உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் அவர்கள் கூறியதாக நபித்தோழர் அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கிறார்கள் யார் அல்லாஹ்வின் மீதும், மறுமைநாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளாரோ அவர் தன் அண்டைவீட்டாருக்கு நோவினை தரவேண்டாம்.
عن ابى هريرة رضي الله عنه قال قال رسول الله صلي الله عليه و سلم من كان يؤمن بالله و اليوم الآخر فلا يؤذ جاره
இந்த ஹதீஸில் ஒரு முஸ்லின் தன் அண்டைவீட்டருடன் ஏற்படுத்திக்கொள்ளவேண்டிய நிலைகுறித்து பேசுகிறது இது போன்ற இன்னும் சில ஹதீஸ்களும் மிக விரிவாகவே விளக்கியுள்ளது.
பத்ஹுல்பாரி என்ற புஹாரி ஷரீபின் விளக்க உரையில் அதன் ஆசிரியரான இமாம் அஸ்கலானி அவர்கள் இந்த ஹதீஸ் இன்னும் இது போன்ற தொடர் ஹதீஸ் (யார் அல்லாஹ்வின் மீதும், மறுமைநாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளாரோ) என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டுள்ள ஹதீஸ் குறித்து பேசும் போது ஒர் அழகிய செய்தியை பதிவு செய்துள்ளார்கள் :
" அல்லாஹ்வையும், மறுமைநாள் மீதும் நம்பிக்கை கொள்ளுதல் என்பதன் கருத்து முழுமையான ஈமான் கொள்ளுதல் என்பதையே குறிக்கும். ஆனால் இங்கு அல்லாஹ், மறுமைநாள் மட்டும் குறிப்பாக கூறப்பட்டுள்ளது. இதன் கருத்து ஆரம்பமும் (அல்லாஹ்) கடைசியுமான (மறுமைநாள்), அல்லாஹ்தான் ஆரம்பத்தில் மனிதனை படைத்தவன் இன்னும் மறுமையில் இந்த ஹதீஸில் சொல்லப்பட்ட குணநலனுக்கும் தீர்ப்பு வழங்குபவனும் அவனே".
உடன் இருப்பவர்களுக்குதான் ஒரு மனிதனின் உண்மையான குணநலன் விளங்கும் ஆகையால் தான் ஒரு மனிதன் தன் அண்டைவீட்டாரோடு உள்ள உறவுகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது.
அண்டைவீட்டார் முஸ்லிமாக இருப்பினும், அல்லது மாற்று மதத்தை சார்ந்தவராக இருப்பினும் அவர்களுடன் நடந்துகொள்ளவேண்டிய முறையில் ஒரே நிலையையே இஸ்லாம் கடைபிடிக்கிறது.
ஒரு முறை நபிகள் கூறினார்கள் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் என்னிடம் பக்கத்து வீட்டுக்காரரின் கடமைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள் நான் நினைத்தேன், அனந்தர சொத்து(வாரிஸ் உரிமையிலும்) பங்குக்கு அவர்களுக்கும் பங்குதாரராக ஆகிவிடுவார்களோ என்று எண்ணுமளவிற்க்கு.
ஒரு முறை ஒரு நபித்தோழர் நபி அவர்களிடம் வந்து ஒருவர் பக்கத்துவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை என்ன என்று, அருமை நபிகள் இப்படி பதில் சொன்னார்கள்:
1. அவர் உன்னிடம் கடன்கேட்டால் கொடுப்பாயாக
2. அவர் உதவி தேடினால் உதவி செய்வாயாக
3. நோயுற்றால் விசாரிப்பீராக
4. அவருக்கு தேவை ஏற்பட்டால் கொடுப்பாயாக
5. ஏழ்நிலை அடைந்தால் உதவி புரிவீராக.
6. அவர் வீட்டில் நலவு நிகழ்ந்தால் சந்தோசத்தில் பங்கேற்பீராக.
7. சோகம் நிகழ்ந்தல் வருத்ததில் பங்கேற்பீராக.
8. மரணம் நிகழ்ந்தால் அதில் பின் தொடர்ந்து சென்று அதில் முழுமையாக பங்கேற்பீராக.
9.அவருக்கு காற்று தடைபடும் வண்ணம் உன் வீட்டினை உயர்த்தாதே , அவர் அனுமதிதால் பரவாயில்லை.
10. பழங்கள் வாங்கி வந்தால் அவர்களுக்கும் கொடுப்பாயாக
11. அப்படி கொடுக்கிற அளவிற்க்கு வாங்கி வராமல் இருந்தால், உங்கள் குழந்தையிடம் அந்த பழங்களைக்கொடுத்து வெளியில் அனுப்பாமல் இருப்பாயாக. ( அடுத்த வீட்டு குழந்தைகள் பார்த்து ஏக்கம் ஏற்படால் இருப்பதற்க்கு).
பக்கத்துவீடு என்பதைக்கொண்டு வெறும் பக்கத்து வீடு என்பது மட்டுமல்ல, துபாய் போன்ற நாடுகளில் டபுள்காட்டில் தங்கியிருப்பவர்கள் மேல் கட்டிலிருப்பவருக்கும், கீழ் கட்டிலில் இருப்பவருக்கும் இது ரொம்பவே பொருந்தும்.
இன்றய சென்னை போன்ற நகரங்களின் பக்கத்து வீட்டாருடன் எவ்வித உறவும் இல்லாத நிலை, இன்னும் சிலர் பக்கத்து வீட்டர் யார்? என்று தெரியாது என்று சொல்வதையும் அந்தஸ்து என்று நினைக்கிற காலமிது.
இன்று அண்டைநாடுகளிடம் உறவைகளை மேம்படுத்த வேண்டும் என்று பேசுகிற நாடுகள் கூட, அடுத்த நாடுகளை நோக்கியே தங்கள் ஏவுகணைகளை நிறுத்திவைத்திருப்பது வேடிக்கையிலும் உண்மை.
தனிமனித நிலை மாறுபடாதவரை சமூக உறவுகள் மாறாது என்ற அடிப்படையில், ஒரு கட்டுக்கோப்பான சமூகம் கட்டமைக்கப்பட தனிமனித நிலை மாறவேண்டும் என்ற அடிப்படையில் முதலில் பக்கத்து வீட்டார் உறவுகள் பேணப்பட்வேண்டும் என்ற இஸ்லாமிய நாதம் எத்துணை நடைமுறைப்படுத்தவேண்டிய உண்மை என்றும் புரிகிறது.
பக்கத்து வீட்டான் பசித்திருக்க தான் மட்டும் வயிறு நிறைய உண்பவன் நம்மை சார்ந்தவன் அல்ல என்ற நபிமொழியும்,
நிறைவான இபாதத்திருந்தும் பக்கத்து வீட்டாருக்கு நோவினை செய்ததால் நரகம் சென்றவர்களையும், குறைவான இபாதத்திருந்தும் பக்கத்துவீட்டாருடன் நல்ல முறையில் நடந்து கொண்டவர் சுவனம் சென்றதான நபிகளாரின் வாக்கு, நம் வாழ்விற்க்கு பொன்னால் பொறிக்கவேண்டிய வாசகம் அன்றோ......