாக்காளர்  பட்டியல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 2-ம் தேதி இப்பட்டியல்  வெளியிடப்படும். வரைவு வாக்காளர் பட்டியலின்படி உத்தரப்பிரதேச  மாநிலத்தில் 11.19 கோடி வாக்காளர்கள் உள்ளனர். பஞ்சாபில் 1.74 கோடி  வாக்காளர்களும், உத்தரகண்ட் மாநிலத்தில் 57.4 லட்சம் வாக்காளர்களும்,  மணிப்பூரில் 16.77 லட்சம் வாக்காளர்களும், கோவாவில் 10.12 லட்சம்  வாக்காளர்களும் உள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 1,28,112 வாக்குச்சாவடிகள்  அமைக்கப்பட உள்ளன. பஞ்சாபில் 19,724, உத்தரகண்ட் மாநிலத்தில் 9,744,  மணிப்பூரில் 2,325, கோவாவில் 1,612 வாக்குச்  சாவடிகளும் அமைக்கப்படும்.
தேர்தல் அமைதியான முறையிலும், நியாயமான முறையிலும் நடைபெறுவதை உறுதி  செய்ய போதுமான மத்திய, மாநில போலீஸ் படையினர் பாதுகாப்புப் பணியில்  ஈடுபடுத்தப்படுவார்கள்.
தேர்தல் பணிகள் சுமுகமாக நடைபெறவும், தேர்தல் செலவுகளைக் கண்காணிக்கவும்  மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பதற்றமான இடங்களில் கண்காணிப்புப் பணியை மேற்கொள்ள தனியாக மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட  உள்ளனர். தேர்தலில் பணபலத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், போதைப் பொருள்கள் பயன்படுத்துவதைத் தடுக்கவும் அதிகார இயந்திரங்கள்  முடுக்கிவிடப்படும்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கிரிமினல் பின்னணி உள்ளவர்களா,  அவர்களது சொத்து விவரம், கடன் விவரம் என்ன, கல்வித் தகுதி என்ன என்பன  குறித்து தகவல் தெரிவிக்கும் பிரமாணப் பத்திரத்தில் சில நடைமுறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. வழிபாட்டுத்  தலங்களில் தேர்தல் பிரசாரம்  செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றார் குரேஷி.
இந்தப் பேட்டியின்போது மற்ற இரு தேர்தல் ஆணையர்களான வி.எஸ். சம்பத்,  எச்.எஸ்.பிரம்மா ஆகியோரும் உடன் இருந்தனர்.