சென்னை : கூடங்குளம் அணுமின்நிலையம் எரிமலை உருவாகும் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் குழுவின் அறிக்கை கூறுகிறது. அணுமின்நிலைய எதிர்ப்பு குழுவினருக்காக ஆய்வு நடத்திய 21 உறுப்பினர்களை கொண்ட நிபுணர்கள் குழு கூடங்குளம் பகுதியில் மிதமான எரிமலை பாறைக் கற்களை (சப் வோல்கானிக் ராக்ஸ்) கண்டெடுத்துள்ளனர்.
எரிமலை வெடிப்பின் மூலம் உருவாகும் மேக்மா பின்னர் உறுதியாகி ஸப் வோல்கானிக் ராக்ஸ் (அதாவது மிதமான எரிமலை பாறைக் கற்களாக) ஆகிறது. இத்தகைய பாறைக்கற்கள் அணுமின்நிலையம் அமைந்துள்ள பகுதியில் பெருமளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் பூமியில் வெடிப்பு ஏற்படவும், சிறிய எரிமலை வெடிப்புகள் உருவாகவும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
1990-ஆம் ஆண்டு முதல் 1998-ஆம் ஆண்டுவரை இந்திய அணுசக்தி துறை அணுமின்நிலையத்திற்காக கூடங்குளத்தில் நில பரிசோதனை நடத்தியிருந்தது. அப்பொழுது கண்டுபிடிக்க முடியாத வோல்கானிக் ராக்ஸ் 2004-ஆம் ஆண்டு அணுநிலையத்திற்கு அடித்தளம் அமைக்க தோண்டிய பொழுது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கலாய்ப்பில் ஆழ்ந்த அதிகாரிகள் நிலத்தின் உள்பகுதியில் காங்கிரீட் போட்டு உறுதியாக்கிய பிறகு கட்டிடங்களை கட்டியுள்ளனர். இப்பகுதியில் அணுமின்நிலையம் நிர்மாணித்தது ஆபத்தை உருவாக்கும் என நிபுணர்கள் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டுகிறது.
அணுமின்நிலையம் தொடர்பாக மக்களின் பீதியை அகற்ற மத்திய அரசு நியமித்த நிபுணர்கள் குழுவிடம் இக்காரியம் குறித்து கூறியபொழுது அவர்கள் அங்கீகரிக்கவில்லை என அணுமின்நிலைய எதிர்ப்புக் குழுவின் தலைவரான புஷ்பராயன் கூறுகிறார்.
நில பரிசோதனை அறிக்கை உள்பட அணுமின்நிலையம் தொடர்பான ஆவணங்களை பார்வையிட வேண்டும் என அணுமின்நிலைய எதிர்ப்புக் குழுவினரின் கோரிக்கையை மத்திய நிபுணர்குழு அங்கீகரிக்கவில்லை. இப்பகுதியில் எரிமலை வெடிப்பு உருவாக எவ்வித வாய்ப்பும் இல்லை என்றும், மக்களை பீதிவயப்படுத்துவதற்கான முயற்சி என்றும் மத்திய நிபுணர் குழுவின் தலைவரும், கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோவில் நூருல் இஸ்லாம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான முத்துநாயகம் கூறுகிறார்.