தஹ்ரீர் சதுக்கம் ஒரு வாரகாலத்தில் முதல் முறையாக அமைதியாக இருந்தது. அதற்கு முந்திய இரவுதான் பொலிஸாரும் படையினரும் கண்ணீர்ப்புகை மூலமும் தடியடிப் பிரயோக மூலமும் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்தனர்.
இராணுவம் அதிகாரத்திலிருந்து விலக வேண்டும் என இவர்கள் கோரிவருகின்றனர். நவம்பரில் முதல் கட்டத் தேர்தல் நடந்து கொண்டிருக்கையில், தஹ்ரீரில் 42 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல இப்போதும் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களால் எகிப்தின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
நிலத்தில் வீழ்ந்த பின்னரும் ஆர்ப்பாட்டக்காரர்களை, பொலிஸார் அடித்துத் தாக்கும் காட்சிகள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
அதேபோல ஒரு பெண்ணை தரையில் போட்டு அவரது உள்ளாடைகள் தெரியும் வண்ணம் அடித்து உதைக்கும் காட்சி எகிப்தில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘‘அது மிகவும் அதிர்ச்சியளித்தது‘‘ என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டன் கூட கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதனால் 2000 பெண்கள் கிளர்ந்தெழுந்து தஹ்ரீர் சதுக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கறுப்பு ஆடைகளை அணிந்திருந்தனர்.
‘‘இதற்குப் பிறகும் மௌனமாக இருக்க முடியாது. இது மிகவும் மோசமான செயல்‘‘ என பெண் ஒருவர் தெரிவித்தார்.
இவர்களை ஆதரித்து ஆண்களும் அதில் இணைந்து கொண்டனர். எகிப்தில் இராணுவத்திற்கும் பொதுமக்களுக்குமிடையிலான முரண்பாடு அதிகரித்த வண்ணமே உள்ளது.