புதுடெல்லி : ஆட்சேபகரமான தகவல்களை வெளியிட்டதாக ஃபேஸ்புக், கூகுள், யாகூ, யூ டியூப் போன்ற சமூக வலைத் தளங்களுக்கு டெல்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை சம்மன் அனுப்பியது.
வினய் ராய் என்கிற பத்திரிகையாளர் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த டெல்லி மாநகர மாஜிஸ்திரேட் சுதேஷ் குமார், இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து ஜனவரி 13-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.
மனுதாரர் தாக்கல் செய்த ஆவணங்களின்படி, சமூக வலைத் தளங்களில் வெளியாகும் புகைப்படங்கள், காட்சிகள், கட்டுரைகள் போன்றவை ஹிந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் என்கிற பேதமில்லாமல் அனைவரின் மத உணர்வுகளையும் புண்படுத்தும் வகையிலும், அரசியல் தலைவர்களை அவமதிக்கும் வகையிலும் இருக்கின்றன என்று நீதிமன்றம் கூறியது.
இதையடுத்து இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 153 ஏ (வகுப்பினரிடையே பகைமை ஏற்படுத்துவது), 153 – பி (தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிப்பது, 295 ஏ (மத உணர்வுகளைப் புண்படுத்துவது) ஆகிய பிரிவுகளின் கீழ் சமூக வலைத்தள நிறுவனங்கள் குற்றம் புரிந்ததற்கான முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் கூறியது.