நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 20 டிசம்பர், 2011

அயோத்தி ராமன் அழுகிறான்





கங்கை காவிரி இணைக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா?
காடுகள் மலைகள் திருத்த வேண்டும்
கர சேவகரே வருவீரா?
வறுமைக் கோட்டை அழிக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா?

மாட்டீர்கள்! சேவகரே மாட்டீர்கள்!
நாம் உடைப்பதற்கே பிறந்தவர்கள்
படைப்பதற்கில்லை
வித்துன்னும் பறவைகள்
விதைப்பதில்லை

விளைந்த கேடு!
வெட்கக் கேடு!
சுதந்திர இந்தியா
ஐம்பதாண்டு உயரத்தில்!
அடிமை இந்தியன்
ஐநூறு ஆண்டு பள்ளத்தில்!

ஏ நாடாளுமன்றமே!
வறுமைக் கோட்டிற்குக் கீழ்
நாற்பது கோடிப் பேர் என்றாய்
அறிவுக் கோட்டின் கீழ்
அறுபது கோடிப் பேர்
அதை மட்டும் ஏன்
அறிவிக்க மறந்தாய்...?

மதம் ஓர் பிரம்மை
மதம் ஓர் அருவம்
அருவத்தோடு என்ன
ஆயுத யுத்தம்
மதம் என்பது ஓர்
வாழ்க்கை முறை, சரி
வன்முறை என்பது
எந்த முறை

கட்டிடத்தின் மீது எப்போது
கடப்பாரை விழுந்ததோ
அப்போதிருந்தே
சரயு நதி
உப்புக் கரித்துக் கொண்டு
ஓடுகிறது..
சீதை சிறைப் பட்டப்பின்
இப்போதுதான் ராமன்
இரண்டாம் முறை அழுகிறான்

மாண்பு மிகு மத வாதிகளே
சில கேள்விகள் கேட்பேன்
செவி தருவீரா

அயோத்தி ராமன்
அவதாரமா மனிதனா?
அயோத்தி ராமன்
அவதாரமெனில்
அவன்
பிறப்புமற்றவன்
இறப்புமற்றவன்
பிறவாதவனுக்கா
பிறப்பிடம் தேடுவீர்?

அயோத்தி ராமன்
மனிதனெனில்
கற்பத்தில் வந்தவன்
கடவுளாகான்
மனித கோவிலுக்கா
மசூதி இடித்தீர்?

போதும்
இந்தியாவில்
யுகம் யுகமாய்
ரத்தம் சிந்தியாயிற்று
இனிமேல்
சிந்தவேண்டியது
வியர்வைதான்
நம் வானத்தை
காலம் காலாமாய்
கழுகுகள் மறைத்தன

போகட்டும்
இனிமேலேனும்
புறாக்கள் பறக்கட்டும்

 (பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த நாளில் இடிந்து போய் எழுதியது என்று கவிப் பேரரசு எழுதிய இந்த கவிதை தமிழுக்கு நிறமுண்டு என்ற நூலில் வெளிவந்துள்ளது..)