வாஷிங்டன் :-
பூமியை நோக்கி வரும் மற்றொரு செயற்கை கோள் இன்னும் 5 வாரத்தில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1991-ம் ஆண்டு காற்று மண்டல ஆராய்ச்சிக்காகவும், புவியியல் ஆய்வுக்காகவும், அமெரிக்காவில் இருந்து 6 டன் செயற்கைகோள் அனுப்பப்பட்டது. அந்த செயற்கைகோள் 14 ஆண்டு பணி முடிந்ததும் கடந்த 2005-ம் ஆண்டு செயல் இழந்தது.
விண்வெளியில் செயலற்ற நிலையில் இருந்த அந்த செயற்கைகோள் மெல்ல மெல்ல நகர்ந்து பூமியை நெருங்கியது. 200 துண்டுகளாக உடைந்து சிதறிய அதன் 500 கிலோ பகுதி சிதறல் நேற்று கனடாவில் ஓகோடோக்ஸ் என்ற இடத்தில் விழுந்தது. இது பூமியில் விழுந்த போது மிகுந்த சேதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் தற்போது மீண்டும் செயலிழந்த மற்றொரு செயற்கை கோள் பூமியை நோக்கி வருகிறது. அது ஜெர்மனியால் விண்ணில் அனுப்பப்பட்டது. “ரொசாத்” என அழைக்கப் படும் இந்த செயற்கைகோள் கடந்த 1999-ம் ஆண்டிலேயே செயல் இழந்து விட்டது. கடந்த 12 ஆண்டுகளாக இது விண்ணில் இருந்து படிப்படியாக நகர்ந்து பூமியை நோக்கி வருகிறது. 2 முதல் 4 டன் எடையுள்ள அந்த செயற்கைகோள் பூமியை நெருங்கி விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே அது இன்னும் 5 வாரத்தில் பூமியில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூமியை நெருங்கும்போது தூள் தூளாக நொறுங்கி வெப்பத்தில் எரிந்து முழுவதும் சாம்பலாகிவிடும். ஆகவே பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.