வரலாற்று பக்கங்கள் இரண்டு நிறங்களை கொண்டதாகும் முதலாவதானது கருப்பு அது அறிவு ஜீவிகளின் பேனா மை இரண்டாவதானது சிகப்பு அது தியாக செம்மல்களின் செங்குருதி இப்படியான இரண்டு மைகளையும் உள்ளடக்கியது தான் முஸ்லிம்களின் கடந்த கால வரலாறு.
முஸ்லிம்கள் எட்டு திக்கிலும் வீறு கொண்டு வெற்றி முரசு கொட்டிய காலத்தை நாம் உற்று நோக்கினால்
நமக்கு புலப்படுவது இஸ்லாமிய அறிவியலின் முதிர்ச்சியும் முஸ்லிம் அறிஞர்களின் அறிவு ஞானமும் தான். அந்த அளவிற்கு மருத்துவம், கணிதம், புவியியல், உயிரியல், வானசாஸ்திரம் என எல்லா துறைகளிலும் முஸ்லிம்களின் ஆதிக்கம் இருந்தது. ஏன் இன்றைய அறிவியலின் அறிவு பெட்டகமாக விளங்கும் ஐரோப்பாவிற்கே அறிவியலை தந்தது முஸ்லிம்கள் தான் என்றால் அது மிகையாகது.பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் தனது ‘உலக சரித்திரம்’ என்னும் நூலில் கூறுகிறார் ஸ்பெயினின் எழுநூறு வருட முஸ்லிம்களின் ஆட்சி ஆச்சரியத்தை பயப்பதாக இருக்கிறது. அதைவிட பெரிய ஆச்சரியம் அரேபியரின் உயர்ந்த நாகரிகமும் கலைப் பண்புமேயாகும். ஐரோப்பா முழுவதும் அறியாமையிலும் போரிலும் மூழ்கிக்கிடந்த போது மேற்கு உலகிற்கே அறிவு, நாகரிகத்தின் ஒளியை பரப்பியது அரேபிய ஸ்பெயின் தான் என்று. அந்த அளவிற்கு அரேபிய ஸ்பெயினுடைய ஆட்சி சிறந்து விளங்கியிருகின்றது.
மேலும் ராபர்ட் பாரிபால்ட் என்னும் ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளர் தனது ‘மேகிங் ஆப் ஹுயுமாநிட்டி’ என்னும் நூலில் கூறுகிறார் அரேபியர்களின் வானவியல் ஒரு கோபர் நிக்கொசையோ அல்லது நியூட்டனையோ உருவாக்கவில்லை என்றாலும் அரேபியர்களின் பங்களிப்பு இல்லாமல் ஒரு கோபர் நிக்கொசோ, நியூட்டனோ உருவாகியிருக்க முடியாது என்று. அந்த அளவிற்கு விஞ்ஞான துறையில் அரேபியர்களுடைய பங்களிப்பு இருந்திருக்கின்றது.
இப்படி மேலோங்கி இருந்த முஸ்லிம் சமூகத்தின் இன்றைய நிலை அறிவியல் மற்றும் விஞ்ஞானத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது. ஆனால் நம் முன்னோர்களிடமிருந்து அறிவியல் கல்வியினை பெற்ற மேற்குலகினர் இன்று அறிவியல் மற்றும் விஞ்ஞானத்தின் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவதை காணமுடிகின்றது. ஆக நம் சமூக முன்னேற்றத்திற்காக நம் முன்னோர்களின் வரலாறுகளையும் அதில் உள்ள படிப்பினைகளையும் ஆய்வு செய்து அதனை நம் வாழ்வினுள் உட்படுத்தினோம் என்றால் நம் சமூகத்தின் கடந்த கால வரலாறு திரும்பும் என்ற சீரிய நோக்கத்துடன் ஒரு மாற்றதிற்க்காகவே இந்தத் தொடர்.
அல் பைதர் (கி.பி 1197-1248)
இவர் ஸ்பெயினின் தலை சிறந்த தாவர ஆராய்ச்சி நிபுணரும், மருந்துகளை தயாரிக்கும் நிபுணரும் ஆவார். இவர் எழுதிய ‘ஜாஹின்-கிதாப் அல் ஹையவான்’ என்னும் நூல் உயிரியல் துறையில் புகழ் பெற்றதாகும்.
இன்றைக்கு பறவைகள் குறித்தான பல்வேறு விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் பறவைகள் குடிபெயர்ந்து வாழ்வதைக் கண்டறிந்து அதனை சுமார் பத்து நூற்றாண்டுகளுக்கு முன்னரே உலகிற்கு அறிவித்த முதல் விஞ்ஞானி இவரே. என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.