புதுடெல்லி : இணையதளங்களில் இருந்து துவேஷ கருத்துக்கள் இடம் பெற்றிருந்தால் அவற்றை நீக்குவதற்கு ஃபேஸ்புக், கூகிள், யாஹு, மைக்ரோஸாஃப்ட் உள்பட 21 சமூக நெட்வர்க்கிங் இணையதளங்களுக்கு டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் பிப்ரவரி 6-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளார்.
யாகூ மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி, நீதிமன்றத்தின் உத்தரவு தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று கூறினர். தங்கள் நிறுவனத்துக்கு எதிரான குற்றச்சாட்டு என்னவென்று தெரியாது என்றும், குற்றச்சாட்டு நகலை வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் கோரினர்.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் முப்தி ஆஜாஸ் அர்ஷத் காஸ்மி சார்பிலான வழக்குரைஞர் சந்தோஷ் பாண்டே, நிறுவனங்களுக்கு இது தொடர்பான குற்றச்சாட்டு நகல், தீர்ப்பு விவரம் ஆகியவற்றை அளிப்பதாகக் கூறினார்.
மத உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் செய்தி, படம் உள்ளிட்டவற்றை நீக்கியது தொடர்பான உத்தரவாதத்தை நீதிமன்றத்துக்கு அளிக்க வேண்டும் என்று கூறினார். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் கடந்த 20-ம்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது சமூக இணையதளங்களில் இடம்பெற்றுள்ள ஆபாச கருத்துகள், புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் ஆகியன நீக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணையதளங்களில் தவறான கருத்துகள் இடம்பெறுவது தொடர்பாக எதிர்ப்பு வலுக்கவே அவற்றை நீக்குவது தொடர்பாக கண்டிப்பான உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டியிருக்கும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்திருந்தார். இதற்கு கடைசி நாளாக டிசம்பர் 20 நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில் நிறுவனங்கள் அரசின் உத்தரவைக் கடைப்பிடிப்பதில்லை என்றும், பல்வேறு ஆபாச புகைப்படங்கள், தவறான கருத்துகள் இடம்பெற்றிருப்பது ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதுத்தொடர்பாக பத்திரிகையாளர் வினய்ராய் மனு தாக்கல் செய்திருந்தார்.
தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், சிடிக்களைப் பார்த்ததில், கடுமையான, அவதூறு செய்திகள் சமூக இணையதளங்களில் இடம்பெற்றிருப்பது தெரியவந்தது. சில கருத்துகள் வன்முறையைத் தூண்டும் வகையிலும் உள்ளன. இத்தகைய சூழலில் எதிர்த்தரப்பு வாதத்தைக் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. ஒருதலைப்பட்சமாகத் தீர்ப்பு அளிப்பதில் எவ்வித தவறும் இல்லை. மேலும் வழக்கின் முகாந்திரத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து இணையதள நிறுவனங்களும் ஆட்சேபகரமான கருத்துகள், புகைப்படங்களை நீக்க வேண்டும். ஒவ்வொரு தனி மனிதருக்கும் மத ரீதியில் சில அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கும். இத்தகைய உணர்வுகளை எவ்வளவு தொகை கொடுத்தாலும் ஈடுகட்ட முடியாது. எனவே இதுபோன்ற கருத்துகள், துவேஷங்கள் ஆகியவற்றை நீக்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.