ஹைதராபாத்:’த ஹிந்து’ பத்திரிகையின் நேசனல் பீரோ சீஃப் பிரவீன் சுவாமியின் மீது கர்நாடகாவை சார்ந்த முஹம்மது ஜரார் சித்திபாபா அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ள சூழலில் பிரவீன் சுவாமியின் அவதூறு கட்டுரைகளால் பாதிப்பிற்குள்ளான இதர முஸ்லிம் இளைஞர்கள் வழக்கு தொடர தயங்கி வருகின்றனர்.
பிரவீன் சுவாமியின் ஊடக பயங்கரவாதத்திற்கும், ஜோடிக்கப்பட்ட செய்திக் கட்டுரைக்கும் எதிராக 2007-ஆம் ஆண்டு மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி பின்னர் நிரபராதிகள் என கண்டறிந்து நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என விடுதலைச் செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு பிரவீன் சுவாமி வழக்கு தொடர விருப்பம் உள்ளது. ஆனால், ரகசிய புலனாய்வு ஏஜன்சிகள் மீண்டும் தங்களை கொடுமைக்கு ஆளாக்கி விடுவார்களோ என அஞ்சி வழக்கு தொடர பயப்படுகின்றனர்.
மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நிரபராதிகளான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் ஹர்கத்துல் ஜிஹாதி இஸ்லாமி(ஹுஜி) என்ற அமைப்பின் உறுப்பினர்கள் எனவும், மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பிற்கு இவர்கள்தாம் காரணம் எனவும் பிரவீண் சுவாமி‘த ஹிந்து’நாளிதழில் ஏராளமான செய்திக் கட்டுரைகளையும், தலையங்கங்களையும் எழுதியுள்ளார் என இவ்வழக்கில் விடுதலைச் செய்யப்பட்ட டாக்டர்.ஜுனைத் இப்ராஹீம் கூறுகிறார்.
அஜ்மீரிலும், மக்கா மஸ்ஜிதிலும் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது ’இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள்’தாம் என உறுதியாக பிரவீன்சுவாமி எழுதினார். ஆனால், இங்கெல்லாம் அபினவ் பாரத் போன்ற ஹிந்து பயங்கரவாத அமைப்புகள்தாம் குண்டுவெடிப்பை நிகழ்த்தின என்ற உண்மை வெளியானது. மக்கா மஸ்ஜித், அஜ்மீர் ஆகிய இடங்களில் நடந்த தாக்குதலின் பின்னணியில் ஹுஜி இருப்பதாக புலனாய்வு அதிகாரிகளுக்கு துப்பு கிட்டியதாக 2007-ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி ’இஸ்லாமிய பயங்கரவாதத்தின் சவால்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் பிரவீன் சுவாமி குறிப்பிட்டிருந்தார்.
நீதிமன்றத்தை அணுக உத்தேசித்ததாக மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் 17 மாதங்கள் சிறையில் அநியாயமாக அடைக்கப்பட்டிருந்த இன்னொரு நிரபராதியான இம்ரான் கான் கூறுகிறார். ஆனால், ரகசிய புலனாய்வு ஏஜன்சிகளிடமிருந்து தொந்தரவு ஏற்படும் என வழக்கறிஞர் தன்னை தடுத்தார் என இம்ரான் கூறுகிறார்.
’பிரவீண் சுவாமி’யின் பொய் செய்திகளால் எனது வாழ்க்கை தகர்ந்து போனது. ஆயிரக்கணக்கான பிரவீன் சுவாமிகள் ஊடகத்துறையில் ஊடுருவியுள்ளனர். இவர்களுக்கு எதிராக எவ்வாறு வழக்கை பதிவுச்செய்ய இயலும்? ஹைதராபாத்தில் பிசினஸ் டெவலப்மெண்ட் மேலாளராக பணியாற்றும் இம்ரான் கான் அப்பாவித்தனமாக கேள்வி எழுப்புகிறார்.